லைஃப்ஸ்டைல்
பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்

பெண்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகள்

Published On 2021-03-08 07:30 GMT   |   Update On 2021-03-08 07:30 GMT
பெண்கள் இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.
பெண்கள் தங்கள் அழகை ஆராதித்தாலும், அத்தகைய அழகுக்காக தங்கள் உடல் எத்தகைய மாற்றங்களை சந்தித்திருக்கிறது? ஒவ்வொரு உறுப்புகளும் வளர்ச்சியை பெற என்ன காரணம்? அந்த வளர்ச்சியால் உடலுக்கு என்ன பலன்? திருமணத்திற்கு பின்பு வாழ்க்கையை ரசித்து அனுபவிக்க பெண்களின் உடல் உறுப்புகள் எப்படி காரணமாக இருக்கின்றன? தாய்மை அடைய அந்த உறுப்புகள் அவளுக்கு எப்படி உதவுகின்றன? என்பதெல்லாம் பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ரகசியங்களாகவும், அதிசயங்களாகவும்தான் இருக்கின்றன.

பெண்களின் உடலில் அதிசயிக்கத்தக்க அளவில் பெரிய மாற்றங்கள் அவர்கள் வயதுக்கு வரும்போதுதான் நிகழ்கிறது. இப்போது பத்துவயதிலே சில சிறுமிகள் வயதுக்கு வந்துவிடுகிறார்கள். ஆனால் அவர்கள் 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சியை பெற்றிருக்கிறார்கள். 10 வயது பெண்ணுக்கு, 20 வயதுக்குரிய உடல் வளர்ச்சி ஏற்படுவது அவளுக்கான பிரச்சினையாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கான பிரச்சினையாகவும் மாறிவிடுகிறது.

இப்போது பெரும்பாலான பெற்றோர்கள் ஒரு குழந்தையே போதும் என்று முடிவு செய்துவிடுகிறார்கள். அந்த ஒரே ஒரு குழந்தையும் பெண்ணாக இருந்தால், அதை செல்லக் குழந்தையாக்கி விரும்பியதை எல்லாம் வாங்கிக்கொடுக்கிறார்கள். ருசிக்காக அளவுக்கு அதிகமான கொழுப்பு அடங்கிய உணவை சிறுமிகள் சாப்பிடும்போது அவர்களது உடல், தேவைக்கு அதிகமான வளர்ச்சியை பெற்றுவிடுகிறது. அப்போது அவர்களது கொழுப்பில் இருந்து ‘லெப்டின்’ என்ற ஹார்மோன் உருவாகும். அதுவே மூளையில் தூண்டுதலை உருவாக்கி, பால்ய வயதிலேயே சிறுமிகள் பருவமடைந்துவிடும் சூழலை உருவாக்குகிறது.

பருவமடைதல் என்பது திடீரென்று உடலுக்குள் நடக்கும் ‘மேஜிக்’ போன்ற நிகழ்வு அல்ல. உடலுக்குள் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் அதற்குரிய வளர்ச்சி மாற்றங்கள் படிப்படியாக நடந்துகொண்டிருக்கும். அவை அத்தனையும் இயற்கையான முறையில் நடந்து முடிந்துவிட்டது என்பதை பருவமடைதல் வெளிப்படையாக உணர்த்துகிறது. பெண்களைப் பொறுத்தவரையில் மார்பக வளர்ச்சி, மறைவிடங்களில் ரோம வளர்ச்சி, இனப்பெருக்க உறுப்புகளின் மேம்பாடு, உடல் உயரமாகுதல், பூசி மெழுகினாற்போன்று அழகு கூடுதல் போன்றவைகள் அவர்கள் வயதுக்கு வரப்போவதை உணர்த்தும் அறிகுறிகளாக அமைகின்றன.

ஒரு சிறுமி வயதுக்கு வந்துவிட்டாள் என்றால், அப்போதே அவளது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சி நிலையை அடைந்துவிட்டன என்று அர்த்தம். அடுத்த ஒன்று அல்லது இரண்டு வருடத்தில் அந்த உறுப்புகள் முழு வளர்ச்சியை எட்டிவிடும். அப்போது அவளது உடலும், எண்ணங்களும் குழப்பத்துடன் காணப்படும். அவளது குழப்பத்தை ஒருசிலர் தவறாக பயன்படுத்திக்கொள்ளக்கூடும். அதனால்தான் 13, 14 வயதிலேயே ஒருசில சிறுமிகள் கர்ப்பிணியாகிவிடும் சமூக அவலமும் நடக்கிறது.

ஒரு சிறுமி எத்தனை வயதாக இருந்தாலும், அவள் உடல் பிரமிக்கவைக்கும் வளர்ச்சியை பெற்றிருந்தாலும், பெற்றோர் மட்டும்தான் அவளை எப்போதும் தங்கள் மகளாகப் பார்ப்பார்கள். ஆனால் சமூகமும் தன் கண்களால் அப்படித்தான் பார்க்கும் என்று பெற்றோர்கள் கருதுவது தவறு. சிறிய வயதிலேயே அதிக உடல் வளர்ச்சியை பெற்றிருக்கும் சிறுமிகளை சமூகத்தின் எல்லா கண்களும் நல்லவிதமாக பார்ப்பதில்லை.

முன்பு 15 வயதுகளில் பெண்கள் பருவமடைந்தார்கள். இப்போது பத்து வயதில்கூட வயதுக்கு வந்துவிடுகிறார்கள். அது அவர்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. சிறுவயதிலே உங்கள் மகள் வயதுக்கு வருவதை தவிர்க்கவேண்டும் என்றால், நாலைந்து வயதில் இருக்கும் உங்கள் மகள்களை இப்போதே கவனித்து வளருங்கள்.

மகள்களுக்கு கண்ட உணவுகளையும் வாங்கிக்கொடுக்கவேண்டாம். சிறுவயதிலே வயதுக்கு வரும் சிறுமிகளில் பெரும்பாலானவர்கள் உயரம் குறைந்தவர்களாக, குட்டையாக, பருத்த உருவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். எதிர்காலத்தில் அவர்களுக்கு பல்வேறு விதமான ஆரோக்கிய பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், குண்டான சிறுமிகளை மைதான வெளி விளையாட்டுகளில் ஈடுபடுத்துங்கள். ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பொருத்தமான உணவுப் பழக்கங்களை கடைப்பிடிக்கச்செய்யுங்கள்.

பொருத்தமான வயதில் பருவமடையும் பெண்களின் உடல் நலமும், மனநலமும் சிறப்பாக இருக்கும். அவர்களது உடலும் கட்டுக்கோப்பான அழகுடன் காணப்படும். திருமணத்திற்கு பிறகு அவர்கள் தாய்மை அடைவதிலும் நெருக்கடிகள் தோன்றாது.
Tags:    

Similar News