லைஃப்ஸ்டைல்
முத்து நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்...

முத்து நகைகள் பாதுகாப்பும், பராமரிப்பும்...

Published On 2019-11-02 06:31 GMT   |   Update On 2019-11-02 06:31 GMT
முத்து நகைகளை மிக கவனமாகப் பராய்மரித்தோமென்றால் அவை காலம் காலமாக நம்முடனேயே பயணிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முத்துக்கள் என்பவை மென்மையானவை. எனவே முத்துக்களில் எளிதில் சிராப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் முத்து நகைகளை மிக கவனமாகப் பராய்மரித்தோமென்றால் அவை காலம் காலமாக நம்முடனேயே பயணிக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

* முத்து நகைகளை எப்பொழுதும் மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகே அணிய வேண்டும். அதேபோல் மற்ற நகைகளைக் கழற்றுவதற்கு முன் இந்த நகையைத்தான் கழற்ற வேண்டும். முத்து நகைகளை அணிந்த பிறகு லோஷன், ஒப்பனைப் பொருள்கள், வாசனைத் திரவியங்கள், கொலோன் மற்றும் முடிக்கு உபயோகப்படுத்தும் ஸ்ப்ரே போன்றவற்றை உபயோகப்படுத்தக்கூடாது.

* முத்து நகைகளைக் கழற்றிய பிறகு, அவற்றில் படிந்திருக்கும் எண்ணெய் மற்றும் வியர்வையை அகற்றுவதற்காக மென்மையான மற்றும் சுத்தமான துணியைக் கொண்டு துடைக்க வேண்டும்.

* முத்து கோர்த்திருக்கும் சரமானது ஈரமாக இருந்தால் அதை அப்படியே உபயோகிக்கக் கூடாது. ஏனென்றால் அவை ஈரமாக இருக்கும் பொழுது அழுக்காவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளது. அழுக்கேறிவிட்டால் அவற்றை நீக்குவது கடினம். எனவே ஈரமாக இருக்கும் முத்துக்களை காற்றாடியபிறகு அணிவதே நல்லது.

* மற்ற நகைகளோடு கலந்து முத்து நகைகளை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

* முத்துக்களை அணிந்து கொண்டே குளிப்பது, நீந்துவது, பாத்திரம் விளக்குவது மற்றும் சமைப்பது போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

* முத்துநகைகளை பிளாஸ்டிக் பைகள் அல்லது நகைப் பெட்டிகளில் வைத்தால் அவை சிராய்ப்பை ஏற்படுத்தும். சில்க் பெளச்கள் அல்லது காட்டன் பெளச்களில் வைத்து அவற்றை பாதுகாக்கலாம். ஒவ்வொரு நகைகளையும் தனித்தனி டிஷ்யு பேப்பர்களில் சுற்றி வைக்க வேண்டும். இதனால் ஒரு நகையுடன் மற்றொரு நகை உரசாமல் தடுக்கப்படும்.

* அதேபோல் முத்துச்சரங்கள் மற்றும் முத்து நெக்லஸ்களை தொங்க விடாமல் படுத்தவாக்கில் வைக்க வேண்டும்.

* அதேபோல் முத்து நகைகளை காற்றுப் புகாத பெட்டிகளில் வைக்கக்கூடாது. மிகவும் சூடு அல்லது குளிர்ச்சியான இடத்தில் வைக்கக்கூடாது. அதிக சூடு அல்லது குளிர்ச்சியில் வைப்பதனால் முத்துக்கள் நிறம் மாறுவது, உடைவது மற்றும் விரிசலாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.



முத்து நகைகளைச் சுத்தம் செய்வது எப்படி?


* முத்து நகைகளை உங்கள் மொத்த அலங்காரத்தையும் முடித்த பிறகு அணிந்தால் அதில் பெளடர், க்ரிம்கள் போன்றவை படிவது தடுக்கப்படும்.

* அணிந்த முத்து நகைகளைக் கழற்றிய பிறகு மென்மையான காட்டன் துணியால் துடைத்து அதில் படிந்திருக்கும் வியர்வை மற்றும் ஒப்பனைப் பொருள்கள் ஏதாவது படிந்திருந்தால் அவற்றை அகற்றி விடலாம்.

* முத்து நகைகளைச் சுத்தம் செய்த பிறகு மற்ற நகைகளுடன் உரசாதவாறு தனியாக வைக்க வேண்டும்.

* வெது வெதுப்பான நீரில் மென்மையான சோப்பைக் கலந்து அதில்முத்து நகைகளைப் பதினைந்து விநாடிகள் மட்டுமே ஊறவைக்க வேண்டும்.

* பிறகு அவற்றை ஈரமான, சுத்தமான பருத்தித் துணியால் துடைக்க வேண்டும். மிகவும் மென்மையாகத் துடைத்து அதன் மேல் படிந்திருக்கும் அழுக்குகளை நீக்க வேண்டும். ப்ரஷ்களை உபயோகிக்கவே கூடாது.

* கடைசியாக முத்துக்களை சுத்தமான மற்றும் உலர்ந்த பருத்தித் துணியில் உலர வைக்க வேண்டும். முத்துக்களைக் காய வைப்பதற்கு ஹேர்ட்ரையர் போன்றவற்றைப் பயன்படுத்தக்கூடாது.

* அதேபோல் முத்து ஹாரம் மற்றும் நெக்லெஸ்களை தொங்கவிடக் கூடாது. இவ்வாறு தொங்கவிட்டே வைத்திருந்தால் முத்துச்சரங்கள் தளர்வடைய வாய்ப்புள்ளது.

* முத்துக்களை மியொலி (அல்ட்ராசானிக்) அல்லது ஸ்டீம் கிளினரைக் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது.

* முத்துக்களைக் சுத்தம் செய்ய நேரமில்லை என்றால் அவற்றை நகைக்கடைகளில் கொடுத்து சுத்தம் செய்யலாம். அவர்களிடம் முத்துக்களைச் சுத்தம் செய்வதற்கென்றே சிறப்பான திரவங்கள் இருக்கும். மேலும் தொழில்முறை சுத்தம் ஒருபோதும் தீங்கு விளைவிக்காது.

* முத்துச்சரங்களை வருடம் ஒருமுறை புதிய பட்டு நூலில் கோர்த்துக் கொள்வது நல்லது.

* மினரல் வாட்டர் அல்லது காய்ச்சி வடிகட்டி ஆறிய நீரில் முத்து நகைகளை சுத்தம் செய்யலாம். சாதாரணக் குழாய் நீரில் குளோரின் மற்றும் பிற இரசாயனங்கள் இருந்தால் அவை முத்து நகைகளைப் பாதிக்கும்.

* குறிப்பிட்ட இடைவெளிகளில் முத்து நகைகளை அணிய வேண்டும். அவற்றை உபயோகிக்காமல் வெகு நாட்கள் வைத்திருந்தோமானால் அவற்றின் வண்ணமானது மாறுவதற்கு வாய்ப்புள்ளது.

முத்து நகை மட்டுமல்ல எந்த ஒரு நகையையும் முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்புடன் வைத்திருந்தால் அவை பல ஆண்டுகள் நீடித்து குடும்ப நகைகளாக வலம் வரும் என்பதில் சந்தேகமில்லை.
Tags:    

Similar News