பொது மருத்துவம்
தூக்கமின்மை

தூக்கமின்மையால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்

Published On 2021-12-28 07:33 GMT   |   Update On 2021-12-28 07:33 GMT
உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம்.
முதுமையில் பெரும்பாலோருக்கு ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகளில் தூக்கமின்மை முதலிடம் பிடிக்கிறது. அறுபது வயதுக்குப் பிறகு அனைவருக்குமே தூக்கம் சற்றுக் குறைவது இயல்பானதுதான். இந்த வயதில் ஐந்து மணி நேரத் தூக்கம்கூடப் போதுமானதுதான். ஆனால், தூங்கும் நேரத்தின் அளவைவிட எவ்வளவு நேரம் ஒருவர் தொடர்ந்து ஆழ்ந்த தூக்கத்தை பெறுகிறார் என்பதுதான் முக்கியம். உடலுக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம், மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளை தன்னைத்தானே புதுப்பித்து கொள்ளும், ஓரு இயற்கையான வழிதான் தூக்கம். ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல்நலம், மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது.

முதுமை காரணமாகவோ, உடல்நிலை காரணமாகவோ தூங்கும் நேரம் குறைந்தாலும் தூக்கத்தின் அவசியம் குறைவதில்லை. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம், தூக்கம் குறையும்போது உடலின் நலமும் உள்ளத்தின் நலமும் பாதிக்கப்படுகின்றன. இள வயதில் தேவையான அளவுக்கு தூங்காதவர்களுக்கு நாற்பது வயதிலேயே ஞாபக மறதி வந்துவிடுகிறது. தேவையில்லாமல் கோபம் வருகிறது. எதிர்படுபவர்களிடம் எல்லாம் எரிந்து விழுந்து அவர்களுடைய தூக்கத்தையும் கெடுத்து விடுகிறார்கள்.

ஒருவருக்கு தொடர்ந்து தூக்கம் கெடும்போது பசி குறையும். அஜீரணம் தலைகாட்டும். உணவின் அளவு குறையும். உடல் எடை குறையும். பணியில் ஆர்வம் குறையும். பகல் முழுவதிலும் தூக்க கலக்கத்தில் இருப்பார்கள். அடுக்கு கொட்டாவி வரும். சோர்வும் தலைவலியும் நிரந்தரமாகிவிடும். மாதக் கணக்கில் நல்ல தூக்கம் இல்லாதவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

கூட்டுக் குடும்பம் என்ற கலாசாரம் மறைந்துபோய் தனிக்குடித்தனம் என்ற கலாசாரம் வந்தபிறகு முதுமையில் பெரும்பாலானவர்களுக்குத் தனிமை என்பது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இந்தத் தனிமை அவர்களுடைய தூக்கத்துக்கு வேட்டு வைக்கிறது. ‘வயதாகிவிட்டது, இனி உடற்பயிற்சி தேவையில்லை’ என நினைத்து முதுமையில் பலரும் உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இது தூக்கமின்மைக்குப் பாதை போடுகிறது.

காலையில் எழுந்துகொள்ளும் நேரமும் இரவில் படுக்கப்போகும் நேரத்தையும் ஒழுங்குக்குள் கொண்டுவரவேண்டும். பகல் தூக்கத்துக்கு அரை மணி நேரம் போதும். தூக்கப் பிரச்சினை உள்ளவர்கள் மாலையிலும் உடற்பயிற்சி செய்தால் இரவில் நல்ல தூக்கம் வரும். சீக்கிரமே தூங்கி, சீக்கிரமே விழிக்கிற பழக்கம் நல்ல வழிகொடுக்கும்.
Tags:    

Similar News