லைஃப்ஸ்டைல்
இதனாலும் உடல் எடை கூடும்...

இதனாலும் உடல் எடை கூடும்...

Published On 2019-11-07 07:48 GMT   |   Update On 2019-11-07 07:48 GMT
உணவுமுறையும், சில வகையான உணவுகளும் உங்களின் உடல் எடையை அதிகரிக்கும். எந்த உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
உப்பு அதிகம் உள்ள உணவுகள் உடல் எடையை அதிகரிக்கும். கலவை சாதம், வற்றல், வடகம், முறுக்கு, சிப்ஸ், சாஸ், கெட்சப், ஊறுகாய், தொக்கு, கருவாடு, காய்ந்த நார்த்தங்காய், நூடுல்ஸ், சூப் மிக்ஸ், சாலட் உள்ளிட்டவை அதிக உப்புச்சத்து கொண்டவை.

அதிகப்படியான சோடியம், உடலின் நீர்ச்சத்தைத் தேக்கிவைத்து, எடையை அதிகரித்துக் காட்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்கா விட்டாலும், நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடாவிட்டாலும் வயிறு கனத்து உப்புசமும் மலச்சிக்கலும் ஏற்படும். குடலைச் சுத்தப்படுத்தி, கழிவுகளை அவ்வப்போது வெளியேற்ற வேண்டியது ஆரோக்கியத்துக்கு அடிப்படை. உங்கள் உணவில் முழு தானியங்கள், நார்ச்சத்துள்ள பழங்கள், காய்கறிகள் அவசியம் இடம்பெற வேண்டும். ஆளிவிதை பவுடர், கோதுமைத் தவிடு, ஓட்ஸ் தவிடு போன்றவை எக்ஸ்ட்ரா நார்ச்சத்துக்கு உதவும்.

அரிசி, கிழங்கு வகை, சுண்டல் போன்று கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகள் ஆற்றலுடன், நீர்ச்சத்தையும் சேமித்துவைக்கக் கூடியவை. சேமித்து வைக்கப்படுகிற கார்போஹைட்ரேட் ‘கிளைகோஜென்’ எனப்படுகிறது.

ஒவ்வொரு கிராம் கார்போஹைட்ரேட்டுடன் 3 கிராம் நீர்ச்சத்தும் சேமித்து வைக்கப்படும். இதுவும் எடையை அதிகரித்துக் காட்டும். ஒவ்வொரு முறையும் ஒரே நேரத்தில் எடையைச் சரிபார்க்க வேண்டும். காலை முதல் இரவு வரை எடையில் மாறுதல்கள் இருக்கும். ஹார்மோன்களும் உணவுகளும் எடையை பாதிக்கலாம். அடுத்தமுறை எடை பார்க்கும்போது நேரத்தையும், அணிந்திருக்கும் உடையையும் கவனியுங்கள். ட்ராக் பேன்ட், டி-ஷர்ட் மாதிரியான கனமில்லாத உடைகளை அணிந்து எடை பார்ப்பது சிறந்தது.

மனநல பிரச்சினைகள், குழந்தையின்மை போன்றவற்றுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளாலும் எடை அதிகரிக்கலாம். கடுமையான ஒவ்வாமை காரணமாக வயிற்று உப்புசமும், கனத்த உணர்வும் ஏற்படும். இதனாலும் எடை கூடும்.

மதுப்பழக்கம் இருந்தால் கொழுப்பு உடைகிற செயல்பாடு சரியாக நடக்காது. சிந்தனை மாறும். ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்கள் மது பழக்கத்தை தவிர்ப்பது மிக அவசியம். உடலில் சேரும் நச்சுகளாலும், அதிகப் படியான ரசாயனங்களாலும் எடை கூடலாம். பிளாஸ்டிக்கில் உள்ள பிஸ்பெனால் ‘ஏ’ ஓர் உதாரணம். டெஸ்ட்டோஸ் டீரான், இன்சுலின், தைராய்டு மற்றும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன்களின் செயல்பாடுகளை இது பாதிக்கும். காய்கறிகள், பழங்கள், மசாலா பொருட்கள், நிறத்துக்காக உணவில் சேர்க்கப்படும் பொருட்கள் போன்றவற்றிலும் ரசாயனங்கள் இருக்கின்றன. இவற்றின் பயன்பாடு ஹார்மோன்களின் இயக்கத்தை பாதித்து, எடையில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

தடையில்லாத, ஆழ்ந்த உறக்கம் எடையைக் குறைப்பதில் பெரிதும் உதவும். அப்படிப்பட்ட தூக்கம், உடலையும் மனதையும் பழுதுபார்க்கும். ரத்தச் சர்க்கரையின் அளவைச் சமநிலையில் வைக்கும். ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, எடை ஏறாமலும் காக்கும். நல்ல தூக்கத்துக்குக் காரணமான மெலட்டோனின் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்க, மொபைல், லேப்டாப், டி.வி. பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும். படுக்கை அறையில் வெளிச்சம் ஊடுருவுவதைத் தவிர்க்க அடர்நிற திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
Tags:    

Similar News