பெண்கள் உலகம்
உணர்வுகளை படம் பிடிக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்

உணர்வுகளை படம் பிடிக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்

Published On 2021-02-21 12:46 IST   |   Update On 2021-02-21 12:46:00 IST
தாய்மையில் உணர்வுபூர்வமாக நடக்கும் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.
தாய்மை என்பது பெண்களின் வாழ்வில் மறக்கவே முடியாத நிகழ்வு. தான் கருவுற்றிருப்பதை முதன் முதலாக அறிந்ததும், அடிவயிற்றில் ஒரு பட்டாம்பூச்சி சிறகடித்து பறப்பதை உணரும் அந்த தருணம் முதலே அவள் தாய்மையை ரசிக்க ஆரம்பித்து விடுவாள். கன்னிப்பருவத்தில் இருந்து கல்யாணம் ஆகும் வரை எடையும், இடையும் கூடாமல் தங்களை பார்த்துக்கொள்ளும் பெண்கள், தாய்மை அடைந்ததும் வயிறு பெரிதாவதை கண்டு மகிழ்ச்சியில் பூரிக்கும் மாயம் தாய்மையில் மட்டுமே நிகழும்.

முதல் நாளிலிருந்து முன்னூறு நாள் வரை தனக்குள் நடக்கும் மாற்றங்களை மகிழ்ச்சியும் பயமும் கலந்த உணர்வோடு அனுபவிப்பாள். தன் கருவை சுமக்கும் துணையையும், பிறக்கப்போகும் மழலையையும் நெஞ்சில் சுமந்து கொண்டிருக்கும் தந்தை ஆயிரம் எதிர்ப்பார்ப்புகளோடு காத்திருப்பார். இப்படி உணர்வுபூர்வமாக நடக்கும் இந்த பயணத்தின் நினைவுகளை தங்கள் வாழ்நாள் முழுவதும் நினைத்து ரசிப்பதற்கும், பொக்கிஷமாக பாதுகாப்பதற்கும் தான் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எனும் பெயரில் தற்போது புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் பதிவு செய்து கொள்கிறார்கள்.

அந்த காலத்தில் கருவுற்ற பெண்ணை அடுத்தவர் பார்வைக்கு கூட வரவிடமாட்டடார்கள். பிறந்த குழந்தைகளை ஒரு வயது நிரம்பும் வரை புகைப்படம் எடுக்க விடமாட்டார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை. தங்கள் வாழ்வில் நடக்கும் இனிய நிகழ்வுகளை பதிவு செய்து வாழ்நாள் முழுவதும் ரசிக்க நினைப்பவர்கள் அதிகம். கர்ப்பகாலத்தின் ஏழாவது மாதம் முதல் வயிறு நன்றாக தெரியும் என்பதால் அப்போதிலிருந்து மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் எடுக்க தொடங்குவார்கள்.

ஒரு சிலர் குழந்தை பிறந்து தவழ்வது நடப்பது வரையுமே பதிவு செய்வார்கள். இதற்காகவே இப்போது நிறைய புகைப்பபடக்கலைஞர்கள் உள்ளனர். சாதாரணமாக வீட்டில் எடுப்பது அல்லது வெளியிடங்ளை தேர்வு செய்து எடுப்பது என்று தங்கள் வாடிக்கையாளரின் விருப்பத்துக்கேற்ப அற்புதமாக படம் பிடித்து கொடுக்கிறார்கள்.

மெட்டர்னிட்டி போட்டோ ஷூட்டில் கர்ப்பமாக இருக்கும் பெண்களோடு அவரின் கணவர், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரும்  இடம் பெறுவார்கள். பிரபலங்கள், திரைப்பட நடிகைகள் மட்டுமே எடுத்துவந்த இத்தகைய புகைப்படங்களை தற்போது அனைத்து தரப்பு மக்களும் எடுத்துக்கொள்கிறார்கள், வாடிக்கையாளரின் விருப்பதை பொறுத்து இடம், அணியும் உடை அனைத்தும் தேர்வு செய்யப்படுகின்றன.

பெரும்பான்மையான தம்பதிகள் இயற்கையான சூழ்நிலையில் படம் பிடிப்பதையே விரும்புகின்றனர். அதிகமாக செலவு செய்து அரங்குகள் அமைத்து பிரமாண்டமாக பதிவு செய்து கொள்பவர்களும் இருக்கின்றனர். இயற்கையான சூழலில் எடுக்கும் மெட்டர்னிட்டி போட்டோ ஷூட் மிகவும் அருமையாக பதிவாகும். கர்ப்பணி பெண் மற்றும் கணவரின் உணர்வுகளை அருமையாக பதிவு செய்து கொடுப்பது இதில் சிறப்பு.

Similar News