லைஃப்ஸ்டைல்
மனம் வருந்துவதா...? மன்னிப்புக் கேட்பதா...?

மனம் வருந்துவதா...? மன்னிப்புக் கேட்பதா...?

Published On 2019-10-17 03:44 GMT   |   Update On 2019-10-17 03:44 GMT
மன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் கடவுள்கூட இல்லை என்பதுதான் உலகம் முழுவதும் தொன்றுதொட்டுவரும் கருத்துரிமை நிலை. ஆனாலும் கருத்துரைப்பதில் நனிநாகரிகம் மிளிர வேண்டும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற மனப்பான்மை இருந்தால்தான் மற்றவரை மதித்து உறவாட முடியும்.

தவறான கருத்துரைத்த ஒருவர், எதிர்ப்புகள் வரும்போது “அதற்காக வருந்துகிறேன்“ “என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்“ என்றெல்லாம் சொல்கின்றனர். வருத்தம் தெரிவிப்பது எங்களுக்குத் தேவையில்லை. மன்னிப்புத்தான் கேட்க வேண்டும் என்று எதிர்த்தரப்பினர் வற்புறுத்துகிறார்கள். மன்னிப்புக் கேட்பதா வருந்துவதா என்றால்... இந்த இரண்டும் ஒன்றுதான் என்பதுபோல் உரை எழுதுகின்றனர் சிலர். இரண்டும் ஒன்றல்ல என்றும் வேறுவேறு என்றும் விரிவுரை எழுதுகின்றனர் சிலர்.

பொதுவாக மன்னிப்புக் கேட்பது என்பது அவமானக்குறியாகக் கருதப்படுகிறது. அதனால்தான் பலரும் மன்னிப்புக் கேட்க விரும்புவதில்லை. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கோரிக்கை வரும்போது, “வருத்தம் தெரிவிக்கிறேன்“ என்று சொல்லி, மீசையில் மண்ணொட்டவில்லை என்று மிகுமகிழ்ச்சி அடைகிறார்கள்.

மன்னிப்பு என்பது கேட்டுப் பெறுவதாக இருக்கக் கூடாது. மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவதும் போராட்டம் நடத்துவதும், தவறு செய்தவர்களைத் திருத்தாது. தங்கள் கால்களில் விழவைத்து அவமானப்படுத்த வேண்டும் என்ற கீழ்மைதான் அதில் ஓங்கி நிற்கும். மன்னிப்புக் கேட்டால்தான் மன்னிப்பேன் என்பது, அதிகாரத் திமிராகவே ஆணவப் போக்காகவே பார்க்கப்படும். தவறு செய்தவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எந்த அருளாளரும் அறிவுறுத்தவில்லை. அப்படியே மன்னிப்புக் கேட்பதாக இருந்தாலும்... அது, தவறுகளை உணர்ந்து, வருந்தி, யாருடைய வற்புறுத்தலுமின்றி நிகழ வேண்டும்.

தவறு செய்தவர்களைத் தாக்க நினைப்பதைவிட... உண்மை எதுவென உணரும் வாய்ப்புகளை, திருந்தும் வாய்ப்புகளை அவர்களுக்குத் தரவேண்டும்.

தவறு செய்தவர்களுக்குத் தண்டனைதான் தரவேண்டும் என்று விடாப்பிடியாக நிற்கிறீர்களா? அவர்களை எப்படித் தண்டிக்க வேண்டும் என்பதை வள்ளுவர் சொல்கிறார். தவறு செய்தவர்களே நாணும் அளவுக்கு அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். பின்னர் அவர்கள் செய்த தீமையையும், தாம் செய்த நன்மையையும் மறந்துவிட வேண்டும். இதுவே தண்டிக்கும் முறையாகும். இதை உணர்த்தும் இனிய குறள் இதுதான். இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்.

பேசிய கருத்திலிருந்து பின்வாங்காமலே வாய்ச்சொற்களால் மன்னிப்பு கேட்டுவிடலாம். அதனால் என்ன மெய்ப்பயன்? வருந்துவது என்பது அதிலிருந்து வேறுபட்டது. மனம் சம்பந்தப்பட்டது. கவிஞர் வாலி எழுதினார்.

தவறு செய்தவன் திருந்தி ஆகணும்
தப்புச் செய்தவன் வருந்தி ஆகணும்.

ஒரு தப்புக்காக மன்னிப்பு கோருவதைவிட, மனம் வருந்துவதுதான் உள்ளார்ந்தது.



மன்னிப்புக் கேட்டால் யாராவது “மன்னித்தேன்” என்று சொல்கிறார்களா? இல்லையே! அப்போது அவர்கள் அகம்பாவமாக வெற்றி மிதப்பில்தான் திளைக்கிறார்கள். தலையை வேறு பக்கம் திருப்பிக்கொள்கிறார்கள். நம் மக்களுக்கு மன்னிக்க தெரியவில்லை. மன்னிக்கத் தெரிந்தவர்கள் மனிதர்களுள் மாணிக்கங்கள்.

வருந்துகிறேன் என்று வாயளவில் சொல்லி, எதிரிகளின் வாயடைக்கும் உத்தியை கையாளவும் வாய்ப்புண்டு. அப்படி இருந்தால் அதுவும் தப்புதான். வருந்துகிறேன் என்பதில் உள்ளபடியே மனம் வருந்த வேண்டும். உதட்டு வார்த்தைகள் ஊரை ஏமாற்ற உதவலாம். உள்ளத்தின் வார்த்தைகள் தாம் உலகையும் உங்களையும் உயர்த்தும்.

மன்னிப்பு கேட்பதால் ஒருவரின் கோபத்தில் இருந்து சற்று மீளலாம். தண்டனையிலிருந்து தப்பலாம். அவரால் காரியம் ஆக வேண்டி இருப்பதாலும் மன்னிப்பு கேட்கக் கூடும். அத்தகைய மன்னிப்பு கோருவதில் ஆதாய நோக்கே இருக்கும். என்னை பொறுத்தவரை மன்னிப்பு கேட்பதைவிட மனம்வருந்துவது சரியானது. உள்ளம் வருந்தினால் தவறோ தப்போ கரையோ களங்கமோ கழுவப்பட்டுவிடும்.

எந்த கருத்துக்கும் எதிர்கருத்து இருப்பது இயற்கையே. நதியின் பாதையை ஒழுங்கமைத்துச் செல்வன அதன் இருகரைகள். அதுபோல்தான் எந்த கருத்துக்கும் இருதரப்புகள் இருக்கும். கருத்தோட்டத்துக்கு மேலும் வலு சேர்ப்பனவாக அவை அமைய வேண்டும். பகை வளர்த்தால் துயரத்தைத்தான் அறுவடை செய்ய முடியும்.

சட்டங்களால் வரையறுக்கப்பட்ட பெருங்குற்றங்கள் குறித்தோ... அவைகுறித்த தண்டனைகள் குறித்தோ எதிர்நிலை இல்லை. அத்தகைய சட்டங்களும் தண்டனைகளும் தேவையே. ஆனாலும் சட்டத்திலும் மன்னிக்கும் பிரிவுகள் உண்டு.

மன்னிப்பது என்பது பிழைசெய்பவர்களின் கையில் இல்லை. வருந்துவதும் திருந்துவதும் மட்டுமே தப்புச் செய்தவர்களை நல்லவர்களாக மாற்றும்.

கோ. மன்றவாணன், வக்கீல் , மாவட்ட நீதிமன்றம், கடலூர்
Tags:    

Similar News