பொது மருத்துவம்
சிறுதானியங்கள்

சிறுதானியங்களை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம்

Update: 2022-02-23 06:33 GMT
சிறுதானியங்களை வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் அரிசிக்கு பதிலாக எடுத்து வந்தாலே போதும் நாம் உடல் எடையை பராமரித்து கொள்ள உதவும்.
நாம் உடல் நலத்துடன் இருக்க, உடலின் எடையை சரியாக பராமரிப்பது மிகவும் அவசியம். இன்றைய காலத்தில் நம் வாழ்க்கை முறை மாற்றங்களால் சுவைக்காக உணவு உண்ணும் பழக்கம், உடல் உழைப்பின்மை போன்றவற்றால் பெரும்பாலானோர் உடல் எடையை சரியான விகிதத்தில் பராமரிக்க முடியவில்லை என்று வருந்துகின்றனர். தினசரி நாம் அரிசி உணவை சாப்பிட்டு பழகி இருப்பதால் நாம் பொதுவாக சாப்பிடும் உணவு வகைகளை தவிர்த்து, டயட் என்ற பெயரில் உணவு உட்கொள்வதில் பலருக்கும் பிரச்சனையாகவே இருக்கிறது. இந்த நிலையில் நாம் அரிசியில் சமைக்கும் சாதம், பொங்கல், இட்லி, உப்புமா, கிச்சடி, பிரியாணி, கலவை சாதங்கள் போன்ற எல்லாவற்றையுமே சாப்பிட்டுக்கொண்டு, அதேநேரம் உடல் எடையையும் காத்துக்கொள்ள உதவும் ஒரு வரப்பிரசாதமாக இருப்பதுதான் சிறுதானியங்கள்.

தினை, சாமை, குதிரைவாலி, கேழ்வரகு, கம்பு போன்ற சிறுதானியங்கள் நம் உடல் நலத்தை காப்பதுடன் நம் நாக்கிற்கும் ருசி மாறாத உணவாகவும் திகழ்கிறது. வாரத்தில் குறைந்தது 4 முதல் 5 நாட்கள் சிறுதானியங்களை அரிசிக்கு பதிலாக எடுத்து வந்தாலே போதும் நாம் உடல் எடையை பராமரித்து கொள்ள உதவும்.

சிறுதானியங்களில் மாவுச்சத்து குறைவான அளவு இருப்பதுடன் அதிக அளவில் புரதமும் மற்றும் தேவையான அளவில் கொழுப்பும் இருக்கிறது. எனவே சிறுதானிய உணவு ஒரு சரிவிகித உணவாக அமைகிறது. சிறுதானியங்களில் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தில் 90 சதவிகிதத்தை அளிக்கிறது என்பது நிதர்சன உண்மை.

சிறுதானியங்களை எப்படி எல்லாம் உபயோகிக்கலாம்

* சிறு தானியங்களை மாவாக அரைத்து சப்பாத்தி, தோசை, இட்லி, பிஸ்கட், பிரட் போன்ற பல உணவு வகைகளாக சமைத்து சாப்பிடலாம்.

* சிறுதானியங்களை ரவையாக உடைத்து உப்புமா, பொங்கல், கிச்சடி என்ற வகைகளில் சமைத்து சாப்பிடலாம்

* சிறுதானிய முழு அரிசியை சாதமாக, புலாவாக, பிரியாணி, ப்ரைட் ரைஸாக சமைத்து உண்ணலாம்.

* சிறுதானியங்களை கஞ்சியாக செய்து திரவ உணவாகவும் சாப்பிடலாம்.

* சிறுதானியங்களை பாயசம் ஆக செய்து வெல்லம் கலந்து சாப்பிடும் போது மிகவும் சுவையாக இருக்கும்.

எனவே சிறுதானியங்களை நாம் காலை உணவாகவும், மதிய உணவாகவும், நொறுக்குத் தீனியாகவும் இரவு உணவாகவும் என்று எல்லா நேரங்களில் சாப்பிடக்கூடிய உணவாக சமைத்து சாப்பிடலாம் என்பது கூடுதல் சிறப்பு.
Tags:    

Similar News