50 வயதை கடந்த பெண்கள் மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்ளும்போது பல்வேறு இன்னல்களுக்கு ஆளாவார்கள். அவர்கள் பசுமையான சூழலில் வாழ்ந்தால், ‘மெனோபாஸ்’ இன்னல்கள் குறையும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
‘‘மன அழுத்தம் காரணமாக ரத்தத்தில் கார்டிசால் ஹார்மோனின் அளவு அதிகரிக்கும். பசுமையான இடங்களுக்கு செல்லும்போது அதன் அளவு கட்டுப்படும் என்பதை ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. பசுமையான பகுதியில் வசிக்கும் பெண்களுக்கும் கார்டிசால் அளவு கட்டுப்படுகிறது. அதன் தாக்கம் மாதவிடாய் சுழற்சியில் வெளிப்படுகிறது.
மேலும் பசுமையான சுற்றுப்புறத்தில் வசிக்கும் பெண்களுக்கு வயோதிகம் தள்ளிப்போகும். அதன் காரணமாக அவர்களுக்கு மெனோபாஸ் நெருக்கடிகள் குறையும். இயற்கை சூழலில் அமர்ந்து நேரத்தை செலவிடும்போது மன அழுத்தம், மன சோர்வு போன்றவைகளும் குறையும்’’ என்கிறார், ஸ்பெயினை சேர்ந்த மூத்த ஆராய்ச்சியாளர், ஹை டிரிப்னர்.
இந்த ஆய்வுக்கு ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 2 ஆயிரம் பெண்கள் உட்படுத்தப்பட்டனர். தூய்மையான மற்றும் பசுமையான சூழலில் வாழும் பெண்கள் மற்ற பெண்களை காட்டிலும் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் கழித்த பிறகே மாதவிடாய் நிறுத்தத்தை எதிர்கொள்கிறார்கள் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.