லைஃப்ஸ்டைல்
உடல்நலம் காப்போம்

நோயை விரட்டுவோம் உடல்நலம் காப்போம்..

Published On 2020-03-29 04:30 GMT   |   Update On 2020-03-28 04:21 GMT
மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு அவசியம். அவர்களின் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதின் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.
உலக சுகாதார அமைப்பின் தலைமையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7-ந் தேதி உலக சுகாதார தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் 1950-ம் ஆண்டில் உலகெங்கும் முதன்முதலாக கொண்டாடப்பட்டது. உலக அளவில் 422 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது 2040-ல் 642 மில்லியனாக உயரும் என்று உலக சுகாதார நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் இரத்தக் கொதிப்பினால் பாதிக்கப்படும் நோயாளிகள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 20 லட்சம் பேர் அதிகரித்து வருகிறது. இறப்பு விகிதத்தில் உலகில் 17.5 மில்லியன் மக்கள் இதய நோயால் இறக்கின்றனர். இது உலக மக்கள் தொகை இறப்பு விகிதத்தில் மூன்றில் ஒரு பங்காகும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருடத்துக்கு 8 மில்லியன் பேர் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அதில் 2 மில்லியன் பேர் இறக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் மக்களிடையே அதிகம் விழிப்புணர்வு இல்லாதது தான்.

உலக சுகாதார நிறுவனம் மக்களிடையே உடல்நலத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் ஒரு கருத்தை வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டு உலகளாவிய சுகாதார பாதுகாப்பு எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் என்ற கருத்தை குறிக்கோளாக கொடுத்துள்ளது. அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற கோஷத்தை கூறியுள்ளது. மக்களுக்கு ஆரோக்கியமான வாழ்வு அவசியம். அவர்களின் ஆரோக்கியமான பழக்கங்களை மேம்படுத்துவதின் மூலம் பல்வேறு நோய்களில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம். கொசுக்களினால் பரவும் மலேரியா டெங்கு சிக்குன் குனியா போன்ற நோய்கள் வராமல் தவிர்க்கலாம் . இன்று இளைஞர்களிடையே விழிப்புணர்வு இல்லாததால் எச்.ஐ.வி. போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

நாட்டில் இன்று பெரியம்மை நோய் இல்லாமல் செய்து விட்டோம். போலியோ வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வும் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட சீரிய முயற்சியுமே காரணம். முன்பு மனிதனின் சராசரி வயது 55 ஆக இருந்தது. இன்று அது 70 ஆக அதிகரித்தாலும் வயதானவர்கள் தொழில் மற்றும் வேலை காரணமாக தங்கள் குழந்தைகளை உறவுகளைப் பிரிந்து வாழும் சூழ்நிலை நிலவுகிறது. சிலர் வயதான தங்கள் பெற்றோர்களை வலுக்கட்டாயமாக முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் நிலையும் உள்ளது. இதனால் வயதான காலத்தில் அவர்கள் குடும்பத்தைப் பிரிந்து உற்றார் உறவுகளை சந்திக்கமுடியாமல் தனிமை துயரில் மூழ்கி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி நோயின் பிடியில் சிக்கி தவிக்கின்றனர். தங்கள் சேமிப்புகளையும் பென்ஷன் வருமானத்தையும் கூட மருத்துவ செலவுக்கு செலவிடும் சூழ்நிலையில் அவர்கள் கலங்கி தவிக்கின்றனர்.

இன்றைய சூழ்நிலையில் நோய்க் கிருமிகளினால் வரக்கூடிய வியாதிகளைவிட வாழ்க்கை முறை மாற்றங்கள் முறையற்ற உணவு உடற்பயிற்சியின்மை அதிக எடை அதிக மன உளைச்சல் ஆகியவற்றின் காரணமாக சர்க்கரை நோய் இரத்த கொதிப்பு புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய் இருப்பது தெரிந்தும் சிலர் முறையாக சிகிச்சை பெறாமல் அந்நோயின் பின் விளைவிற்கு ஆளாகிறார்கள். இதனால் பணச்செலவும் குடும்பத்தாருக்கு மன உளைச்சலும் ஏற்படுகிறது. எதிலும் அலட்சியப்போக்கு அறியாமையே இதற்கு காரணம். அதனால் தான் உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு உடல் ஆரோக்கியம் எல்லோருக்கும் எல்லா இடங்களிலும் என்ற மையகருத்துடன் மக்களிடையே விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்த பல்வேறு வழிமுறைகளை வகுத்துள்ளது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட வழிவகை செய்ய வேண்டும். மருத்துவ முகாம்களை நடத்தி மக்களின் நோய்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையாக சிகிச்சை அளித்து மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டியிருந்தால் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உரியசிகிச்சை பெற உதவ வேண்டும். இதற்கு தேவை மக்களின் முழு ஒத்துழைப்பும் விழிப்புணர்வும். வள்ளுவர் அதனால் தான் “நோய் நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” என்று கூறினார். இது மருத்துவர்களுக்கு மட்டும் அல்ல. மக்களுக்கும். தங்களுக்கு வந்திருக்கும் நோயை அறிந்து மருத்துவர் கூறியபடி மருந்துகளையும் உணவு முறைகளையும் கடைப் பிடித்தால் நீண்ட ஆயுளுடன் வாழலாம்.

இன்று இளைஞர்கள் பெரிய படிப்புகளை படித்து கடின உழைப்பினால் சம்பாதிக்கின்றனர். ஆனால் சந்தோஷமாக இருக்க வேண்டிய காலத்தில் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சம்பாதித்த பணம் அனைத்தும் மருந்துகளுக்கும் மருத்துவமனைகளுக்கு சென்றுவிடுகின்றன.

“அற்றால் அளவறிந் துண்க அஃதுடம்பு

பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு”

உண்ட உணவு செரித்ததையும் உண்ணும் உணவின் அளவையும் அறிந்து உண்பது நீண்ட நாள் வாழ்வதற்கு வழியாகும் என்று வள்ளுவர் உடல் நல விழிப்புணர்வை பற்றி கூறியிருக்கிறார். குழந்தை பிறந்தவுடன் நோய் வராமல் இருக்க தடுப்பூசிகள் போடப்படுகின்றன. பள்ளிப்பருவத்தில் முழு மருத்துவ பரிசோதனை மற்றும் மாணவர்களுக்கு சத்துணவு கொடுக்கப்படுகிறது. அரசாங்கம் என்ன செய்தாலும் மக்களிடம் விழிப்புணர்வு இல்லை என்றால் பயன் இல்லை. உடல் நலத்துக்கு ஆரோக்கியமான முறையான உணவு முறைகள் அவசியம். உடலுக்கு தேவை உடற்பயிற்சி மனஅமைதிக்கு யோகா தியானபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பெண்களுக்கு வரும் மார்பக புற்றுநோய் கர்ப்ப புற்றுநோய் ஆரம்பகாலத்திலேயே கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்தி விடலாம். நோயற்ற வாழ்வில் நலமுடன் வாழ்வோம் நோயை விரட்டுவோம் உடல்நலம் காப்போம்.

டாக்டர் நா.மோகன்தாஸ் முன்னாள் இந்திய மருத்துவகழக தமிழ்நாடு கிளை தலைவர்.
Tags:    

Similar News