லைஃப்ஸ்டைல்
நம் வெற்றிக்கான எண்ணங்கள்...

நம் வெற்றிக்கான எண்ணங்கள்...

Published On 2019-08-27 03:52 GMT   |   Update On 2019-08-27 03:52 GMT
வாழ்க்கையில் இன்று பலர் அடைந்திருக்கும் முன்னேற்றம் எல்லாம் பல ஆண்டுகளுககு முன்னர் அவர்களின் மனதில் தோன்றிய எண்ணங்களை செயல்படுத்தியதால் பெற்றதே ஆகும்.
நாம் எண்ணுகின்ற எண்ணங்கள் தாம் செயல்களாகின்றன. நாம் எதை எண்ணிச் செயல்படுகிறோமோ அது செயல் வடிவம் பெற்றுத் தோற்றமளிக்கிறது. வாழ்க்கையில் இன்று பலர் அடைந்திருக்கும் முன்னேற்றம் எல்லாம் பல ஆண்டுகளுககு முன்னர் அவர்களின் மனதில் தோன்றிய எண்ணங்களை செயல்படுத்தியதால் பெற்றதே ஆகும். அப்படி வெற்றிபெற எந்தவிதமான எண்ணங்களை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.

1.விருப்பம்

ஒரு மனிதன் சிறப்பாக வாழ வேண்டுமானால் முதலில் சிறப்பானதொரு வாழ்க்கையை நாம் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று அவன் விரும்ப வேண்டும். தீவிரமான விருப்பமே ஒருவனைச் செயல்படத் தூண்டுகிறது. அந்த தூண்டுதலே அவனை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறது.

2.நம்பிக்கை

நம் விருப்பங்களை நாம் அடைய முடியும் என்ற நம்பிக்கை நமது உள்ளத்தில் தோன்ற வேண்டும். நம் மீது நமக்கு நம்பிக்கை தோன்றும் வகையில் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்பிக்கையைப் பெற, நம்பிக்கையை வளர்த்துக்கொள்ள இடைவிடாத முயற்சியும் அவசியமாகும். விருப்பம், நம்பிக்கை, விடாமுயற்சி ஆகியவை ஒன்று சேரும்போது நம் எண்ணங்கள் வடிவம் பெற்றுவிடுகின்றன.

3.அறிவு

நாம் எந்தத்துறையைத் தேர்ந்தெடுக்கிறோமோ அதை முதலில் முடிவு செய்ய வேண்டும். நம் லட்சியத்திற்கும் தேவையில்லாதவற்றை எல்லாம் ஒதுக்கிவிட வேண்டும். உலகம் வெற்றி பெற்றவர்களையே விரும்புகிறது. பயிற்சி, அனுபவம் ஆகியவை சிறப்பு அறிவினை மேம்படுத்தும். நாம் எதை அடையவிரும்புகிறோமோ அதை கற்பனையில் காணவேண்டும்.

4.திட்டம்

நாம் எடுத்துக்கொண்ட லட்சியத்திற்கு எற்ப நம் திட்டம் அமைய வேண்டும். எப்படித் திட்டமிட வேண்டும் என்று சிந்தித்துத் திட்டமிட வேண்டும். திட்டமிடும்போது நம்மிடம் உள்ள குறைகளைக் களைய வேண்டும். வாழ்வில் குறிக்கோள்இன்மை, ஒழுக்கமின்மை, போதிய கல்வி அறிவின்மை, உடல்நலமின்மை, ஆர்வமின்மை, பொறுமையின்மை போன்ற தன்மைகள் தோல்வியை நல்கும் பண்புகளாகும்.

5.முடிவு எடுத்தல்

முடிவு எடுப்பதில் தெளிவும், துணிவும், விரைவும் இருக்க வேண்டும். நாம் எடுத்த முடிவே முடிவானது என்று செயல்படவேண்டும். ஒரு முடிவு எடுத்த பிறகு மனமும், உடலும் அதற்கு கட்டுப்பட்டுச் செயலாற்றும்போது திறன் கூடுகிறது. கவனச்சிதறல் இல்லாமல் செயல்பட முடிகிறது. எடுத்த பணி விரைவில் முடிந்துவிடுகிறது.

6.விடாமுயற்சி

பொதுவாகவே தோல்வி என்பது தற்காலிகமானது என்பதை ஒவ்வொருவரும் உணரவேண்டும். விடாமுயற்சியை வளர்த்துக்கொள்ள சில அடிப்படைக் கருத்துக்களை நாம் பின்பற்றவேண்டும். நாம் எதை அடைய நினைக்கிறோம் என்பதைப் பற்றிய தெளிவான நோக்கம் இருக்க வேண்டும். அதை அடைவதில் தீவிர நாட்டம் கொள்ள வேண்டும். நல்ல பழக்கவழக்கங்களை மேற்கொள்ள வேண்டும். நாம் சாதனைகளை நிகழ்த்த வேண்டுமானால் விடாமுயற்சி, மன உறுதி, தெளிவான லட்சியம் ஆகிய இம்மூன்றும் இருக்க வேண்டும்.
Tags:    

Similar News