பொது மருத்துவம்

பந்தியில் எந்த வரிசையில் உணவு உண்ண வேண்டும்?

Update: 2022-08-06 08:24 GMT
  • வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது.
  • "நொறுங்க தின்றால் நூறு வயது" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

இன்றைக்கு சளியோ, காய்ச்சலோ வந்தால் உடனடியாக டாக்டரை தேடி ஓடுகிறோம். மருந்து, மாத்திரைகளை சாப்பிடுகிறோம்.

அந்த காலத்தில் மருந்துக்கு பதிலாக உணவு மூலமாகவும், வீட்டு மருத்துவம் மூலமாகவும் ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொண்டனர்.

அப்படி காலங்காலமாக தொடர்ந்து வரும் ஆரோக்கிய உணவு பழக்கங்கள், நமக்கு மிகப்பெரிய பொக்கிஷம். வீட்டில் எந்த விசேஷமானாலும் சரி, முக்கிய பண்டிகை, திருவிழா என்றாலும் வாழை இலையில் சாப்பிடுவது நமது பாரம்பரியம். ஓட்டல்களும் இதை பின்பற்றுகின்றன. அவ்வாறு வாழை இலையில் சாப்பிடுவது செரிமானத்துக்கு உதவுகிறது. அதேபோல் சாப்பிட்ட பின்னர் பாக்கு, சுண்ணாம்பு சேர்த்து வெற்றிலை போடுவது மருத்துவ குணம் கொண்டதாகும். செரிமானத்துக்கு உதவுவதாகும்.

ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் சாப்பிடும் முதல் உணவு பண்டம் இனிப்பு என்பதில் தொடங்கி, விசேஷங்களில் முதலில் இனிப்பு பரிமாறப்படுவது வரை அனைத்துக்கும் காரணம் இருக்கிறது. உமிழ்நீர் சுரப்பதால்தான் உணவு செரிமானம் அடைய தொடங்குகிறது. உமிழ்நீரை அதிகம் சுரக்க வைக்கும் இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் என்று கூறுவது இதன் காரணமாகத்தான்.

உணவை நன்கு மென்று சாப்பிடுவதன் காரணமாக உமிழ் நீரின் சலைவரி என்சைம்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் செரிமானம் சிறப்பாக நடக்கும். இதைத்தான் "நொறுங்க தின்றால் நூறு வயது" என்று முன்னோர்கள் குறிப்பிட்டார்கள். உணவின் இறுதியில் மோர் சாப்பிடுவது நல்லது. சீரணம் நடை பெறும்போது ஏற்படும் அமில சுரப்பால் உருவாகக்கூடிய குடல்புண்ணுக்கு இதுவே மருந்தாக இருக்கும்.

பொதுவாக பந்தியில் உணவு உண்ணும் போது இனிப்பு, சாதம், சாம்பார், ரசம், மோர் என்ற வரிசையில் உணவை சாப்பிடுவது நல்லது என கூறுகிறார்கள். இதன் மூலம் நமது உணவை செரிக்க வைக்கும் நொதிகளும், செரிமானமும் சரியான முறையில் நடைபெறும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்தே தண்ணீர் அருந்த வேண்டும். அது சீரண என்சைமை நீர்க்க செய்யாமல், உணவில் உள்ள அத்தனை சத்தையும் உடல் கிரகிக்க வகை செய்யும்.

காலையில் குளிர்ந்த நீர் 2 தம்ளரும், இரவில் படுக்கும் முன் 3 தம்ளர் வெந்நீரும் அருந்தினால் உடலுக்கு நல்லது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

Tags:    

Similar News