லைஃப்ஸ்டைல்
அதிக உடல் எடை குழந்தைகளின் படிப்பை பாதிக்கும்

அதிக உடல் எடை குழந்தைகளின் படிப்பை பாதிக்கும்

Published On 2020-01-02 06:39 GMT   |   Update On 2020-01-02 06:39 GMT
உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். அதிக உடல் எடை, குழந்தைகளைப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் பின்தங்க வைப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
எல்லா விதத்திலும் வசதிகள் பெருகிக்கொண்டே வருவதும் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க முக்கியக் காரணம். உடல் செயல்பாடுகள் என்பது இப்போதுள்ள குழந்தைகளிடம் குறைந்துவருகிறது. எல்லாவற்றிலும் நவீன வசதிகள் வந்தபிறகு, அவற்றைப் பயன்படுத்தவே அவர்களும் விரும்புகிறார்கள். இதனால் சாப்பிடும்போது உடலில் சேரும் கலோரிகள் அப்படியே இருப்பதால், உடல் பருமன் அதிகரிக்கிறது. எந்த அளவுக்கு உணவில் கலோரிகளை எடுத்துக்கொள்கிறோமோ அந்த அளவுக்கு உடல் உழைப்பும் அவசியம். இது, தற்போதுள்ள பெரும்பாலான குழந்தைகளிடம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. முன்பெல்லாம், பெற்றோர்கள் குழந்தைகளை வேலைவாங்குவார்கள். ஆனால், இப்போது குழந்தைகள் பெற்றோரை வேலைவாங்கும் நிலை வந்துவிட்டது.

உடல் எடை அதிகரிக்க மற்றொரு காரணம் ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட் ஃபுட் எனப்படும் குப்பை உணவுகள். குழந்தைகள், உணவின் சுவைக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள் என்பதால், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் குப்பை உணவுகளையே அதிகம் விரும்புகின்றனர். பெற்றோர்களும் இவற்றை வாங்கிக்கொடுத்து ஊக்கப்படுத்துகின்றனர் என்பது வருத்தமளிக்கும் விஷயம். பெரும்பாலும், அம்மா அப்பா இருவரும் வேலைக்குச் செல்லும் வீட்டில் குழந்தைகளுக்கு ரெடிமேட் உணவு வகைகளைச் சமைத்துத் தருகின்றனர். அவை உடல் எடையை அதிகரிப்பதுடன், பல நோய்களுக்கும் காரணமாகின்றன.

உடல் எடை அதிகரிப்பதால், ஒரு குழந்தைக்கு இதய நோய் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. மேலும், படிப்பில் ஆர்வம் குறைதல், கவனச்சிதறல், விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வமின்மை போன்றவை ஏற்படலாம். உடல் பருமனாகும்போது, அந்த எடையை எலும்புகள் தாங்க முடியாமல் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் ஏற்படலாம். இதுபோன்ற பலவிதமான பிரச்னைகள் உடல் பருமனால் குழந்தைகளுக்கு ஏற்படலாம்.

மாடிப்படிகள் ஏறுவது மிக முக்கியமான உடற்பயிற்சி. ஆனால், இப்போதுள்ள குழந்தைகள் லிஃப்ட்டை மட்டும் தான் உபயோகிக்கிறார்கள். குழந்தைகள் மாடிப்படிகள் ஏறி இறங்குவதைப் பெற்றோர்கள் ஊக்கப்படுத்த வேண்டும். அவர்கள் ஓடியாடி விளையாடுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். எந்நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்திருக்க அனுமதிக்கக் கூடாது.

இப்போது, நாட்டில் நிலவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலையில், பலர் குழந்தைகளை வெளியில் விடவே பயப்படுகிறார்கள். எனவே, குழந்தைகளைக் குறை கூறி ஒரு பயனும் இல்லை. ஒரு பிரச்னையைத் தீர்க்க, அதை எதிர்கொள்ள வேண்டுமே தவிர ஓடி ஒளியக்கூடாது. குழந்தைகளை வெளியில் விளையாட அனுப்புவதில் தவறில்லை. ஆனால், எப்போதும் அவர்கள்மீது ஒரு கண் இருந்துகொண்டே இருக்க வேண்டும்.

சில குழந்தைகள் மரபு ரீதியில் பருமனாக இருக்கலாம். இருந்தாலும் அவர்கள் உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் சரிசெய்வதன் மூலம் உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

குழந்தைகளுக்கு குப்பை உணவுகளைத் தவிர்த்து, காய்கறிகளையும் தானியங்களையும் சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியமாக வளருவார்கள். அதை அவர்கள் விரும்பிச் சாப்பிடும் வகையில் சமைத்துத் தருவதிலேயே பெற்றோர்களின் திறமை மறைந்துள்ளது. டிராஃபிக் நிற காய்கறிகள் எனப்படும் பச்சை, மஞ்சள், சிவப்பு நிற காய்கறிகளும் பழங்களும் உடலுக்கு மிகவும் நல்லது.

இது தவிர, பருமனாக உள்ள குழந்தைகளை எளிய உடற்பயிற்சிகள் செய்ய ஊக்கப்படுத்தலாம். உடல் பருமன் பெரியவர்களை மட்டுமல்ல சிறுவர்களையும் பாதிக்கும். எனவே, இதுபற்றிய விழிப்புணர்வு பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்பட வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட உணவுப் பழக்கமும் வாழ்க்கை முறையும், உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்பதே உண்மை.
Tags:    

Similar News