லைஃப்ஸ்டைல்
பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய உடை வடிவமைப்புகள்

பெண்களுக்கான சமீபத்திய மற்றும் அழகான இந்திய உடை வடிவமைப்புகள்

Published On 2019-12-28 02:43 GMT   |   Update On 2019-12-28 02:43 GMT
இப்பொழுது பெண்களால் அணிந்து கொள்ளப்டும் நாகரீகமான ஆடைகளின் போக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? வாங்க பார்க்கலாம்...
உலகெங்கிலும் மக்கள் அணியும் உடைகளில் இந்திய உடைகள் நேர்த்தியான உடைகளாகக் கருதப்படுகின்றன. மேலும் இந்திய உடைகளில் இருக்கும் பலவகையான வேலைப்பாட்டிற்கு ஈடு இணையே இல்லை என்று சொல்லலாம்.

இப்பொழுது பெண்களால் அணிந்து கொள்ளப்டும் நாகரீகமான ஆடைகளின் போக்குகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறதா? வாங்க...

- ஒன் பீஸ் இந்திய ஆடை: இந்த ஆடையானது கழுத்து முதல் கணுக்கால் வரை நம் உடல் அமைப்பிற்கு ஏற்றாற்போல் வடிவமைக்கப்பட்டிருக்கும் நீளமான அங்கி போன்ற ஆடையாகும். இவை பெரும்பாலும் அதிக வேலைப்பாடுகளுடன் விருந்து மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு அணிந்து கொள்வது போல் சேட்டின் சில்க் மற்றும் காட்டன் துணிகளில் வடிவமைக்கப்படுகின்றன.

- சரிகையுடன் வரும் சல்வார் கமீஸ்: இதில் உடலின் மேற்புறம் அணியும் டாப்பானது சரிகையுடன் வரும் லேஸ் அல்லது சாதாரண லேஸ்களுடன் மிகவும் அற்புதமாக வடிவமைக்கப்பட்டு அதற்கு அணியும் பேன்ட்டுகள் அதிக பளபளப்பில்லாதவாறு வந்திருக்கின்றன. இவற்றை துப்பட்டாவுடனும் அவை இல்லாமலும் அணியலாம்.

- அனார்கலி சூட்: சல்வார் கமீஸின் மற்றொரு பாணி என்று இதைக் கூறலாம். கழுத்திலிருந்து இடுப்பு வரை உடலைச் சிக்கென பிடித்ததுபோல் இருக்க இடுப்பிலிருந்து சிறிது சிறிதாக அகன்ற ஃப்ளோர்களுடன் கணுக்கால் வரை நீண்டிருக்கும். இவை திருமண வைபோகங்களுக்கு அணிய ஏற்றவை. பேன்ட்டானது சுடிதார் மாடலில் இருக்க மிகவும் ஆடம்பரமான துப்பட்டாவுடன் உங்களின் தோற்றத்தை பிரம்மாண்டமாக காட்ட உதவுகின்றன இந்த அனார்கலி ஆடைகள். மணப்பெண்கள் அணிந்து கொள்ளக்கூடிய பிரத்யேகமான அனார்கலி ஆடைகள் மிகவும் கம்பீரமாகவும், அழகிய தோற்றத்தை தரும் வகையிலும் வந்துள்ளன. பேட்ச்வொர்க் செய்யப்பட்டு வரும் அனார்கலி ஆடைகளைப் பெண்கள் அதிகம் விரும்பத்தான் செய்கிறார்கள்.

-நெட் குர்தா: இந்தியப் பெண்களால் அதிகம் விரும்பி அணியப்படும் சமீபத்திய குர்தா என்று இவற்றை சொல்லலாம். இந்த நீண்ட குர்தாவில் நெட் (வலை) வேலைப்பாடு செய்யப்பட்டிருப்பது அழகிற்கு அழகு கூட்டுவதாக உள்ளது. குர்த்தியின் உள் துணியின் பிரிண்டானது மேற்புறம் இருக்கும் வலை போன்ற துணியின் வழியாகத் தெரிவது மிகவும் அழகான தோற்றத்தை தருகின்றன. அதே போல் கணுக்கால் வரை நீண்டிருக்கும் ஃப்ளேர் உள்ள குர்தாவின் மேல் ஜாக்கெட் போன்று அதுவும் கணுக்கால் வரை நீண்டிருப்பது போல் வடிவமைக்கப்பட்டிருப்பது மிகவும் ரிச்சான தோற்றத்தைத் தருவதாக உள்ளது.

