லைஃப்ஸ்டைல்
சைபர் குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி?

சைபர் குற்றங்களைத் தவிர்ப்பது எப்படி?

Published On 2019-09-04 02:47 GMT   |   Update On 2019-09-04 02:47 GMT
சைபர் குற்றவலையில் எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்தை முடிந்தவரை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாதவாறு மூடி மறைக்க முயற்சி செய்வார்கள்.
தெலுங்கானா மாநில போலீசார் சமீபத்தில் சென்னை ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்துவரும் பொறியாளர் ஒருவரைக் கைது செய்து மேல்விசாரணைக்காக ஐதராபாத் அழைத்துச் சென்றுள்ளனர். போலியான வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கிய அந்த நபர் படித்த இளம்பெண்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ப கணிசமான சம்பளத்துடன் வேலை வாங்கிக் கொடுக்கப்படும் என்று இணையதளத்தில் வெளியிட்ட கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி தொடர்பு கொண்ட பல மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பெண்களிடமிருந்து ‘வாட்ஸ் அப்’ மூலம் அவர்களது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிறக்கம் செய்து பின்னர் அதை ஆதாரமாகக் கொண்டு அந்த இளம்பெண்களை மிரட்டி பணம் பறித்த குற்றத்திற்காக அந்த ஐ.டி. பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்படி பாதிக்கப்பட்ட இளம்பெண்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சிலரும் உண்டு.

எத்தகைய குற்றத்திற்காக அந்த ஐ.டி பொறியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்? இந்த குற்ற செயலால் பல மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான படித்த இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் போலீசில் புகார் கொடுக்க முன்வராதது ஏன்?

பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பெற்று அவைகளைச் செல்போன், கம்ப்யூட்டர், லேப்டாப் போன்ற தகவல் தொடர்பு கருவிகள் உதவியுடன் பொதுவெளியில் சமூக ஊடகங்கள் மூலம் பரவச் செய்வதும், பரப்பி விடுவதாகக் கூறி மிரட்டுவதும் ‘சைபர் குற்றம்’ ஆகும்.

போட்டிகள் நிறைந்த பரபரப்பான இன்றைய காலகட்டத்தில் படித்து பட்டங்கள் பல பெற்ற இளைஞர்களும், இளம்பெண்களும் திறமைக்கேற்ப நல்ல சம்பளத்துடன் கூடிய வேலையைத் தேடி முயற்சி செய்வதில் தவறு எதுவும் இல்லை. அதேசமயம் இணையதளத்தில் வெளியாகும் கவர்ச்சிகரமான வேலைவாய்ப்பு விளம்பரங்களுக்கு விண்ணப்பிக்கும் போது வரம்பு மீறிய தகவல்களைக் கொடுத்து அவர்களின் வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிக் கொள்கின்றனர். அந்த அடிப்படையில் நிகழ்ந்த இந்த சைபர் குற்றத்தினால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களின் எண்ணிக்கை 600-ஐ தாண்டிவிட்டது என ஐதராபாத் போலீசார் கூறுகின்றனர்.

இம்மாதிரியான சைபர் குற்றங்களால் பாதிப்புக்கு உள்ளானவர்கள் வெளிப்படையாகக் காவல்நிலையம் சென்று புகார் கொடுக்கத் தயங்கும் நிலைதான் இன்றும் இருந்து வருகிறது. தனக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து நியாயம் கேட்டு புகார் கொடுக்கும் செயலே தனது ஒழுக்கத்தைச் சந்தேகக் கண்ணோட்டத்தில் பார்க்கும் சூழலை ஏற்படுத்திவிடுமோ? என்ற அச்சம் பலருக்கு உள்ளது. அதன் காரணமாக புகார் கொடுக்கத் தயங்குவதும் அந்த தயக்கத்தையே சைபர் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொண்டு தொடர்ந்து குற்றங்களில் ஈடுபடுவதின் விளைவுதான் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 600-க்கும் சற்று அதிகமான படித்த இளம் பெண்கள் இந்த சைபர் குற்றத்திற்கு இரையாகக் காரணமாக இருந்துள்ளது.

இம்மாதிரியான சைபர் குற்றவலையில் எதிர்பாராத விதத்தில் சிக்கிக் கொள்ளும் பெண்கள் அவர்களுக்கு இழைக்கப்பட்ட குற்றத்தை முடிந்தவரை அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாதவாறு மூடி மறைக்க முயற்சி செய்வார்கள். இறுதியில் அவர்களின் முயற்சி தோல்வி அடைந்துவிடும். அவர்களுக்கு ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருக்க வேண்டிய குடும்பத்தினரே அவர்களைச் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் சூழலை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுகிறது. சைபர் குற்றம் புரிந்த குற்றவாளியைச் சட்டத்தின் முன் நிறுத்தி அவனுக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதைக் காட்டிலும் தான் குற்றமற்றவள் என்பதை நிருபிக்க வேண்டிய கட்டாய நிலைக்கு அவள் தள்ளப்படுகிறாள். விளைவு சைபர் குற்றவாளிகள் பல சமயங்களில் தப்பிவிடுகிறார்கள்.



