லைஃப்ஸ்டைல்
குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்

குளிர்காலத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கான காரணங்களும் தடுக்கும் வழிகளும்

Published On 2019-11-27 04:02 GMT   |   Update On 2019-11-27 04:02 GMT
குளிர்காலத்தில் பெண்கள் அழகை பேணி காப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்களையும், தடுக்கும் வழிகளையும் பார்க்கலாம்.
குளிர்காலத்தில் பெண்களுக்கு சரும வறட்சியின் காரணமாக தோல் பரப்பில் திட்டு திட்டாக இருக்கும். சருமம் மற்றும் கூந்தலில் ‘இன்டெக்ரல் லிப்பிட் லேயர்’ என்ற படிமம் தான் நீர்ச்சத்தைப் பாதுகாக்கிறது. குளிர்காலத்தில் இந்தப் படிமம் பாதிக்கப்படும். அதனால் தான் சருமப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. இந்த சமயங்களில் பெண்களுக்கு அவர்களின் அழகை பேணி காப்பது என்பது சவாலான ஒன்றாக இருக்கும். இங்கு குளிர்காலத்தில் சரும வறட்சி ஏற்படுவதற்கான காரணங்களையும், தடுக்கும் வழிகளையும் பார்க்கலாம்.

சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் வயதானோர், மெனோபஸ் அடைந்த பெண்கள் மற்றும் சர்க்கரை நோயாளிகளுக்கு அதிக சரும வறட்சி இருக்கும். சோப்புக்குப் பதிலாக ‘ஷவர் ஜெல்’ பயன்படுத்தலாம். குளித்தவுடன் உடலில் கொஞ்சம் ஈரம் இருக்கும் போதே, மாய்ஸ்சரைசிங் கிரீம் பூசிக்கொள்வது நல்லது. இதன் pH அளவு 5.5 இருக்கட்டும்.

சிலருக்கு குளிர்காலத்தில் நகங்களின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். அடிக்கடி நகம் உடைவதற்கு, ஊட்டச்சத்து குறைபாடு தான் காரணமே தவிர, மாறும் சீசன் அல்ல. தூங்கும் முன் நல்லெண்ணெய், ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய், வாஸ்லின் என இவற்றில் ஏதாவது ஒன்றை நகத்தில் பூசி விட்டு, மறுநாள் பிரஷை வைத்து சோப்பால் கழுவுவது சிறந்தது.

பனிக்காலத்தின் ஆரம்பத்தில் சருமமும், இறுதியில் கூந்தலும் பாதிக்கப்படும். இந்தக் காலத்தில் 90 சதவிகித முடி வளர்ச்சியின் பருவத்தில் இருந்தால் 10 சதவிகித முடி உறங்கிக் கொண்டிருக்கும். இந்த சீசன் முடிந்து, உறங்கிக் கொண்டிருக்கும் முடியின் சதவிகிதம் 40-50 என உயரும்போது முடி அதிகமாகக் கொட்டும்.

அதிக இரசாயனங்கள் கொண்ட ஷாம்பூவைத் தவிர்க்க வேண்டும். ரின்ஸ் ஆப் மற்றும் லீவ் ஆன் என கண்டிஷனரில் இரண்டு வகைகள் உண்டு. ரின்ஸ் ஆப் கண்டிஷனரை, கூந்தலில் தடவிய சில நிமிடங்களில் அலசி விடலாம். சிறிது ஈரப்பதம் இருக்கும்போது லீவ் ஆன் கண்டிஷனரைப் பூசி அப்படியே விட்டு விடுவது நல்லது.

சந்தனம், மஞ்சள், மருதாணியை அரைத்து, பாதங்களில் தடவிவர வெடிப்புகள் மறையும். தினமும் கிளசரின் தடவி, மறுநாள் காலை கழுவினால், ஒரே வாரத்தில் பாத வெடிப்புகள் மறைந்து விடும். இரவு தூங்கும் முன் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயைப் பாதங்களில் தடவலாம்.

ஊறவைத்த பாதாமை அரைத்து இளஞ்சூடான பாலில் கலந்து, முகம் முழுவதும் பூசலாம். சருமம் பளபளக்கும். கண்களைச் சுற்றி உள்ள கருவளையம் காணாமல் போகும். சந்தனத்தூள், ஜாதிக்காய்தூள் இவற்றைப் பன்னீருடன் கலந்து, கண்ணைச் சுற்றிப் பூசலாம். கொத்தமல்லிச் சாறுடன் வெண்ணெய் கலந்து, கண்களைச் சுற்றி பூசிவர, ஒரே வாரத்தில் கருவளையம் மறையும்.

இயற்கை முறையில் பாதுகாப்பு

1 குளிக்கும் நீரில் 3 துளிகள் எலுமிச்சைச் சாறு விட்டு குளிக்கலாம். குளித்தவுடன் வெண்ணெயோ, நல்லெண்ணெயோ, தேங்காய் எண்ணெயோ உடலில் தடவிக்கொள்ளலாம். இது உடலில் ஈரப்பதத்தைத் தக்கவைக்கும்.

2 இளஞ்சூடான பாலை முகத்தில் தினமும் பூசி, 20 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம். எலுமிச்சைச் சாறுடன் தேன் கலந்து, கரும்புள்ளிகளின் மீதும், துளசி, வேப்பிலை, மஞ்சள் கலந்து பருக்களின் மீது தடவலாம்.

3 உடலுக்குத் தேவையான 8 அமினோ அமிலங்கள் முட்டையில் இருப்பதால், தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். முடியில் தடவத் தேவை இல்லை. முட்டையைப் பச்சையாக சாப்பிட்டால், முடிஅதிகம் கொட்டத்தொடங்கும்.

4 பச்சை முட்டையில் அவிடின் இருப்பதால், பயோட்டினை அழித்துவிடும். வேகவைக்கும்போது அவிடின் அழிக்கப்படுவதால், பயோட்டின் பாதுகாக்கப்படும்.

5 தீட்டப்பட்ட அரிசியைத் தவிர்த்து, கைக்குத்தல் அரிசி சாப்பிட்டால் முடி நன்றாக வளரும்.

6 வைட்டமின் H நிறைந்த வேர்க்கடலை, ஈஸ்ட், கோதுமை, மீன், முட்டை, அவகேடோ, கேரட், பாதாம், வால்நட், காலிஃப்ளவர் தினமும் எடுத்துக்கொள்வது நல்லது.

7 வேப்பிலை சேர்த்த நீரைக்கொண்டு கூந்தலை அலசலாம்.

8 மிளகு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் மூன்றையும் சம அளவு கலந்து, கூந்தலில் தடவி, சூடான நீரில் நனைத்துப் பிழிந்த துண்டை 15 நிமிடங்கள் வரை தலையில் சுற்றிவைத்து பிறகு அலசலாம். இதனால் கூந்தலுக்குப் பளபளப்பும் மென்மையும் கிடைக்கும்.

9 சிகைக்காய், பச்சைப் பயறு மாவை சேர்த்து, சாதம் வடித்த கஞ்சியுடன் கலந்து, கூந்தலில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து அலசலாம்.

10 வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கூந்தலில் பேக் போட்டு சிகைக்காய் போட்டு அலசலாம்.
Tags:    

Similar News