பொது மருத்துவம்
எய்ட்ஸ் விழிப்புணர்வு

ஆண்கள் மத்தியில் குறைந்து வரும் ‘எய்ட்ஸ்’ விழிப்புணர்வு

Published On 2022-02-27 01:30 GMT   |   Update On 2022-02-26 02:27 GMT
எய்ட்ஸ் பற்றிய புரிதல் இல்லாமல் நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தான் செய்கிறது.
இந்தியாவில் பெண்களில் 21.6 சதவீத பேரும், ஆண்களில் 30.7 சதவீத பேரும் மட்டுமே எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றி முழுமையாக அறிந்திருக்கிறார்கள் என்று தேசிய குடும்ப சுகாதார ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.

2015-16-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட முந்தைய கணக்கெடுப்பில், 20.9 சதவீத பெண்களும், 32.5 சதவீத ஆண்களும் இந்த கொடிய உயிர்க்கொல்லி நோயைப் பற்றி அறிந்திருந்தனர். சமீபத்திய கணக்கெடுப்பின்படி எச்.ஐ.வி/எய்ட்ஸ் பற்றி அறிந்திருக்கும் ஆண்களின் சதவீதம் குறைந்துள்ளது.

அதே சமயம் பெண்கள் மத்தியில் சற்று விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நீண்டகாலமாக ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் இந்த நோய் உலகளாவிய சுகாதார பிரச்சினையாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உலக அளவில் இதுவரை சுமார் 3.63 கோடி உயிர்களை பலி கொண்டுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை வடகிழக்கு மாநிலங்களில் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. மிசோரமில் 64 சதவீத பெண்களும், 65.6 சதவீத ஆண்களும் இந்த நோயை பற்றி அறிந்திருக்கிறார்கள்.

பீகார், மேகாலயா, மேற்கு வங்காளத்தின் கிராமப்புற பெண்கள், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் நகர்ப்புற பெண்கள் எச்.ஐ.வி/ எய்ட்ஸ் பற்றி சிறிதளவு விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். யூனியன் பிரதேசங்களில் லட்சத்தீவுகளும், மாநிலங்களில் கர்நாடகாவும் எய்ட்ஸ் விழிப்புணர்வில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளன. முந்தைய கணக்கெடுப்பில் கர்நாடகாவில் 10 பெண்களில் ஒருவர் மட்டுமே இந்த நோயை பற்றி அறிந்திருப்பதாக பதிவாகி இருந்தது. தற்போது விழிப்புணர்வு விகிதம் நான்கு பெண்களில் ஒருவர் என்ற அளவிற்கு மேம்பட்டிருக்கிறது.

பெரும்பாலான ஆய்வுகள் எய்ட்ஸ் நோயை ‘குணப்படுத்துவதை விட தடுப்பதே சிறந்தது' என்று சுட்டிக்காட்டியுள்ளன. எய்ட்ஸ் பற்றிய புரிதல் இல்லாமல் நோய் பாதிப்புக்குள்ளாகுபவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலை இன்னும் தொடரத்தான் செய்கிறது. அத்தகைய களங்கம் காரணமாக எய்ட்ஸ் பரிசோதனை செய்வதற்கு தாமாக யாரும் முன்வருவதில்லை. அது எய்ட்ஸ் பரிசோதனையை தடுக்கும் தடைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது. விழிப்புணர்வு இல்லாமை, சமூக அழுத்தம், கல்வி நிலை போன்றவையும் காரணங்களாக அமைந்திருக்கின்றன.
Tags:    

Similar News