பெண்கள் உலகம்

டீன்ஏஜ் பெண்களுக்கு எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுகின்றன?

Published On 2022-07-06 05:01 GMT   |   Update On 2022-07-06 05:01 GMT
  • இந்த வயதில்தான் இனக் கவர்ச்சியை காதல் என்று தப்பாக புரிந்துகொள்கிறார்கள்.
  • டீன்ஏஜினருக்கு தங்கள் உடல் அமைப்பை பற்றிய புரிதல் இல்லை.
  • டீன்ஏஜ் பிள்ளைகளை பெற்றோர் கவனமாக கையாளவேண்டும்.

உடலை ஒரு பூஞ்செடியாக உருவகப்படுத்தினால் அதில் மொட்டுகள் உதயமாகும் பருவத்தை டீன்ஏஜ் என்று எடுத்துக்கொள்ளலாம். டீன்ஏஜ் பருவத்தில் அவர்களது ஒவ்வொரு சலனமும் இரட்டிப்பு வேகம் கொண்டதாக இருக்கும். கலர்கலரான கனவுகள் அவர்கள் இதயத்தில் பூக்கும். அவர்களிடம் மலரும் சின்ன புன்னகைக்குள் நூறு ரக சியங்கள் புதைந்துகிடக்கும். அருவியில் ஒழுகும் நீர் போன்று அப்போது அவர்கள் மனதில் பாலியல் சிந்தனைகள் உருவாகி, பாய்ந்தோடிக்கொண்டிருக்கும்.

பல வழிகளில் ஒழுகிவரும் இந்த அருவிகள்தான் பிற்காலத்தில் (வாழ்க்கை என்ற) நதியாக மாறுகிறது. ஏராளமான ஆபத்துக்களும், ஏமாற்றங்களும் இதன் பயணப் பாதையில் ஒளிந்திருக்கிறது என்பதை டீன்ஏஜினர் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.

டீன்ஏஜின் அவசரத்திலும், ஆவேசத்திலும் நடந்துவிடும் தவறுகள் பின்பு காலம் முழுக்க கண்ணீர் விடும் சூழ்நிலையை உருவாக்கிவிடுவதுண்டு. ஒவ்வொரு நாட்களும் வெவ்வேறு விதமான சவால்களை டீன் ஏஜில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது. அப்போது அவர்கள் எதிர்கொள்ளும் மனநெருக்கடி விவரிக்க முடியாதது.

டிஜிட்டல் உலகமும், இன்டர்நெட்டும் சேர்ந்து உருவாக்கியிருக்கும் புதிய சூழல் இதில் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் சிக்கித் தவிக்கும் இளம் பெண்களின் தவிப்புகளை பெற்றோர் நன்றாக புரிந்துகொள்ள முன்வரவேண்டும். வாழ்க்கை என்ற வாகனத்தை விபத்தில்லாமல் ஓட்டிச்செல்ல, எப்படி ஸ்டீரியங்கை பிடிக்கவேண்டும் என்பதை பெற்றோர்கள்தான் டீன்ஏஜ் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும்.

டீன்ஏஜில் பெண்களுக்கு எத்தகைய நெருக்கடிகள் ஏற்படுகின்றன? அதில் சிக்காமல் அவர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? என்பதற்கான ஆலோசனைகள் இங்கே இடம்பெறுகின்றன..!

டீன்ஏஜ் என்பது எதிர்கால வாழ்க்கைக்காக சிறப்பாக திட்டமிட்டு, செயல்படவேண்டிய பருவம். ஹார்மோன்களின் பிரவாகம் பெருகுவதும் இந்த காலகட்டத்தில்தான். இந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளியில் ஆசிரியர்களிட மிருந்தோ, வீட்டில் பெற்றோர்களிடமிருந்தோ தேவையான பாலியல் அறிவு கிடைப்பதில்லை. அதனால் தோழிகளோ, நண்பர்களோ, சமூகவலைத்தளங்களோ அவர்களுக்கு பாலியல் குரு ஆகிவிடுகிறது. அதில் இருந்து கிடைக்கும் தகவல்களை எல்லாம் அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

தவறான இடங்களில் இருந்து கிடைக்கும் முரண்பாடான, கிளர்ச்சியூட்டும் தகவல்களே டீன் ஏஜ் பெண்களிடையே பெருங்குழப்பங்களை ஏற்படுத்துகிறது. அது அவர்களை தவறாகவும் வழிநடத்துகிறது. சமூக சூழல், குடும்ப சூழல், தனிப்பட்ட குணாதிசயம் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டு டீன்ஏஜ் பாலியல் ஈர்ப்பு உருவாகிறது. அதில் இருந்து பாதுகாப்பாக நீந்தி கரையேறுவது அவர்களுக்கு மிக கடினமானதாகிவிடுகிறது.

