வழிபாடு

உடுமலை திருப்பதி கோவில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு விழா

Published On 2022-07-02 03:34 GMT   |   Update On 2022-07-02 03:34 GMT
  • ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.
  • விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.

உடுமலை தளி சாலையில் பள்ளபாளையம் அருகில் இயற்கை எழில் சூழ்ந்துள்ள செங்குளம் கரைப்பகுதியில் அமைந்துள்ளது உடுமலை திருப்பதி ஸ்ரீவேங்கடேசப் பெருமாள் கோவில். இந்த கோவில் கும்பாபிஷேக 4-ம் ஆண்டு விழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. விழாவையொட்டி பத்மாவதி தாயார், ஆண்டாள், விஷ்வக்சேனர், லட்சுமி ஹயக்ரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரிப் பெருமாள், கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலையில் கள்ளப்பாளையம் சீனிவாசப்பெருமாள் பஜனை கோஷ்டியினரின் பஜனை மற்றும் பிருந்தாவனம் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று ஹோமம், நவகலசஸ்தாபிதம், வேங்கடேசப்பெருமாள் மூலவர், உற்சவர் திருமஞ்சனம், வேங்கடேசப்பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. பின்னர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

விழாவையொட்டி புலவர் குரு.சுபாசு சந்திரபோசு எழுதிய பெருமாள் திருமொழி என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது. விழாவிற்கு உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர் எம்.வேலுச்சாமி தலைமை தாங்கினார். உடுமலை வர்த்தக சபை தலைவர் ஆர்.அருண்கார்த்திக் வரவேற்று பேசினார். உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் வி.ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்து, பெருமாள் திருமொழி நூலின் முதல்பிரதியை வெளியிட அதை அறங்காவலர் எம்.அமர்நாத் பெற்றுக்கொண்டார்.

2-வது பிரதியை அர்ச்சுனேஸ்வரர் அறக்கட்டளை தலைவர் யு.கே.பி.முத்துக்குமாரசாமியும், 3-வது பிரதியை உடுமலை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதரும் பெற்றுக்கொண்டனர். டி.கோவிந்தராஜ், நந்தகோபால் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். நூலாசிரியர் புலவர் குரு.சுபாசு சந்திரபோசு ஏற்புரையாற்றினார். சற்குருநாதன் நன்றி கூறினார். கோவில் கும்பாபிஷேக ஆண்டுவிழா நிகழ்ச்சிகளில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News