லைஃப்ஸ்டைல்

தம்பதியர் சண்டையில் நண்பர்கள் தலையிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2019-03-26 08:42 GMT   |   Update On 2019-03-26 08:42 GMT
கணவன்- மனைவி இடையே ஏற்படும் சண்டையில் நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அவை என்னவென்று பார்க்கலாம்.
மனிதர்களைவிட அவர்கள் பேசும் வார்த்தைகள் வலிமையானதாக இருக்கின்றன. அதனால் பேசிய மனிதர்களை மன்னித்தாலும், அவர்கள் பேசிய வார்த்தைகளை மன்னி்க்க முடியாமல் பலரும் தவிக்கிறார்கள். இப்படி காயப்படுத்தும் வார்த்தைகள் தம்பதிகளிடையே அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அதுவே அவர்கள் பிரிந்துபோகவும் காரணமாக அமைந்துவிடுகிறது.

கருத்துவேறுபாடுகள் இல்லாத குடும்பங்கள் இல்லை. கருத்துவேறுபாடுகளின் தொடக்கம், விவாதம். அந்த விவாதத்தின் மூலம் கருத்துவேறுபாட்டிற்கு முற்றுப்புள்ளிவிழுந்துவிட்டால் அது சாதாரண விஷயமாகிவிடும். அந்த விவாதம், வாக்குவாதமாகிவிட்டால் சாதாரண விஷயங்கள்கூட பிரச்சினையாகிவிடும். தற்போது அதிகரித்து வரும் மணமுறிவுகளுக்கு கணவன்-மனைவி இடையே ஏற்படும் வாக்குவாதங்களே காரணமாக அமைகின்றன.

பொதுவாக தம்பதிகளிடையே ஏற்படும் வாக்குவாதங்கள், இரு வரையும் வேண்டாத வார்த்தைகளை பேசவைத்துவிடுகின்றன. அத்தகைய கடுமையான வார்த்தைகள் தங்களுக்கு எந்த பலனையும் கொடுத்துவிடாது என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் ஆத்திரத்துடன் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்திவிடுகிறார்கள். ஆத்திரம் அறிவை மழுங்கடித்து, அசிங்கமான வார்த்தைகளைக்கூட உதிர்க்கச் செய்துவிடுகின்றன.

‘நாம் வேறு.. அவர் வேறு அல்ல! அப்படியிருக்க நாம் ஏன் தேவையற்ற வார்த்தைகளைப் பேசி ஒருவரை ஒருவர் காயப்படுத்தவேண்டும்!’ என்று கணவரும்- மனைவியும் நினைத்துவிட்டால் அவர் களுக்குள் எழும் விவாதம், வாக்குவாதத்தை நோக்கி செல்லாது. சில தம்பதிகளில் யாராவது ஒருவர் கடுமையான வார்த்தையை பிரயோகித்துவிடும்போது, இன்னொருவர் அதை கேட்டு அதிர்ச்சியடைந்துவிடுகிறார். தானும் அதுபோன்ற வார்த்தைகளை பேசவேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்படுகிறார். கடைசியில் பிரச்சினை முற்றிப்போக அந்த வார்த்தைகள்தான் காரணமாக இருக்கும். ‘பேசியவரை நான் மன்னித்துவிட்டேன். ஆனால் அவர் பேசிய வார்த்தையை என்னால் மன்னிக்க முடியவில்லை’ என்று பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதனால் வார்த்தைகளை நிதானித்து, கவனமாக பேசுங்கள். சில வார்த்தைகள் குண்டுகளைவிட மோசமானது என்பதை நினைவில் வைத்திருங்கள்.

கணவன்- மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படும்போது, நண்பர்கள் என்ற பெயரில் பின்னால் ஒட்டிக்கொண்டிருக்கும் மூன்றாம் நபர்களிடம் விவாதிப்பது இன்று அதிகரித்து வருகிறது. அந்த மூன்றாம் நபர்கள் அனுபவஸ்தர்களாகவோ, பக்குவமானவர்களாகவோ இருப்பதில்லை. ஆலோசனை கேட்பவரின் குடும்ப நிலை என்ன என்பதையும் புரிந்துகொள்வதில்லை. பிரச்சினையின் ஆழத்தை புரிந்துகொள்ளாமலும், தெள்ளத்தெளிவாக தெரிந்துகொள்ளாமலும் ‘ஆலோசனை’ சொல்லும் மூன்றாம் நபர்களால் இன்று பெரும்பாலான தம்பதிகளிடையே புயல் வீசுகிறது.

குடும்பங்களில் பிரச்சினைகள் தோன்றும்போது சிறிது காலம் சும்மா இருந்தாலே அந்த பிரச்சினை ஆறிப்போய், சாதாரணமாகிவிடும். ஆனால் சாதாரண விஷயங்களைக்கூட நண்பர்களிடம் கொண்டுபோய், ஆலோசனை கேட்டு விபரீதமாக்கிவிடுகிறவர்கள் ஏராளம்.

கணவன்- மனைவி இடையே நண்பர்கள் தலையிட்டு விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்று சில இருக்கின்றன. அந்த விஷயங்களில் நண்பர்கள் ஒருபோதும் தலையிடக்கூடாது. அத்தகைய விஷயங்களை கணவன்- மனைவி இருவரும் மட்டுமே விவாதிக்கவேண்டும். அவர்களால் மட்டும்தான் அதற்கு தீர்வு காணமுடியும். இல்லாவிட்டால், அதற்குரிய நிபுணர்களிடம் ஆலோசனையை பெறவேண்டும்.

