பொது மருத்துவம்

பசியுடன் தூங்கினால் என்ன பிரச்சனைகள் வரும்..

Update: 2022-08-15 08:04 GMT
  • பசியுடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
  • இரவு உணவை தவிர்த்தால் பசி அதிகரிக்கும்.

இந்தியாவில் 20 கோடி பேர் இரவில் உணவு கிடைக்காமல் பட்டினியால் தூங்கும் நிலையில் இருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க நிறைய பேர் உணவு கிடைத்தும் சாப்பிட விரும்பாமல் பசியுடன் தூங்க செல்கிறார்கள். உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதுதான் அதற்கு காரணமாக இருக்கிறது. எப்போதாவது ஒருமுறை சாப்பிடாமல் தூங்கினால் உடலுக்கு எந்த பாதிப்பும் நேராது என்று நினைக்கிறார்கள். மாதத்தில் இரண்டு, மூன்று நாட்கள் அப்படி செய்தால் பரவாயில்லை. ஆனால் மாதத்தில் பல நாட்கள் பசியுடன் தூங்குவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

மெலிந்த உடல்வாகுவை பெற விரும்புபவர்கள் தினமும் ஐந்து, ஆறு முறை உணவை பிரித்து கொஞ்சமாக உட்கொள்ள வேண்டும். அப்படி சம இடைவெளியில் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க செய்யும். இரவு உணவை தவிர்த்தால் வளர்சிதை மாற்றம் மெதுவாக நடைபெறும். அவ்வாறு செய்வதன் மூலம் ஓரிரு கிலோ உடல் எடையை குறைக்க நேரிடலாம். ஆனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் போதுமான அளவு கிடைக்காது. அது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் பாதிக்கும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தலாம்.

எந்த அளவுக்கு உணவு உண்பதை குறைக்கிறோமோ அந்த அளவுக்கு உடல் எடை குறையும் என்ற எண்ணம் நிறைய பேரிடம் இருக்கிறது. ஆரோக்கியமான உணவை உட்கொள்வதும், தேவையான நேரத்தில் சாப்பிடுவதும் தான் எடை குறைவதற்கு வழிவகுக்கும். இரவு உணவை தவிர்த்தால் பசி அதிகரிக்கும். காலையில் எழுந்தவுடன் இருமடங்கு உணவை சாப்பிட்டுவிடுவீர்கள். அது உடலில் கொழுப்பு சேர்வதற்கு வழிவகுக்கும்.

சாப்பிடாமல் தூங்குவது உடலுக்கு சக்தி வழங்கும் 'ஸ்டெமினாவை' குறைக்கும். காலையில் உணவு உட் கொள்வது நீண்ட நேரம் உடலுக்கு வலிமையை கொடுக்கும். ஆனால் இரவு உணவை தவிர்த்தால் இரவு முழுவதும் உடல் சோர்வடைவதற்கு வழிவகுக்கும். இரவிலும் உடலுக்கு ஆற்றல் தேவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இரவில் சாப்பிட விருப்பம் இல்லாத பட்சத்திலும் கூட பிடித்தமான உணவை குறைந்த அளவாவது சாப்பிட வேண்டும்.

இரவு உணவைத் தவிர்ப்பது உடலில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் பற்றாக்குறையை ஏற்படுத்தும். ஏனென்றால் இரவு நேரத்தில்தான் அனைத்து வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உடல் உறிஞ்சும். அவை ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமானவை. உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக இருக்க விரும்பினால் வயிறு ஒருபோதும் வெறுமையாக இருப்பதற்கு அனுமதிக்கக்கூடாது.

Tags:    

Similar News