லைஃப்ஸ்டைல்
நவீன வாழ்க்கைமுறையால் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை

நவீன வாழ்க்கைமுறையால் அதிகரிக்கும் மலட்டுத்தன்மை

Published On 2021-02-04 06:19 GMT   |   Update On 2021-02-04 06:19 GMT
இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறை. நவீன வாழ்க்கை எந்த அளவுக்கு வாழ்க்கை சூழலை எளிதாக்கி இருக்கிறதோ அதற்கு எதிர்மறை விளைவையும் தந்துள்ளது.
இன்றைய சூழலில், அதிகரித்து வரும் குழந்தையின்மை பிரச்சினைக்கு முக்கிய காரணமாக இருப்பது நவீன வாழ்க்கை முறை. நவீன வாழ்க்கை எந்த அளவுக்கு வாழ்க்கை சூழலை எளிதாக்கி இருக்கிறதோ அதற்கு எதிர்மறை விளைவையும் தந்துள்ளது.

நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறை இன்று இல்லை. பொருளாதார தேவைக்காக ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். முறையற்ற உறக்கத்தால் இயல்பான உடலுறவு குறைய வாய்ப்புள்ளது. வெளிநாடு வேலையால் சிலர் பிரிந்து இருப்பதால், ஆண்டுக்கு ஒரிரு மாதங்கள் மட்டுமே சேர்ந்திருக்கின்றனர். இதனால் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு மனஅழுத்தத்துக்கு ஆளாகின்றனர். குறிப்பாக மென்பொருள் பொறியாளர், விற்பனை பிரதிநிதிகளாக இருக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது. இதனாலேயே குழந்தை பெறும் தன்மை குறைந்து வருகிறது.

அதேபோல் உணவு பழக்கமும் மாறி வருகிறது. பருவ மாற்றங்களுக்கு ஏற்றவாறு இருந்த உணவுமுறை இப்போது இல்லை. துரித உணவுகள், பதப்படுத்தபட்ட ரசாயனம் கலந்த உணவுகள், ரெடிமேட் மசாலா, ரெடிமேட் உணவு வகைகள், குளிர்பானங்கள் இன்று வழக்கத்திற்கு வந்துவிட்டது. இவற்றில் சேர்க்கப்படும் ரசாயனங்களால் குடல்புண், குடல் அழற்சி, குடல் புற்று நோய், உடல்பருமன், மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. வாகன புகை, கழிவால் சுற்றுச்சூழல் மாசு அதிகரித்து நமது உடலுக்கு ஊறு விளைவித்து பல நோய்கள் வருவதற்கு அடித்தளமாகிறது. இந்த சுற்றுச்சூழல் மாசால் ஆண்களுக்கு உணர்ச்சிகள் குறைவது மட்டுமின்றி மலட்டுத்தன்மையும் அதிகமாகியுள்ளது.

முறையான உடற்பயிற்சி பெண்களுக்கு இல்லை. மாவு ஆட்ட, அரைக்க எந்திரம் வந்துவிட்டது. இதனால் உடற்பருமன் உருவாகி எடையை குறைக்க உடற்பயிற்சிகூடத்துக்கு செல்கின்றனர். எடை அதிகரிப்பும் பெண்களுக்கு கருத்தரித்தலில் தேக்க நிலை ஏற்படுகிறது. ஆகவே முறையான எளிய உடற்பயிற்சி இருபாலருக்கும் வேண்டும். பெண்களுக்கு திருமண வயது 30-யைகடக்கும் போது, மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். அதுபோல் ஆண்களும் புகை, மது, போதை பழக்கத்தால் ஆண்மைக்குறைவு, விந்தணு உற்பத்தி பாதிப்பு ஏற்படுகிறது. மேலும், அதிக கதிர்வீச்சுள்ள தளங்களில் வேலை செய்பவர்கள், லேப்டாப், கணினி போன்றவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் விந்தணு உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது.

இன்றைய அறிவியல் வளர்ச்சி எந்த வயதிலும் குழந்தைபேறு வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக்கொள்வது நம் கையில் உள்ளது. அமைதியான வாழ்க்கைமுறை, இயற்கை உணவுமுறை மற்றும் சீரான உடற்பயிற்சி இருந்தால் குழந்தையில்லா தம்பதியினருக்கு மழலை எனும் மகத்தான செல்வம் கிடைக்கும்.

டாக்டர் டி.செந்தாமரை செல்வி எம்.பி.பி.எஸ்.,டி.ஜி.ஓ., ஏ.ஆர்.டி., பாலாஜி கருத்தரித்தல் மையம், பழனி.
Tags:    

Similar News