லைஃப்ஸ்டைல்
நீரா பானம்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்

Published On 2020-03-06 07:24 GMT   |   Update On 2020-03-06 07:24 GMT
நீராபானத்தில் காணப்படும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன.
தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து பெறப்படும் ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒருவகை பானம்தான் நீரா. நீரா என்பது பதநீருக்கும் கள்ளுக்கும் இடைப்பட்ட பானம். எனவே இதனை குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி பருகலாம். மேலும் நீராவில் போதை தரும் ஆல்கஹால் 0.0001 சதவீதம் கூட இல்லை என்பது நிதர்சன உண்மையாகும். நீராவை பதநீர் இறக்குவது போல எளிதில் இறக்க முடியாது. 5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் இறக்க வேண்டும். எனவேதான் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ்பெட்டிகளை பொருத்தி சேகரிக்க வேண்டும்.

ஒரு தென்னை மரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 லிட்டர் நீரா இறக்க முடியும். ஒரு மரத்தில் இருந்து 6 மாதங்கள் தொடர்ந்து நீரா இறக்கி விற்கலாம். மேலும் நீராவில் இருந்து மதிப்புக்கூட்டிய பொருட்களான நீரா சர்க்கரை நீரா வெல்லம் நீரா பாகு நீரா தேன் நீரா சாக்லெட் நீரா கேக் மற்றும் நீரா பிஸ்கட் போன்ற பொருட்களையும் உற்பத்தி செய்யலாம். நீராவில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி-12 மற்றும் பொட்டாசியம் மெக்னீசியம் கால்சியம் ஜிங் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை அதிகளவு உள்ளன. நீரா பானத்தை கோடைகாலத்தில் பருகுவதினால் உடல் உ‌‌ஷ்ணத்தினால் ஏற்படும் நீர்ச்சத்து இழப்பை தடுப்பதுடன் உடலின் நீர்ச்சத்தை சமன் செய்து உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவிப்புரிகின்றது. எனவே நீரா பானத்தை கோடை காலத்தில் இயற்கையின் கொடை என்று அழைக்கிறோம்.

நன்மைகள்

நீரா பானத்தில் காணப்படும் உயிர்ச்சத்துக்களான வைட்டமின்கள் மற்றும் தாது உப்புகள் நமது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கின்றன. மேலும் எலும்பு மற்றும் பற்களின் சீரான வளர்ச்சிக்கு உதவிப்புரிகின்றன. தொடர்ந்து நடைபெற்ற ஆராய்ச்சிகளின் முடிவில் நீரா பானத்தில் காணப்படும் அதிகப்படியான பொட்டாசியம் என்னும் தாதுப்பு ஆகியவை இதயத்துடிப்பு இதயம் சீராக இயங்க உதவி செய்வதுடன் நமது உடலின் எல்லா பாகங்களுக்கும் ரத்தம் சீராக சென்று வரவும் உதவி செய்கின்றன. எனவே இதயம் சம்பந்தமான நோய் மற்றும் ரத்த கொதிப்பு போன்றவை ஏற்படாமல் நமது உடலை பாதுகாக்கின்றன.

நீரா பானத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வைட்டமின் ‘சி‘ சத்தும் மற்றும் வைட்டமின் ‘பி1‘ சத்தும் நிறைந்துள்ளன. இச்சத்துக்கள் கண் பார்வை சீராக வைப்பதற்க்கு உதவி செய்கின்றன. மேலும் பி-வைட்டமின்கள் நமது முடி தோல் மற்றும் நகம் போன்றவற்றை ஆரோக்கிய நிலையில் வைக்க உதவி செய்கின்றன. இரும்புச் சத்து நமது செல்களின் சீரான செயல்பாட்டிற்கும் மற்றும் காயப்பட்ட செல்களை சரி செய்து அதன் சீரான வளர்ச்சிக்கும் உதவிபுரிகின்றன.

தாய்மார்களின் உடல் சூட்டை குறைத்து தாய்ப்பால் அதிகமாக சுரக்க நீரா பானம் உதவி புரிகிறது. நீரா பானத்தில் காணப்படும் தாளுப்பான பொட்டாசியம் மெக்னீசியம் இரும்புச்சத்து கால்சியம் ஜிங் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை நமது உடலில் அதிகப்படியான உ‌‌ஷ்ணத்தினால் ஏற்படும் நீர்ச்சத்தின் இழப்பை தடுத்து உடலில் நீர்ச்சத்தை சமன் செய்வதுடன் உடல் குளிர்ச்சியாக வைக்கவும் உதவிப்புரிகிறது. இந்த தகவலை முனைவர் மகேந்திரன் உதவி பேராசிரியர் அதியமான் ஆகியோர் தெரிவித்துள்ளனர். 
Tags:    

Similar News