தங்க காப்பு அலங்காரத்தில் கொளஞ்சியப்பர்.கொடியேற்றம் நடைபெற்றபோது எடுத்த படம்.
விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
- 3-ந்தேதி தேர் திருவிழா நடக்கிறது.
- 4-ந்தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. பல சிறப்புகளை உடைய இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கடந்த 24-ந்தேதி கிராம தேவதைகளான அய்யனார் மற்றும் செல்லியம்மன் சுவாமிகளுக்கு காப்பு கட்டு உற்சவம் நடந்தது. தொடா்ந்து நேற்று நடைபெற்ற விழாவில் சித்தி விநாயகர் மற்றும் கொளஞ்சியப்பருக்கு பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சித்தி விநாயகர் வெள்ளி காப்பு அலங்காரத்திலும் கொளஞ்சியப்பர் தங்க காப்பு அலங்காரத்திலும் அருள்பாலித்தனர்.
தொடர்ந்து கோவில் கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து விழாவுக்கான கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 10 நாட்கள் நடைபெறும் விழாவில் தினசாி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சாமி வீதிஉலாவும் நடைபெறுகிறது. மேலும் 3-ந்தேதி(திங்கட்கிழமை) தேர் திருவிழாவும், 4-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழாவும் நடைபெற உள்ளது. அன்று இரவே கொடி இறக்கமும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.