லைஃப்ஸ்டைல்
மன நோயை குணப்படுத்தலாம்

மன நோயை குணப்படுத்தலாம்

Published On 2019-08-27 07:55 GMT   |   Update On 2019-08-27 07:55 GMT
ஒரு சம்பவம் மறக்க முடியாததாக இருந்து, அதனால் ஏற்படும் அதிர்ச்சி, கிளர்ச்சி, சந்தோஷம், துக்கம், வெறுப்பு, ஈர்ப்பு, சகிப்பு, அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மன நல பாதிப்பு ஏற்படும்.
மன நல பாதிப்பு என்பது வேறு, மன நோய் என்பது வேறு. ஒரு சம்பவம் மறக்க முடியாததாக இருந்து, அதனால் ஏற்படும் அதிர்ச்சி, கிளர்ச்சி, சந்தோஷம், துக்கம், வெறுப்பு, ஈர்ப்பு, சகிப்பு, அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களால் மன நல பாதிப்பு ஏற்படும்.

எனினும், இது தற்காலிகமானது தான். ஓரிரு நாட்களில் மறைந்து விடும். அதிகபட்சம் ஒரு வாரத்தில் முடிவுக்கு வரும். இதற்கு சிகிச்சை தேவையில்லை. ஆனால் மன நோய்க்கு சிகிச்சையால் மட்டுமே தீர்வு காண இயலும். இதற்கு ‘இந்திய மன நல மருத்துவ சட்டம்‘ இடமளிக்கவில்லை. இந்த சட்டம் 2017 ஏப்ரல், 27-ல் அமலானது. இந்த சட்டத்தின்படி சிகிச்சைக்கு மறுக்கும் மன நோயாளியை கட்டாயப்படுத்தி சிகிச்சை அளிக்கவோ அல்லது மருந்து கொடுக்கவோ கூடாது.

அப்படி செய்வது குற்றமாக கருதப்படும். ‘மன நோயாளி‘ என மன நல மருத்துவரிடம் சான்று பெற்று உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும். இந்த சட்டத்தில் சில திருத்தங்கள் செய்தால் மட்டுமே மன நோயாளிக்கான சிகிச்சை எளிமையாகும் என்பது குறித்து மன நல மருத்துவர்கள் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

மன நோய்க்கு மன நல மருத்துவரிடம் முறைப்படி தொடர்ந்து சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். ஒரு வாரம், ஒரு மாதம் என ஒருமுறை மருந்து உட்கொள்ளும் எளிய சிகிச்சை முறைகள் வந்து விட்டன.

இந்த மருந்துகள் சுவை, நிறம் இல்லாத பவுடராகவும், மாத்திரைகளாகவும் கிடைக்கிறது. இவற்றை மன நல மருத்துவரின் ஆலோசனைப்படி உணவில் கலந்து கொடுக்கலாம். இதனால் உணவின் சுவை மாறாது. இந்த மருந்துகளை மன நோயாளிக்கு தெரிந்தும், தெரியாமலும் கொடுக்க முடியும்.

மரபணு, பாரம்பரியம் போன்ற காரணங்களால் மன நோய் வரலாம். மூளை கட்டி, சர்க்கரை நோய், விபத்தில் ஏற்படும் தலைக்காயம் போன்றவற்றாலும் மன நோய் வரலாம். மன நல மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும். மாந்திரீகம், வழிபாட்டு தலங்களில் தங்க வைப்பது போன்றவற்றில் நம்பிக்கை கொண்டிருந்தாலும் முறையான சிகிச்சை எடுத்து கொள்ள வேண்டும்.

தொந்தரவு செய்யாத மன நோயாளியை, அவர் போக்கிலேயே விட்டு விடுவது தவறு. முறையான சிகிச்சை பெற வைக்க வேண்டும். தொடக்கத்திலேயே நோய்க்கான காரணத்தை கண்டறிந்து சிகிச்சை அளித்தால் பூரணமாக குணப்படுத்த முடியும். நோய் முற்றிய நிலையில் சிகிச்சை மேற்கொள்வது, நோயாளிக்கும், அவருக்கு உதவுபவருக்கும் சிரமத்தை ஏற்படுத்தும். நோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்த்து தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். 
Tags:    

Similar News