18 வயதை கடக்கும் முன்பே பெரியவர்களை போன்று நடந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணம் டீன்ஏஜ் பெண்களுக்கு ஏற்படும். பெரியவர்களிடம் இருக்கும் நல்ல குணங்களைவிட கெட்ட குணங்கள் அவர்களை ஒருவேளை ஈர்க்கலாம். அதனால் போதைப் பழக்கம், புகைப்பிடித்தல், சமூக விரோத செயல்களில் ஈடுபடுதல் போன்றவைகள் உருவாகலாம்.

பள்ளிப் பருவத்திலேயே சிறுமிகள் பாலியல் வலைகளில் சிக்கிக்கொள்கிறார்கள். அந்த பருவத்தில் மாணவிகளுக்கு அது பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருப்பதுதான் அதற்கான காரணம். அவர்கள் பாலியல் நெருக்கடிகளில் சிக்காமல் இருக்க கவுன்சலிங் கொடுக்கும் அமைப்புகள் பள்ளிகளில் உருவாக்கப்படவேண்டும். இந்த வயதில்தான் இனக் கவர்ச்சியை காதல் என்று தப்பாக புரிந்துகொள்கிறார்கள்.

இப்படிப்பட்டவர்களை குறிவைத்து பாலியல் மாபியாக்கள் களத்தில் இறங்குகிறார்கள். அவர்கள் சிறுமிகளை பாலியல் தூண்டலாக பேசவைத்தும், படங்களை எடுத்தும் விற்பனைப் பொருட்களாக ஆக்குகிறார்கள். இதற்கான நெட்ஒர்க்குகள் உலகம் முழுவதும் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இத்தகைய மோசக்காரர்களிடம் சிக்கிக்கொள்ளும் பெண்கள் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். சரியான ஆலோசனைகள் கிடைக்காவிட்டால் அவர்கள் தற்கொலை முயற்சிகளில்கூட ஈடுபடலாம்.

டீன்ஏஜ் பருவத்தில், தான் யார் என்பதை நிரூபிக்கவேண்டும் என்ற ஆர்வமும், தனக்கான சுதந்திரத்தை அதிகபட்சமாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணமும் தோன்றும். அப்போது அவர்கள் காட்டும் வேகத்தைதான் பெரியவர்கள் ஆக்ரோஷம் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் டீன்ஏஜ் பருவத்தினரோ அதனை தங்கள் இயல்பான குணம் என்றே கருதுகிறார்கள்.

அவர்கள் ஆவேசமடைவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கும். பெரும்பாலான டீன்ஏஜினர் `நான் பெரியவனாகிவிட்டேன். ஆனால் பெற்றோர் என்னை மதிப்பதில்லை' என்று நினைக்கிறார்கள். தன்னை மதிப்பதில்லை, தன்னை பொருட்படுத்துவதில்லை என்ற எண்ணங்களே அவர்களை ஆக்ரோஷம் நிறைந்தவர்களாக்குகிறது. அதனால் அவர்களை மதிக்க பெற்றோர் முன்வரவேண்டும். குடும்ப விஷயங்களிலும் அவர்களது கருத்தைக்கேட்க வேண்டும். அதன் மூலம் அவர்களுக்கு குடும்ப பொறுப்பையும் உணர்த்தலாம்.

பெற்றோர்களில் சிலர் `இந்த வயதில் படிப்பது மட்டுமே அவர்கள் வேலை. அதை மட்டும் அவர்கள் சரியாக செய்தால் போதும். அவர்களிடம் குடும்ப விஷயங்கள் பற்றி எல்லாம் பேசமுடியாது' என்பார்கள். அது சரியான வாதம் அல்ல. ஏன்என்றால் நன்றாக படித்தால் மட்டும் சிறப்பாக குடும்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டுவிட முடியாது என்பது சிறுவயதிலேயே அவர் களுக்கு உணர்த்தப்படவேண்டும். குடும்ப விஷயங்களில் முடிவெடுக்க இளம்பருவத்தினரை பழக்கப்படுத்தும்போது, அவர்களது சிந்தனையில் அது நல்லதாக்கத்தை ஏற்படுத்தும்.

குடும்பத்தில் தனக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து அதற்கு தக்கபடி நடந்துகொள்வார்கள். குடும்பத்தின் கவுரவத்தை பாதிக்கும் விதத்தில் தான் நடந்துகொள்ளக்கூடாது என்ற எண்ணமும் உருவாகும். சுதந்திரமே கொடுக்காமல் மிகுந்த கட்டுப்பாட்டோடு டீன்ஏஜ் பிள்ளைகள் வளர்க்கப்பட்டால், அவர்கள் எல்லைமீறுவதற்கான வாய்ப்புகளை எதிர்நோக்குவார்கள். அது குடும்பத்திற்கு பல்வேறு விதமான நெருக்கடிகளை உருவாக்கி விடும்.

