லைஃப்ஸ்டைல்
மைதா.. பரோட்டா..

மைதா.. பரோட்டா.. வயிற்றுக்குள் கலாட்டா..

Published On 2020-07-09 09:06 GMT   |   Update On 2020-07-09 09:06 GMT
மைதாவை நினைத்துப்பார்க்கும்போது சாலை ஓர கடைகளில் பரோட்டா தயார் செய்வது நம் மனக்கண்ணில் காட்சியாக விரியும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுக்குள் கலாட்டா நடக்கும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்களில் பார்ப்பதற்கு பளபளப்பாக இருப்பது, மைதா மாவு. அவ்வளவு பளபளப்பிற்கு அதில் சேர்க்கும் ரசாயனப் பொருட்கள்தான் காரணம். மைதாவின் மூலப்பொருள் கோதுமைதான். ஆனால் தோலுடன் நன்றாக அரைக்கப்படும் கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் காணப்படும். கோதுமையின் சத்து நிறைந்த தவிடு நீக்கப்பட்டு வெண்மையாக்கப்பட்டதாக கிடைப்பது, மைதா மாவு. அதற்கு கூடுதல் வெண்மையும், மென்மையும் கிடைக்க ரசாயனங்களை சேர்க்கிறார்கள்.

மைதாவை நினைத்துப்பார்க்கும்போது சாலை ஓர கடைகளில் பரோட்டா தயார் செய்வது நம் மனக்கண்ணில் காட்சியாக விரியும். மாவை குழைத்து சவ்வு போல் இழுத்து, புரட்டி, தோசை போல் விரித்து, வீசி பரோட்டா தயார் செய்வதை பார்த்தாலே சாப்பிட்டு பார்க்கவேண்டும் என்ற ஆசை ஏற்படும். ஆனால் இரவில் இதனை சாப்பிட்டால் பெரும்பாலானவர்களுக்கு வயிற்றுக்குள் கலாட்டா நடக்கும்.

தமிழகத்தில் அரிசிக்கும், கோதுமைக்கும் பற்றாக்குறை ஏற்பட்டபோது மைதா இங்கே எட்டிப்பார்த்தது. மைதாவில் பலவிதமான உணவுகளை ஓட்டலின் உள்ளே வைத்து தயார் செய்கிறார்கள். அவை மக்களிடம் பிரபலமாகவில்லை. ஆனால் சாலை ஓரங்களில், மக்களின் கண் முன்னால் மேஜிக் செய்வதுபோல் பரோட்டா தயார் செய்யப்பட்டதால் அது எளிதாக பிரபலமாகிவிட்டது. பலவிதங் களில் தட்டி, தடவி, அடித்து, துவைத்து செய்யப்படும் பரோட்டா நாவிற்கு ருசியை தந்தாலும் வயிற்றுக்குள் போனால் எளிதில் ஜீரணம் ஆகாது. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் ரசாயனங்கள்.

மைதாவிற்கு அதிக வெண்மை நிறம் கிடைப்பதற்காக பென்சோயில் பெராக்சைடு என்ற ரசாயனம் கலக்கப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல என்பதால் பல்வேறு நாடுகள் இதனை கலப்பதற்கு தடைவிதித்திருக்கின்றன. இயற்கையாகவே கெட்டித்தன்மை கொண்ட மைதாவை மென்மைப்படுத்த அலொட்சான் என்ற ரசாயனப்பொருள் சேர்க்கப்படுகிறது. இது கணையத்தில் உள்ள பீட்டா செல்களை சேதப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்பட காரணமாகிறது.

இந்தியாவில் நகரம், கிராமம் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் நீரிழிவு நோய் உரு வாகி, இந்தியாவை ‘உலகின் சர்க்கரை நோயாளிகளின் தலைநகரம்’ ஆக்கியதில் மைதாவிற்கும் பெரும்பங்கு இருப்பதை புரிந்துகொள்ளுங்கள். சர்க்கரை நோய்க்கு வெள்ளைநிற உணவுப் பொருட்களான அரிசி, மைதா, சர்க்கரை ஆகியவை காரணம் என்பது எல்லோரும் தெரிந்த விஷயம். பொதுவாக பார்த்தால் கோதுமையின் தோட்டில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின் சத்து இருக்கிறது. மைதா மாவிற்காக அதனை பாலிஷ் செய்யும்போது அந்த வைட்டமின் சத்து வீணாகிவிடுகிறது.

நாம் எந்த உணவு சாப்பிட்டாலும் அது குடலுக்கு சென்றதும் அங்கு நார்ச்சத்தும், நீர்ச்சத்தும் சேரவேண்டும். சேர்ந்தால்தான் உணவு ஜீரணமாகும். அது அடுத்த 16 மணி நேரத்தில் உடலில் இருந்து கழிவாக வெளியேறிவிடவேண்டும். வெளியேறாமல் தங்கியிருந்தால் அதனால் உள்ளே பாக்டீரியாக்கள் தோன்றி வயிறு, குடல் தொடர்பான நோய்கள் உருவாகி உடலுக்கு பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். இரவில் பரோட்டா சாப்பிட்டால் சரியாக ஜீரணமாகாது. குறிப்பிட்ட நேரத்தில் கழிவாக வெளியேறவும் செய்யாது. அதனால் மலச்சிக்கல், மூலநோய், உடல் குண்டாகுதல் போன்றவை தோன்றும். கூடவே இதயம் தொடர்புடைய பிரச்சினைகளும் தோன்றலாம்.
Tags:    

Similar News