- பிரிண்டட் லெஹங்கா செட்: இடுப்பிலிருந்து நீண்டு அகன்றிருக்கும் பாவாடை, மார்பை மறைக்கும் சோளி, அழகான வேலைப்பாட்டுடன் இருக்கும் துப்பட்டா இவற்றில் அழகான பிரிண்டட் செய்யப்பட்டிருக்கும் ஆடையைக் கற்பனை செய்தாலே இவ்வளவு அழகாக இருக்கிறதல்லவா? இந்த செட்களில் வரும் சோளிகள் பெரும்பாலும் குட்டையாகவும், கவர்ச்சிகரமாகவும் வடிவமைக்கப்படுகின்றன.



- பேன்ட் ஸ்டைல் ஸல்வார்: இந்த ஸல்வார் செட்டில் வரும் பேன்ட்டானது பட்டியாலா, சுடிதார் பேன்ட் போல் இல்லாமல் சாதாரண பேன்ட் போல் வருவது சற்று வித்தியாசமாக உள்ளது. குர்தாவும் பேன்ட்டும் ஒரே நிறத்தில் இருக்க துப்பட்டா வேறுபட்ட நிறத்தில் இருப்பது அழகாகவே உள்ளது.

-பட்டியாலா ஸல்வார் கமீஸ்:- இவ் வகை பட்டியாலா பேன்ட்டுகள் இன் றைய பெண்களிடையே பெரிதும் பிரபலம். லூசான பட்டியாலா பேன்ட்டின் மேல் சிக்கென இருக்கும் குட்டையான மேலாடை மற்றும் துப்பட்டா அழகிற்கு அழகு சேர்க்கும் என்றே சொல்லலாம்.

- ஃப்ரன்ட் ஸ்லிட் சூட்: திருமண விழாக்களுக்கு அணிந்து கொள்ளக்கூடிய மற்றொரு பொருத்தமான ஆடை என்று இதைச் சொல்லலாம். இவ்வகை ஆடைகள் பெரும்பாலும் ஆர்ட் சில்க், பனாரஸி சில்க், சேட்டின் போன்ற துணிகளில் வடிவமைக்கப்படுகின்றன. இவற்றில் மேலாடையானது இடுப்பிலிருந்து கீழ் வரை நடுவில் பிளவுடன் முன்புறம் வருவது பார்க்க வித்தியாசமாக உள்ளது.

- தனித்துவமாக வடிவமைக்கப்படும் திருமண ஆடைகள்: திருமண வரவேற்பு மற்றும் திருமண விருந்துகளுக்கு ரெடிமேடாக இருக்கும் ஆடைகளை வாங்கி அணியாமல் நம்முடைய உடல் அமைப்பிற்கும், உயரத்திற்கும் ஏற்றாற்போல் பிரத்தியேகமாக ஆடைகளை வடிவமைத்து அணிந்து கொள்வது இப்பொழுது பிரபலமாக உள்ளது. இவ்வகை ஆடைகள் ஒரே கவுன் மாடலில் முன்புறம் கணுக்கால் வரை நீண்டும் பின்புறம் மிகவும் நீளமாகப் பறந்து விரிந்து தரையில் பரவியிருப்பது பார்ப்பதற்குக் கொள்ளை அழகுடன் உள்ளது. மணப்பெண்கள் இதுபோன்ற கவுன்களை அணிந்து கொள்ளவே பெரிதும் விரும்புகிறார்கள்.

- ஸ்ட்ரெயிட் கட் குர்தா: இவ்வகை குர்தாக்கள் விருந்து மற்றும் அலுவலகங்களுக்கு அணிந்து கொள்ள ஏற்ற வகையாக உள்ளது.

- நெட் (வலை) சேலைகள்: வலை போன்ற துணியால் செய்யப்பட்ட சேலையில் மிகவும் அழகான வேலைப்பாடுகளுடன் இருப்பது பெண்கள் அணியும் பொழுது இன்னும் அழகான தோற்றத்தைத் தருவதாக உள்ளது. இந்தச் சேலைகளில் செய்யப்படும் எம்பிராய்டரி வேலைப்பாடானது சேலையின் அழகைப் பன்மடங்கு உயர்த்துகிறது.

இவை மட்டுமல்லாமல் தரை வரை புரளும் ஸல்வார் சூட், ஓப்பன் ஹை நெக் சூட், பெட்டல் கட் அனார்கலி, நேரு காலர் குர்தா, லேயர்டு அனார்கலி, ஆஃப் ஹோல்டர் லெஹங்கா சூட், ஜயார்ஜெட் சூட், லெஹங்கா ஸ்டைல் புடவை, இடுப்புப் பட்டையுடன் அணிந்து கொள்ளக்கூடிய ஜர்தோஸி செட், ஹை லோ அனார்கலி, கலர் ப்ளாக் ஸல்வார் சூட், ரேப் ஸ்டைல் ஆடைகள், க்ரேப் டிசைனர் சூட், ஸ்கூப் நெக் ஆடைகள் போன்றவை இன்றைய இந்தியப் பெண்களால் பெரிதும் விரும்பி அணியப்படும் பிரபலமான ஆடைகளாகும்.
Tags:    

Similar News