பொது மருத்துவம்
உடல் பருமனை குறைக்கும் காய்கறியும்... கலோரியும்...

உடல் பருமனை குறைக்க உதவும் காய்கறியும்... கலோரியும்...

Published On 2022-04-30 04:31 GMT   |   Update On 2022-04-30 07:49 GMT
உண்ணும் உணவுக்கேற்ப நடைபயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
உடல் பருமன் காரணமாக உடலில் ஏற்படும் பாதிப்புகள் பல. அவற்றுள், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, மூச்சுத்திணறல், மூட்டு வலி, முதுகு வலி, இடுப்பு வலி, குதிகால் வலி, புற்றுநோய், பித்தப்பை கற்கள், குடலிறக்கம், குறட்டை, ‘ஸ்லீப் ஏப்னியா’ எனும் உறக்க சுவாசத்தடை, மலச்சிக்கல், மலட்டுத்தன்மை, மாதவிலக்கு பிரச்சினைகள், சினைப்பை நீர்க்கட்டி, மூலநோய், மனச்சோர்வு ஆகியவற்றை குறிப்பிடலாம்.

உடல் பருமனுக்கு காரணம் தெரிந்து, அதை குறைப்பதற்கான வழியை பின்பற்றுவது நல்லது. மேலும் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி ஆகிய இரண்டு விஷயங்களில் கவனம் செலுத்தினால் உடல் எடையை குறைப்பது எளிது.

உணவை பொறுத்தவரை சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், அதிக மாவுச்சத்து, கொழுப்பு, எண்ணெய் உள்ள உணவு வகைகள், பானங்களை தவிர்க்க வேண்டும்.

கொழுப்புள்ள உணவை தேவைக்கு மேல் சாப்பிட நேர்ந்தால், உடனுக்குடன் வேலையோ-உடற்பயிற்சியோ செய்து அதை எரித்துவிட வேண்டும். உண்ணும் உணவுக்கேற்ப நடைபயிற்சி, உடற்பயிற்சி என ஏதாவது ஒரு பயிற்சியை மேற்கொண்டு, உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்கிறேன் எனப்பலரும் காலை உணவை தவிர்க்கிறார்கள். இது தவறு. இதனால் மதிய உணவு அதிகமாக சாப்பிட நேரிடும்.

காலைக்கு கேழ்வரகு இட்லி, இடியாப்பம், புட்டு, உப்புமா, தினை பொங்கல் சாப்பிடலாம். தேங்காய் சட்னிக்குப் பதிலாக, புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி, வெண்டைக்காய்ச் சட்னியுடன் சாப்பிடலாம்.. கீரைகள், கத்தரிக்காய், புடலங்காய், சுரைக்காய், சுண்டைக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பாகற்காய், வாழைத்தண்டு ஆகியவற்றில் கலோரிகள் குறைவு. தினமும் சராசரியாக 500 கிராம் காய் நமது உடலுக்கு தேவை. மேலும் கொய்யா, மாதுளை, தக்காளி, சாத்துக்குடி, அன்னாசி, பேரிக்காய் சாப்பிடலாம். தினமும் 250 கிராம் பழம் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது.
Tags:    

Similar News