சைபர் குற்றங்கள் அதிக அளவில் நிகழக் காரணமாக இருந்து வரும் இன்டர்நெட் இணைப்புடன் கூடிய செல்போன்கள் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரின் கைகளிலும் எப்போதும் இருந்து வருவதைக் காணலாம். ஆன்லைன் வங்கி பரிவர்த்தனை, ஆன்லைன் வர்த்தகம், ஆன்லைன் மூலம் பயணச் சீட்டுகள் பெறுதல், ஆன்லைன் செய்திகள், ஆன்லைன் மருத்துவம் என பல்வேறு வகையில் தினசரி வாழ்க்கையில் இன்டர்நெட் வசதியுடன் கூடிய செல்போன்கள் இரண்டறக் கலந்துவிட்ட இன்றைய நிலையில் அவை ஏற்படுத்திவரும் சமுதாய சீர்கேடுகள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றன.

சமீபத்திய ஆய்வுபடி சராசரியாக ஒவ்வொரு இந்திய குடிமகனும் தினசரி 4 மணி நேரத்தைச் செல்போன் பயன்பாட்டிற்குச் செலவிடுகிறான். அதில் பெரும்பாலான நேரங்கள் பொழுதுபோக்கு அம்சங்களுக்காகச் செலவிடுகிறான் என்றும் அந்த ஆய்வின் முடிவு உணர்த்துகிறது. இத்தகைய செல்போன் கலாசாரம் உணர்த்துவது என்ன?

குடும்பத்தினரிடையே மனம்விட்டு பேசும் பழக்கத்திற்கு முட்டுக்கட்டை போட்டுவிட்டு அந்த நேரத்தைச் செல்போன்கள் அபகரித்துவிட்டன. அதனால் குடும்ப உறவுகள் சிதைந்து வருவதை உணர முடியாத நிலை நிலவி வருகிறது. பஸ் மற்றும் ரெயில் பயணங்களின் போது உடன் பயணிக்கும் பயணிகளுடன் கலகலப்பாகப் பேசி நட்பு வட்டாரத்தை விரிவாக்கிக் கொண்ட கடந்த கால பழக்கங்களுக்கு விடை கொடுத்துவிட்டு ஏதோ ஒன்றைத் தேடுவது போன்று செல்போன்களில் கண்களைப் புதைத்துக்கொண்டு பயணிக்கும் வாழ்க்கை முறைக்கு பெரும்பாலானவர்கள் மாறிவிட்டதையும் காண முடிகிறது. மாறிவரும் இந்த செல்போன் கலாசாரம் மனிதநேயத்தைக் கொஞ்ச கொஞ்சமாக மனிதகுலத்திலிருந்து விரட்டி வருகிறது.

தகவல் பறிமாற்றத்திற்காகக் கண்டுபிடிக்கப்பட்ட இன்டர்நெட் இணைப்புடன் கூடிய செல்போன்கள் அதன் நோக்கத்தைக் கடந்து மனித சமுதாயத்தை மயக்கி சீரிய சிந்தனையுடன் செயலாற்றும் மனிதவளத்தைக் கொள்ளை கொண்டு வருகிறது. சைபர் குற்றங்கள் பெருகவும் துணை புரிந்து வருகிறது.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் மனித சமுதாயத்திற்குப் பெருமளவில் நேரடியாகப் பயன்படுகின்ற இன்டர்நெட் இணைப்புடன் கூடிய தகவல் தொடர்பு சாதனங்களில் ஒன்றான செல்போனைப் புறக்கணித்துவிட்டு ஒரு நொடி பொழுது கூட மனித சமுதாயம் இனி இருக்காது என்ற உச்சத்தைத் தொட்டுவிட்டது.

அதே சமயம் செல்போன் பயன்பாடுகள் குறித்து ஒரு வரையறை செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டு வருகிறது. இதை சட்டத்தால் மட்டும் நடைமுறை படுத்தமுடியாது. செல்போன் பயன்பாடு குறித்த முறையான கல்வி இளம் வயதிலேயே குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட வேண்டும். சிறுவர்களையும், இளைஞர்களையும் தூண்டில் போட்டு இழுக்கும் தேவைற்ற ‘செல்போன் ஆப்ஸ்’ களுக்கு இனி இடமில்லை என்ற நிலை உருவாகவேண்டும். அதற்கு உறுதுணையாகப் பெற்றோர்களும் வர்த்தக நிறுவனங்களும் செயல்படும் நிலை ஏற்பட்டால் சைபர் குற்றங்கள் பெருமளவில் குறைவதோடு மட்டுமின்றி மனித வளமும் வேலைநேரமும் கணிசமான அளவிற்கு அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

பெ.கண்ணப்பன், ஐ.பி.எஸ்., காவல்துறை முன்னாள் தலைவர்.
Tags:    

Similar News