லைஃப்ஸ்டைல்
களிப்புடன் வாழ உதவும் கனிகள்

களிப்புடன் வாழ உதவும் கனிகள்

Published On 2020-04-07 09:03 GMT   |   Update On 2020-04-07 09:03 GMT
இயற்கையால் மனிதருக்கு வழங்கப்பட்ட வரமே கனிகள். தாவரங்கள் வழங்கும் கனியோ, பிணிகள் வராமலேயே விரட்டும் தன்மை உடையன. நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய சில கனிகளைப் பார்ப்போமா...
இயற்கையால் மனிதருக்கு வழங்கப்பட்ட வரமே கனிகள். தாவரங்கள் மூலிகையாய் செயல்பட்டு வந்த பிணியை விரட்டும். ஆனால் தாவரங்கள் வழங்கும் கனியோ, பிணிகள் வராமலேயே விரட்டும் தன்மை உடையன.

நலமாக வாழ நாம் சாப்பிட வேண்டிய சில கனிகளைப் பார்ப்போமா...

நெல்லிக்கனி

‘ஏழைகளின் ஆப்பிள்’ என்று இதனை செல்லமாக அழைப்பார்கள். ஆப்பிளில் இருக்கும் அனைத்து சக்திகளும் நெல்லிக்கனியிலும் உண்டு. இது உடலிலுள்ள கொழுப்பைக் கரைக்கும். சர்க்கரை அளவை குறைக் கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதி கரிக்கும் என்று இதன் பலன்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் சி, இரும்புச்சத்து என இதன் சத்துக்களின் பட்டியலும் நீளும். நெல்லிக்கனியை தினம் ஒன்று வீதம் சாப்பிட்டாலே ஆரோக்கியம் நிச்சயம். ‘முழு நெல்லிக்கனி முன்பு கசக்கும் பின்பு இனிக்கும்’ என்பது நெல்லிக்கனியின் பெருமையை உணர்த்தும் முதுமொழி.

கொய்யாப்பழம்

கனிந்து வீசும் கொய்யாவுக்கு நிகரான மணமில்லை. அதேபோல இதில் அடங்கிய சத்துக்களும் கொஞ்சமல்ல. நார்ச்சத்து, வைட்டமின் ஏ,சி,இ என பல பலன்கள் நிறைந்தது. இவற்றின் விதைகளில் ஒமேகா 3, ஒமேகா 6 போன்ற சத்துக்கள் உள்ளன. இது மூளைக்கும், கண்களுக்கும் நல்லது. கூடவே பொட்டாசியம், மினரல்ஸ், கால்சியம், இரும்பு, புரோட்டீன் என எக்கச்சக்க பலன்களும் கிடைக்கும். குறைந்த விலையில் கிடைக்கும் கொய்யா நிறைந்த பலன்களைத் தரும் என்பது மெய்யே!

பப்பாளி

“மலிவா கிடைச்சா மதிக்க மாட்டாங்க...” என்பதற்கு அருமையான உதாரணம் பப்பாளி பழம்தான். மருத்துவ உலகம் பாராட்டும் மகத்துவம் மிக்க பழவகை பப்பாளி. கால்சியம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து நிறைந்தது. கல்லீரல் புற்று வராமல் காக்கும். நீரழிவு நோயாளிகளும் இதனை சாப்பிடலாம்.

நாவல், இலந்தை

தர்பூசணி உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டின் உடலுக்கு ரொம்பவே நல்லது.

எலும்புகளுக்கு ஏற்றது இலந்தை. இதில் மிகுதியாய் இருக்கும் கால்சியம் பற்களை பலமாக்கும். செரிமானக் கோளாறுகளை போக்கும்.

நாவல் பழத்திற்கு சர்க்கரை நோயைத் தடுக்கும் சக்தி உண்டு. இதன் விதைகளை பொடி செய்து தயிரில் கலந்து சாப்பிட்டால் சர்க்கரை அளவு உடனே கட்டுப்படும். மாதுளம் பழம் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்களில் முக்கிய மானது. இதயத் துக்கும், மூளைக்கும் ரொம்பவே நல்லது.

மா, பலா, வாழை

முக்கனிகளாக நாம் அறிந்த மா, பலா, வாழையும் கனிகளின் அரசன்கள். எப்போதும் கிடைக்கும் வாழையில் ஏராளம் சத்துக்கள் உண்டு. பொட்டாசியம் அதிகமுண்டு.

சுவைகளில் சிறந்த மாங்கனி, நார்ச்சத்தை நமக்கு வழங்கும். வைட்டமின்கள் ஏ,சி,இ, கே, பி6 இதில் உள்ளன. அளவாகச் சாப்பிட்டால் ஆரோக்கியம் நிச்சயம்.

பலா ரத்த அழுத்தம் குறைக்கும் தன்மை உடையது. சோடியம், புரோட்டின், வைட்டமின்கள் ஏ,சி, பி6, இரும்பு, மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்தது. விதைகள் சமையலில் பயன்படும்.

Tags:    

Similar News