பொது மருத்துவம்

மதியம்: ஓய்வெடுக்கலாம்.. உறங்கிவிடக்கூடாது..

Update: 2022-09-27 01:30 GMT
  • மதிய தூக்கம் இரவுத் தூக்கத்தை பாதித்துவிடும்.
  • முடிந்த அளவு மதிய தூக்கத்தை தவிர்த்திடவேண்டும்.

இரவு தூக்கத்தைவிட சிலர் மதிய தூக்கத்தை அதிகம் நேசிக்கிறார்கள். மதிய சாப்பாட்டை முடித்துவிட்டு, இருக்கையில் அமர்ந்த படியே அப்படியே கண்களை மூடி ஒரு குட்டிதூக்கம் போட்டுவிட்டு, 'பிரஷ்' ஆகிவிடுவார்கள்.

பொதுவாக மதிய நேர குட்டிதூக்கத்தை சோம்பேறித்தனமான செயலாக பலரும் கருதுகிறார்கள். குழந்தைகளும், வயதானவர்களும் மட்டும் மதியம் தூங்கினால் ஏற்றுக்கொள்கிறார்கள். யாராக இருந்தாலும் மதியம் லேசாக கண்அயர்ந்து கொள்வது தப்பில்லை என்பது டாக்டர்களின் கருத்தாக இருக்கிறது. அவர்கள் உற்சாகமடையவும், கூடுதலாக உழைக்கவும் அது ஒத்துழைக்குமாம்.

மதியம் கண்அயர்வது, நீண்ட உறக்கமாகிவிடக்கூடாது. நீண்ட உறக்கமாகிவிட்டால் சோர்வும், மந்தநிலையும் தோன்றி விடும். அதன் பின்பு மீண்டும் இயல்பான வேலைக்கு திரும்ப அதிக நேரமாகிவிடும். அதனால், ஏண்டா தூங்கினோம் என்ற மனநிலை உருவாகிவிடும். இன்னொரு முக்கிய காரணம், நீண்ட நேர மதிய தூக்கம் இரவுத் தூக்கத்தை பாதித்துவிடும். இரவு, தூக்கமின்மையால் அவதிப்படுகிறவர்கள் முடிந்த அளவு மதிய தூக்கத்தை தவிர்த்திடவேண்டும்.

மதியம் எவ்வளவு நேரம் கண்அயர்ந்துகொள்ளலாம்?

மதிய உணவுக்கு பிறகு 10 முதல் 15 நிமிடங்கள் கண் அயர்ந்துகொள்ளலாம். வயதானவர்களும், குழந்தைகளும் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தூங்கலாம். மதிய உணவுக்கு பிறகு 2 முதல் 3 மணிவரை இதற்கு சரியானது. அதற்கு பின் தூங்கினால் இரவுத் தூக்கம் பாதிக்கப்படும்.

மதியம் கண் அயர்வதற்கும்- இரவில் தூங்குவதற்கும் இடையில் குறைந்தது ஐந்து மணி நேர இடைவெளி அவசியம். அந்த ஐந்து மணி நேரமும் உற்சாகமாக வேலைசெய்தால்தான், இரவுத் தூக்கத்திற்கு உடல் தயாராகும்.

மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை மதிய நேரம் தூங்கவைத்துவிடுவார்கள். தூக்கம் அவைகளுக்கு மிக அவசியம். குழந்தைகளின் நினைவாற்றலுக்கும், உற்சாகத்திற்கும் அதிக நேரத் தூக்கம் அவசியமானதாக இருக்கிறது.

வயதானவர்கள் தூக்கமின்மையால் அதிக பாதிப்பிற் குள்ளாகுவார்கள். அவர்கள் மதியம் தூங்கி எழுந்தால், மாலையில் சிறிது நேரம் எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இரவில் நன்றாக தூக்கம் வரும் வாய்ப்பு உருவாகும். எளிதான உடற்பயிற்சி என்பது நடைப்பயிற்சியாகும்.

இரவில் அதிக நேரம் விழித்திருந்து வேலைபார்ப்பவர்களும், ஷிப்ட் முறையில் பணிபுரிபவர்களும் மதியம் தூங்குவது நல்லது. சிலர் மற்றவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிடுவார்கள். அவர்கள் போதுமான நேரம் தூங்கி, அத்தகைய பழக்கத்தில் இருந்து விடுபடவேண்டும்.

வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்துக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கோ, அலுவலகத்தில் அமர்ந்து வேலைசெய்துகொண்டிருப்பவர்களுக்கோ மதியம் தூக்கம் வந்தால், அதை தவிர்ப்பது எளிதுதான். குளிர்ந்த நீரில் முகத்தை கழுவிவிட்டு, ஒரு கப் தண்ணீர் பருகினால் தூக்க கலக்கத்தை தவிர்த்துவிடலாம். பிடித்தமானவர்களோடு அப்போது சிறிது நேரம் பேசினாலும், சிறிது தூரம் நடந்துவிட்டு வந்தாலும் தூக்கநிலை மாறிவிடும்.

Tags:    

Similar News