கணவன்- மனைவி இருவருக்குமான ரகசியங்கள் என்று சில உண்டு. அந்த ரகசியங்கள் நண்பர்களிடம் விவாதிக்கக்கூடியவை அல்ல. அத்தகைய ரகசியத்தில் ஒன்றை, கணவர் தனது நண்பரிடம் கூறி அது மனைவியின் காதுகளுக்கு வந்தால், அதை அவள் தனது சுயமரியாதைக்கு விடப்பட்ட சவாலாக நினைத்துவிடுகிறாள். கணவருக்கு தன்னைவிட அந்த நண்பன் உயர்ந்தவனாகிவிட்டான் என்ற எண்ணம் உருவாகிவிடும். பின்பு அவள் கணவரை பற்றி, தனது தோழிகளிடம் சில ரகசியங்களை சொல்வாள். இப்படி இரு வரும் நடந்துகொள்ளும்போது, குடும்ப அந்தரங்கங்கள் எல்லாம் வீதிக்கு வந்து சந்தி சிரிக்கத்தொடங்கிவிடும். இதனால் கணவன்-மனைவி இருவருமே அவமானத்தை எதிர்கொள்ளவேண்டியதிருக்கும்.

இப்படி கணவனும், மனைவியும் அடுத்தவர்களிடம் விவாதிக்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன தெரியுமா?

- படுக்கை அறை பிரச்சினைகள்.

- தனிப்பட்ட பலகீனங்கள்.

- கணவன் அல்லது மனைவியின் பழைய உறவுத் தொடர்புகள்.

- இரு குடும்பத்தாரின் பிரச்சினைக்குரிய பழைய விஷயங்கள்.

- மற்றவர்களிடம் ஏமாந்த சம்பவங்கள்.

- பிரச்சினைக்குரிய சில நோய்த்தன்மைகள்.

- மற்றவர்களால் அவமரியாதை செய்யப்பட்ட விஷயங்கள்.

இப்படி வௌிப்படுத்தக்கூடாத விஷயங்கள் நிறைய இருக்கின்றன. அவைகளை எக்காரணத்தைக்கொண்டும் கணவனும்- மனைவியும் மூன்றாம் நபர்களிடம் சொல்லக்கூடாது. ஒருவேளை அவர்கள் ஆத்திரத்தில் சொல்லிவிட்டாலும் மூன்றாம் நபர்கள், அவர்கள் குடும்ப நலன்கருதி அதில் தலையிடாமல் இருப்பதுதான் நல்லது. ஏன்என்றால் கணவன்-மனைவி இடையே அது பிரச்சினையை உருவாக்கும்போது அந்த மூன்றாம் நபர் அதற்கு சாட்சியாகவேண்டியதிருக்கும். கணவனும், மனைவியும் பிரியும் சூழ்நிலை ஏற்பட்டால் அந்த மூன்றாம் நபர் குற்றவாளியாகிவிடக்கூடும்.

முந்தைய காலங்களில் பெண்கள் வீட்டுக்குள்ளே புலம்பி, அடைபட்டு கிடந்தார்கள். இன்று அப்படி இல்லை. வெளியே பெண்கள் செல்கிறார்கள். வேலைக்கும் செல்கிறார்கள். செல்லும் இடங்களில் எல்லாம் பலரை சந்திக்கிறார்கள். அதில் சிலரிடம் தன்னை மறந்து, தங்கள் குடும்ப பிரச்சினைகளை சொல்லத் தொடங்கிவிடுகிறார்கள். அது குடும்ப பிரிவுக்கு மட்டுமல்ல, பல்வேறு புதுப்புது பிரச்சினைகளுக்கும் காரணமாகிவிடுகின்றன.

இந்த விஷயத்தில் அறிவியலும் சதி செய்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். முன்பெல்லாம் தெரிந்த ஒரு சிலரிடம் மட்டும் புலம்பியவர்கள், இப்போது சமூக வலைத்தளங்களிலும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். செல்போன்களிலும் நேரங்காலம் தெரியாமல் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். எந்த ஒரு பிரச்சினையாக இருந்தாலும் அது மூன்றாவது நபருக்கு தெரியாமல் இருப்பதுதான் பாதுகாப்பு. மூன்றாம் நபருக்கு தெரியும்போது எப்படி வேண்டுமானாலும் அது உருமாறலாம். மூன்றாவது நபரால் குடும்ப வாழ்க்கையை சீர்குலைத்துக்கொண்டவர்கள் ஏராளம். தற்கொலை செய்துகொண்டவர்களும் அதிகம். அதனால் குற்றச்சாட்டுகளை குறைக்கவேண்டும். விவாதிக்கக்கூடாத விஷயங்களை விவாதிக்காமலே தவிர்க்கவேண்டும். அப்படியே விவாதம் உருவானாலும் அது வாக்குவாதமாக மாறாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். மற்ற அனைத்து உறவுகளைவிடவும் கணவன்- மனைவி இடையேயான உறவு பலமானது என்பதை நிரூபிக்கவேண்டும்.

Tags:    

Similar News