லைஃப்ஸ்டைல்
குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு தரும் நவீன சிகிச்சைமுறை

குழந்தையின்மை பிரச்சினைக்கு தீர்வு தரும் நவீன சிகிச்சைமுறை

Published On 2021-03-11 06:27 GMT   |   Update On 2021-03-11 06:27 GMT
இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.
குழந்தையின்மை குறித்து மகப்பேறு நிபுணர் டாக்டர் மினிகோபால் கூறியதாவது:-

குழந்தையின்மைக்கு 45 சதவீத காரணம் உயிரணு, கருமுட்டை உற்பத்தி தொடர்பான பிரச்சனைகள்தான். இவை எளிதில் சரி செய்யக்கூடியவை ஆகும்.

ஆண் சம்பந்தப்பட்ட கருவூட்டும் திறனின்மை (மலட்டுத் தன்மை) பிரச்சினைகளை சரி செய்ய உதவும் இனவிருத்தி செய்யும் தொழில் நுட்பம் ‘‘இன்ட்ரோ சைட்டோ ப்ளாஸ்மிக் ஸ்பெர்ம் இன்ஜக்சன்’’ ஆகும். சிறப்பான முறையில் உருவாக்கப்பட்ட நுண்ணோக்கியின் உதவியுடன் உயிரணுவை முதிர்ச்சியடைந்த முட்டையினுள் செலுத்தி உடலுக்கு வெளியே கருவுறும் வாய்ப்பை அதிகப்படுத்த ஐ.சி.எஸ்.ஐ. பயன்படுகிறது. சோதனைக்குழாயில் சினையுற்ற முட்டை பின்னர் பெண்ணின் கர்ப்பப்பையினுள் வைக்கப்படுகிறது.

இயற்கையான முறையில் உயிரணுவை எடுக்க முடியாவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் விதைப் பையில் இருந்து எடுக்கப்படுகிறது. உயிரணு குறைவாகவோ அல்லது இல்லாமலோ இருக்கும் ஆண்கள் இந்த ஐ.சி.எஸ்.ஐ. முறையை பின்பற்றும் முன் மரபியல் சோதனை செய்து கொள்ள வேண்டும்.

கருமுட்டை சேகரிக்க வசதியாக கர்ப்பப்பையில் அதிக அளவில் முட்டை உருவாகுதலை தூண்டும் வகையில் தினசரி ஊசிகள் போடப்பட்டு ஸ்கேன் கருவி மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

உயர்திறன் கொண்ட உருப்பெருக்கி (ஐ.சி.எஸ்.ஐ. மைக்ரோஸ்கோப்) உதவியுடன் விசே‌‌ஷமாக வடிவமைக்கப்பட்ட பிப்பெட்டில் இருந்து ஐ.வி.எப். சோதனைக்கூடத்தில் ஒரு உயிரணு ஒரு அண்டத்தினுள் செலுத்தப்படுகிறது. சிறந்த மருந்துகளால் சோதனைக் கூடத்தில் மேம்படுத்தப்பட்ட கருமுட்டைகளில் கருத்தரித்தலுக்கான அறிகுறிகள் உள்ளதா என சோதிக்கப்படுகிறது. வெற்றிகரமாக கருவுற்ற இரண்டு அல்லது மூன்று முட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, கர்ப்பப்பைக்குள் அலட்ரா சவுண்ட் வழிகாட்டுதலுடன் வைக்கப்படுகிறது. கரு இடமாற்றம் நடந்த 14-வது நாள் ரத்த பரிசோதனை மூலம் முடிவை அறிந்து கொள்ளலாம்.

இயற்கையாக கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு அதிகமான கருமுட்டைகளை இடமாற்றம் செய்து வைப்பதால் கருவுறும் வாய்ப்பு, இயற்கையாக கருவுறும் வாய்ப்பைவிட, பல மடங்காகிறது.

இவ்வாறு டாக்டர் மினிகோபால் தெரிவித்தார்.
Tags:    

Similar News