லைஃப்ஸ்டைல்
வளரிளம் பருவ குழப்பங்கள்

வளரிளம் பருவ குழப்பங்கள்- பெற்றோர் செய்ய வேண்டியது என்ன?

Published On 2019-09-06 06:10 GMT   |   Update On 2019-09-06 06:10 GMT
பதின் பருவத்து பிள்ளைகளை பெற்றோர் ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம்.
பதின் பருவத்து பிள்ளைகளை பெற்றோர் ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமாகப் புரிய வைக்க வேண்டும்.



பதின் வயது என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. அதைத்தான் பெற்றவர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டிருக்கும் காலம் என்று சொல்வதுண்டு. வளரிளம் பருவத்தில் உடலளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும்.

காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும். நண்பர்களின் அழுத்தம் (Peer pressure), திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்த வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் செக்ஸ் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரைப் பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

அந்தக் கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு இலைமறைகாயாகவே நம் சமூகம் கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

கட்டுப்பாடற்ற இணையதள வசதியால் கிடைக்கும் பல காணொலிகள் பாலியலை அறிந்துகொள்ள வைக்கிறது. இது எப்படி இருக்கும் என்ற ஆர்வ மிகுதியாலும், உடன் இருக்கும் சம பாலினத்தவரோடு அல்லது எதிர் பாலினத்தவரோடு தன் பாலியல் தேவைகளை தீர்த்துக்கொள்ள முயலும் செயல் காலப்போக்கில் அவர்களைவிட்டுப் பிரிந்து வாழ முடியாத சூழலையும் ஏற்படுத்தும்.

யாருக்கும் பிரச்னையின்றி சுயஇன்பம் காணும் பழக்கமும் இன்றைய வளரிளம் பருவ பிள்ளைகளை ஆட்கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் இரட்டை அர்த்த வசனங்கள், நடன அசைவுகள், காதல் பாடல்கள், கதாநாயகன், கதாநாயகியின் நெருக்கமான காட்சிகள், வில்லன் வன்புணர்வு செய்யும் காட்சிகள் போன்றவை வளருகின்ற இளம் பதின் பருவத்தினரின் எண்ணத்தில் ஆழ்ந்து பதிந்துவிடுகிறது.

பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததைச் செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமாகப் புரிய வைக்க வேண்டும்.

தவறான உடலுறவு, எச்.ஐ.வி, எய்ட்ஸ் தொற்று, பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வை தகுந்த வயதில் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். அதேபோல மாதவிடாய் ஏற்படுவதற்கான காரணத்தில் மூடநம்பிக்கைகளை வளர்க்காமல் அறிவியல் சார்ந்த கருத்துகளை பதின் பருவத்தினருக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மனநலம் மற்றும் உடல்நலம் சார்ந்த பாலியல் கல்வி குறித்த யூடியூப் காணொலிகளைப் பார்த்துவிட்டு பிள்ளைகளுக்குச் செய்திகளாய் சொல்லுங்கள்.

பிரச்னைகளின் எதார்த்த பாங்கு அவர்களின் வாழ்க்கையை எப்படி கேள்விக்குறியாக்குகிறது என்பதைப் புரிய வையுங்கள்.

பாலியல் சார்ந்து ஆர்வக்கோளாறில் இவர்கள் செய்யும் செயல்களால் நேரடியாகவும், மறைமுகமாகவும் யாரெல்லாம் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனம் திறந்து பேசி அவர்களின் பொறுப்புணர்வை தெரியப்படுத்துங்கள்.

Tags:    

Similar News