லைஃப்ஸ்டைல்
அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் கண்ணாடி பாத்திரங்கள்

அழகும் ஆரோக்கியமும் அளிக்கும் கண்ணாடி பாத்திரங்கள்

Published On 2019-10-24 07:47 GMT   |   Update On 2019-10-24 07:47 GMT
உணவுப்பொருட்களை கண்ணாடி பாத்திரங்களில் சேமித்து வைப்பது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. கண்ணாடி பாத்திரங்கள் உபயோகிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
நாம் சமையலறையில் பல பொருட்களை சேமித்து வைக்கிறோம். மளிகை பொருட்கள், மசாலா பொருட்கள், மாவுப் பொருட்கள், எண்ணெய் என்று. இவற்றையெல்லாம் பிளாஸ்டிக்கை தவிர்த்து கண்ணாடி பாத்திரங்களில் சேமித்து வைப்பது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்களில் போட்டுவைக்கலாம். ஆனால் அவற்றுள் என்ன இருக்கிறது, எவ்வளவு இருக்கிறது என்பதை திறந்து பார்த்தால் மட்டுமே தெரியும் என்பது அதன்குறை. கண்ணாடி பாத்திரங்கள் உபயோகிப்பதால் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

அழகான தோற்றம்

சுத்தமாகவும், பளிச்சென்றும் பளிங்கு போல் உள்ள கண்ணாடி பாத்திரங்களை பார்த்தாலே பரவசம் தான். அவற்றுள் வித்தியாசமான வடிவங்களிலும் விதவிதமான மூடிகளினாலும் வரும் கண்ணாடி குவளைகள் இன்னும் அழகானவை. கண்ணாடி பாத்திரங்களில் வண்ணமயமான பொருட்களை போட்டுவைத்து பார்க்கும்போது பார்க்க மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

உணவை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும்

கண்ணாடி பாத்திரத்தில் வைக்கும் உணவு பொருட்கள் சுத்தமாக இருக்கும். பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவு பொருட்களை நீண்ட நாட்கள் வைத்திருக்கும் போதும், மைக்ரோவேவனில் சூடு செய்யும் போதும் பிளாஸ்டிக்கின் தன்மை உணவில் ஊடுருவி விடும். கண்ணாடி பாத்திரத்தின் மேற்பரப்பு மென்துளைகள் இல்லாமல் இருப்பதால் அதில் உணவுப் பொருளின் தன்மைகள் ஊடுருவதில்லை. எனவே உணவின் ரசாயன பொருள் எதுவும் கண்ணாடிபாத்திரத்தின் மேற்பரப்பில் ஒட்டுவதில்லை.

உணவின் சுவை மற்றும் மணத்தை தக்கவைக்கும்

கண்ணாடிப் பாத்திரத்தில் சூடு செய்வதாலும், ஃபிரிட்ஜில் வைத்து குளிரச் செய்தாலும் உணவுப் பொருளின் வாசனையும் சுவையும் அப்படியே இருக்கும். பாத்திரத்தின் தன்மை எதுவும் உணவு பொருட்களுக்கு மாறுவதில்லை.

சுத்தம் செய்வது சுலபம்

உணவுப் பொருளின் ராசாயனத்தன்மை கண்ணாடியில் ஊடுருவதில்லை எனவே கண்ணாடிப் பாத்திரத்தை சுத்தம் செய்வது சுலபம். எந்த நிறமிகள் கொண்ட உணவு வகையானாலும், சோப்பும் தண்ணீரும் கொண்டு கழுவிவிட்டால் மீண்டும் பளிச்சென்று சுத்தமாக மாறிவிடும்.

கண்ணாடிப்பொருட்கள் சுற்றுச்சூழலுக்கும் உகந்தது. நாம் எவ்வளவு வருடமானாலும் உடையாத வரைக்கும் கண்ணாடி பாத்திரங்களை தொடர்ந்து உபயோகிக்கலாம். கண்ணாடி பொருள் உடைந்தாலும் அதை மீண்டும் மறுசுழற்சி மூலம் புதிய பொருட்களை தயாரிக்கலாம். மறுசுழற்சி கண்ணாடி 40 சதவீதம் குறைவான சக்தி பயன்படுத்தியே செய்துவிட முடியும்.

கண்ணாடி பாத்திரங்கள் உணவு பொருட்களை சேமித்துவைக்கும் பாட்டில்களாகவும், கிண்ணம், அகலமான கிண்ணங்கள், தட்டுகள், டீ கப்கள், டம்ளர்கள், அடுப்பில் வைத்து சூடு செய்யும் குடுவை, கிண்ணம் என்றெல்லாம் பயன்படுத்தலாம். கண்ணாடி குடுவைகளுக்கு ரப்பர், நச்சுத்தன்மை இல்லாத பிளாஸ்டிக், ஸ்டீல் மற்றும் கண்ணாடி மூடிகளை பயன்படுத்தி உபயோகிக்கலாம்.
Tags:    

Similar News