லைஃப்ஸ்டைல்
கவலைகளை கடந்து செல்லும் வழி

கவலைகளை கடந்து செல்லும் வழி

Published On 2019-09-19 03:17 GMT   |   Update On 2019-09-19 03:17 GMT
இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள்.
நான் ஏன் இப்படி செய்தேன்.. இதை ஏன் நான் செய்யாமல் விட்டேன்.. நல்ல சந்தர்ப்பத்தை தவற விட்டு விட்டேனே.. எனக்கு ஏன் இப்படி நடந்தது? நான் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருக்க வேண்டுமோ.. இப்படி சுய அலசலில், சுய பச்சதாபத்தில் தவிக்காதவர்களே இல்லை எனலாம்.

எந்த ஒரு பிரச்சினைக்கும் யாரோ ஒருவர் தான் காரணம் என சுட்டிக் காட்டி, அதனை சரி செய்வது அவர் கையில் தான் இருப்பதாக கருதி உங்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் தவிப்பதை விட, ‘நான் இதில் என்ன தவறு செய்தேன்’ என்று உற்று நோக்குவது பக்குவப் பட்ட நிலை என்பதில் இரண்டு கருத்து இருக்க முடியாது.

ஆனால் அப்படிப் பார்க்கும் போது ஒரு ஆழமான கிணற்றின் வெளிப்புறம் நின்றுகொண்டு, கால் தவறி அதில் விழுந்து மூழ்கி விடாதவாறு கவனமாக அந்த கிணற்றை ஆராய்வது போல் உங்கள் பிரச்சினைகளை உங்களை விட்டும் தூர நிறுத்திப் பார்க்க வேண்டும்.

என்ன தவறு நடந்தது, அதை எப்படி சரி செய்யலாம் என உங்கள் மனதிற்குள் உற்று பார்க்கும் ஒரு தீர்வை நோக்கிய பார்வையாக, சுய அலசலாக அது இருக்க வேண்டுமே தவிர நான் ஏன் இப்படி செய்தேன் என சுயபச்சதாபமாக உங்களை தாழ்வு மனப்பான்மைக்கு இழுத்து செல்லக் கூடியதாக, குற்ற உணர்ச்சியாக அது இருக்கக் கூடாது.

அதாவது, ஏதாவது தவறாக போனால் எந்த செயல் அல்லது சொல் தவறியது என்று பார்க்க வேண்டுமே தவிர அந்த தவறிய மனப்பான்மையில் நீங்கள் திளைத்து விடக் கூடாது. குற்ற உணர்ச்சியில் திளைக்கும் போது உங்களையும் அறியாமல் நீங்கள் உங்கள் பிரச்சினைக்கு தீர்வே இல்லை என உங்கள் மனதை முடிவு செய்ய விட்டு விடுகிறீர்கள். அதனால் உங்கள் மனமும் நடந்ததை விட்டும் வெளியே வராமல் அதனையே சுற்றிச் சுற்றி வருகிறது.

தவறுகள் நடப்பது தவறல்ல. அதை தவறு என புரிந்து, அப்படியே ஏற்றுக் கொண்டு அதை திருத்திக் கொள்ள முயலாமையே தவறு. இந்த விழிப்புணர்வு இருந்தால், அந்த தவறுகளே உங்கள் குறைகளை திருத்தி, அடுத்த பரிணாமத்திற்கு உங்களை எடுத்துச் செல்லும். ஒருவன் தவறே செய்யவில்லை எனில் அவன் எதையுமே புதிதாக முயற்சிக்கவில்லை என்கிறது வாழ்வியல்.

நான் ஏன் இப்படி செய்தேன் என ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் நீங்கள் வருந்தத் தொடங்கினால் தவறே செய்ய சந்தர்ப்பம் இல்லாத மிகப் பழகிய விஷயங்களைத் தவிர வேறு எந்த புதிய செயலையும் செய்ய உங்கள் மனம் உங்களுக்கு ஒத்துழைப்புத் தராது. ஒரு கிணற்றுத் தவளையைப் போல் உங்கள் உலகத்தை அது மிக சிறியதாக மாற்றி விடும். எட்டி நடை போடுபவர்களுக்கே எட்ட உள்ளதும் கிட்ட வரும்.

உண்மையில் எந்த ஒரு எதிர்பாராத எதிர்மறையான சூழலிலும் குற்ற உணர்ச்சி கொண்டு வருந்துவது என்பது உங்கள் கைகளிலேயே இருக்கிறது. உதாரணமாக நீங்கள் வெளியே நடை பயிற்சிக்கு செல்லும்போது திடீரென்று மழை வந்து விடுவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டை விட்டு கிளம்பும்போது மழை வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்திருந்தால் குடையை எடுத்து போகாமல் சென்றிருப்பது மிக இயல்பானது.

இருந்தாலும் பெரும்பாலும் உங்கள் மனம், இன்று நடக்க வராமல் இருந்திருக்கலாமோ, அல்லது ஒரு குடையை கையோடு கொண்டு வந்திருக்கலாமோ என திடீரென வந்த மழைக்கு உங்களை தவறு செய்தவராக, சுட்டிக் காட்டத் துடிக்கும். ‘ஏன் இப்படி கவனம் இல்லாமல் நடந்து கொண்டோம்’ என நீங்கள் சட்டென கடந்து வரக் கூடிய சிறு விஷயத்திற்கும் உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, பல கேள்விகளால் துளைத்து, உங்கள் மனம் உங்களை குற்றம் பிடித்துக் கொண்டே இருக்கும். இப்படி உங்கள் மனம் உங்களையே உங்களிடம் ஒரு தோல்வியாளராக உருமாற்ற இடம் தராதீர்கள்.