வீட்டில் ஒவ்வொருவரும் தனித்தனி தீவு போன்று இயங்கிக்கொண்டிருக்கக்கூடாது. அப்படி இயங்கினால் `அப்பா அவரது வேலையை பார்க்கிறார்', `அம்மா அவரது வேலையை கவனிக்கிறார்', `நான் என் வேலையை மட்டுமே செய்வேன்' என்ற சுயநலம் உருவாகிவிடும். அப்போது குடும்பத்தின் கட்டுறுதி குலைந்து விடும். அதனால் டீன்ஏஜ் பிள்ளைகளையும் குடும்பத்தோடு ஐக்கியப்படுத்துங்கள். அதுபோல் அவர்களது ஒவ்வொரு அசைவுகளையும் கண்காணித்து பெற்றோர் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கக்கூடாது. அப்படி எழுப்பினால் `நான் என்ன தீவிரவாதியா? கிரிமினலா? ஏன் என்னை இப்படி சந்தேகக்கண்ணோடு பார்க்கிறீர்கள்?' என்று கேள்விகளை எழுப்பத் தொடங்கிவிடுவார்கள்.

டீன்ஏஜினரின் உலகம் கற்பனை கலந்தது. அதில் முழு யதார்த்தத்தை காண முடியாது. அதனை புரிந்துகொண்டு பெற்றோர் அவர்களுக்கு அன்பும், ஆதரவும் அளித்துவரவேண்டும். அவர்கள் எதிர்பார்க்கக்கூடிய அன்பும், ஆதரவும் வீட்டிற்குள் கிடைக்காவிட்டால் அதனை வெளியே தேடத்தொடங்கிவிடுவார்கள். அது பிரச்சினையின் தொடக்கப்புள்ளியாக அமைந்துவிடும்.

டீன்ஏஜினருக்கு தங்கள் உடல் அமைப்பை பற்றிய புரிதல் இல்லை. ஆண்கள், வலிமை பொருந்திய நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் உடல் அமைப்பை பார்த்துவிட்டு அதுபோல் தங்களுக்கு இல்லையே என்று ஏக்கம் கொள்கிறார்கள். பெண்கள், நடிகைகளின் உடலைப் பார்த்துவிட்டு அதுபோன்ற கட்டமைப்பு இல்லையே என்று கவலை கொள்கிறார்கள். இதில் ஒருசிலர் அந்தரங்கமான உறுப்புகளை, குறிப்பிட்ட வலைத்தளங்களுக்கு சென்று பார்த்துவிட்டு அதுபோல் தங்கள் உறுப்புகள் இல்லையே என்று கவலை கொள்கிறார்கள். மட்டுமின்றி உறுப்பு வளர்ச்சி குறைபாட்டுக்கு தாங்கள் உள்ளாகியிருந் தால் எதிர்காலத்தில் பாலியல் வாழ்க்கையை அது பாதிக்குமே என்றும் அச்சம் கொள்கிறார்கள். இதெல்லாம் தேவையற்ற கவலை. இணையதளங்களில் பார்க்கும் அப்படிப்பட்ட காட்சிகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையற்றவை. பிரமிப்பிற்காக சித் தரிக்கப்பட்டவை என்பதை இளம் வய தினர் புரிந்துகொள்ளவேண்டும்.

இளம் பருவத்தினரில் சிலர் வெளித்தோற்றத்திற்கு கலகக்காரர்கள் போன்றும், உள்ளே சற்று அமைதியானவர்கள் போன்றும் தெரிவார்கள். அவர்களை புரிந்துகொள்வது ஓரளவு எளிது. ஆனால் ஒருசிலர் வெளித்தோற்றத்திற்கு அமைதி யானர்கள் போன்றும், உள்ளே கலங்கலான மனதுடனும் காட்சியளிப்பார்கள். அவர்கள்தான் பெருமளவு குழப்பவாதிகள். இந்த இருவகையினரிடமுமே இயற்கையான பாலியல் தேடல் இருந்துகொண்டிருக்கும். பிடித்தமான சினிமா துறையினர் மீதோ, விளையாட்டுத் துறையினர் மீதோ தீவிர ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்துவார்கள். குறிப்பிட்ட அந்த பிரபலத்தை போன்று தானும் வாழவேண்டும், நடந்துகொள்ளவேண்டும் என்றும் விரும்புவார்கள்.

இன்டர்நெட் விரல் நுனிக்கு வந்துவிட்டதால் நன்மைகள் பல உண்டு என்றாலும், கெடுதலுக்கும் குறைவில்லை. பாலியல் தொடர்புடைய முரண்பாடான தகவல்களையும், காட்சிகளையும் தருவதில் ஆபாச சைட்டுகள் முதலிடத்தில் உள்ளன. இவைகளை கட்டுப்படுத்த முடிவதில்லை. அவைகளில் இருந்து கிடைக்கும் தவறான விஷயங்களை நடைமுறைப்படுத்திப்பார்த்தால், அது அவர்களது வாழ்க்கையை தடம்புரளவைத்துவிடும். இதை எல்லாம் கருத்தில்கொண்டு டீன்ஏஜ் பிள்ளைகளை பெற்றோர் கவனமாக கையாளவேண்டும். அதற்கு அன்பும், அனுசரணையும், பொறுமையும் மிக அதிகம் தேவை.

Tags:    

Similar News