பொதுவாக நீங்கள் கடந்து வந்த பாதையில் நீங்கள் விரும்பாத வகையில் நடந்து போன ஒன்றிற்காக, ஏன் இப்படி எனக்கு நடந்தது என உணர்ச்சிகரமாக மீண்டும் மீண்டும் வருந்துவது எந்த பயனையும் தரப் போவதில்லை. மாறாக அது உங்களின் இயலாமையை உங்கள் மனதிற்குள் ஆழமாக பதியச் செய்து விடும். அந்த குற்ற உணர்விலிருந்து உங்கள் மனதை முடிந்த வரை விரைவில் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு மீட்டு வராவிட்டால் உங்கள் நிகழ் காலம் நீங்கள் உணராமலேயே உங்களைக் கடந்து சென்று விடும்.

அதே நேரம், தவறுகளை உணர்ச்சி வசப்படாமல் லாஜிக்கலாக மட்டும் சிந்தித்து மறுமுறை அத்தகைய சந்தர்ப்பங்களில் தவறுகள் நேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற ஒற்றை முடிவை மட்டும் மனதில் பதிய வைத்து விட்டு, இப்போது அந்த சூழ்நிலையில் என்ன செய்யலாம் என்று யோசித்தால் உங்கள் ஆழ்மனமே அதற்கான தெளிவான வழிகளை வகை பிரித்துக் காட்டி விடும்.

ஏனென்றால், ஏன் இதை செய்தோம் அல்லது ஏன் அதைச் செய்யாமல் விட்டோம் என்று குழம்பும் மனதால் எதையும் நிதானமாக சிந்திக்க முடியாது. யாரோ ஒருவர் குறை சொன்னாலே வருந்தக் கூடிய உங்கள் மனம், உங்களை நீங்களே குறை சொல்லும் போது ஒட்டு மொத்தமாக தன்னம் பிக்கை இழந்து விடும்.
உங்களுக்கு தெரியுமா? தொலைநோக்கோடு, தன்னம் பிக்கையோடு, தெளிவான சிந்தனையோடு எங்கே தவறு நடந்தது என்று திரும்பிப் பார்த்தால் குற்ற உணர்ச்சி எழாது.

உண்மையில் எது பிரச்சினையானது எங்கே சருக்கினீர்கள் என அடையாளப்படுத்தும் எண்ணத்தோடு மட்டும் நீங்கள் நடந்தவற்றை திரும்பி அலசிப் பார்த்தால் உங்களால் பிரச்சினை எது என்பதை சரியாக அடையாளப் படுத்த முடியும். அது உங்களை இன்னும் ஸ்ட்ராங்காகவே மாற்றும். அப்படி உங்களால் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகாமல் ஒரு கடந்த கால செயலை அலச முடியாது என்றிருந்தால், அத்தகைய நிகழ்வுகளை உங்கள் நினைவுகளில் இருந்து நீக்கி விட்டு கடந்து செல்லுங்கள் என்பதே வாழ்வியல் கூறும் பால பாடம்.

அதெப்படி மறக்க முடியும் என்று கேட்கும் முன், உங்கள் வாழ்வின் எத்தனை முக்கிய நிகழ்வுகள் பிறரால் பல் வேறு சந்தர்ப்பங்களில் உங்களுக்கு நினைவூட்டப் பட்டிருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு சம்பவமும் அது மனதில் ஏற்படுத்தும் வடுக்களின் ஆழத்தைப் பொறுத்தே ஆழ்மனதில் தேங்குகிறது. மோசமான நிகழ்வுகள் நீண்ட காலம் நினவில் நிற்பதற்கும் அதுவே காரணம். அதே நேரம் உங்கள் வாழ்விற்கு பயனளிக்காது என்று உங்கள் மனம் நினைக்க கூடிய எந்த ஒரு நிகழ்வும் உங்கள் நினைவில் ஓரிரு நாட் களுக்கு மேல் நிலைப்பதில்லை. மனதின் இந்த இயல்பை புரிந்து கொண்டால், உங்களை குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கும் எந்த ஒரு நிகழ்வையும் அது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்குத் தேவை யற்ற ஒன்று என உங்கள் மனதில் பதிய வைத்தால் போதும். அதன் பின் உங்கள் மனமே அந்த நினைவுகளை அதன் பதிவுகளிலிருந்து அழித்து விடும்.

அதை விட்டுவிட்டு எனக்கு நேர்ந்த அவமானத்திற்கு நான் ஏதாவது ஒன்று பதிலுக்கு செய்தே ஆகவேண்டும் என ஏதோ ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து அந்த வருத்தமான எதிர்மறையான சம்பவத்தை, ஒரு பொக்கிஷம் போல் உங்கள் மனதில் மீண்டும் மீண்டும் அசைபோடுவதன் மூலம் பாதுகாத்து வந்தால் அது உங்களது பொன்னான பொழுதுகளையும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் உங்களையும் அறியாமல் உங்களிடமிருந்து சூறையாடி விடும்.

அதனால் இன்றைய நிகழ்காலத்தில் மகிழ்ச்சி தராத ஒன்றை உங்கள் எதிர்காலத்திற்கு மனபாரத்தோடு கடத்தி செல்ல எத்தனிக்காமல் அதை புறக்கணித்து விட்டு கடந்து செல்லுங்கள். உங்கள் வாழ்க்கை இலகுவானதாகவும் நிம்மதியானதாகவும் இருக்கும். இதை புரிந்து கொள்ளும் மனதில் எந்த வருத்தமும் நிலைக்காது. மகிழ்ச்சி திளைக்கும்.

www.facebook.com/fajilaazad.dr
Email:fajila@hotmil.com
Tags:    

Similar News