வழிபாடு

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

Published On 2022-10-07 04:57 GMT   |   Update On 2022-10-07 04:57 GMT
  • பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
  • திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சூரசம்ஹார நிகழ்ச்சி முடிந்த பின்னர், திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் இந்தாண்டு தசரா திருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடந்தது. இத்திருவிழாவில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பங்கேற்று, விடிய விடிய அம்மனை தரிசனம் செய்தனர்.

இதையடுத்து நேற்று அதிகாலை முதல் திரளான பக்தர்கள் அங்கிருந்து கார், வேன்கள், பஸ்கள் மூலம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்து குவிந்தனர். பக்தர்கள் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் பலமணிநேரம் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.

இதனால் பக்தர்கள் வந்த கார்கள், வேன்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களால் கார் பார்க்கிங் நிரம்பியதால், ரதவீதிகள், ரெயில் நிலையம், தெப்பக்குளம் பகுதிகளில் ஆங்காங்கே சாலையோரங்களில் நிறுத்தப்பட்டிருந்தன. இதை தொடர்ந்து காலை முதல் திருச்செந்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும், திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி, மதுரை மார்க்கமாக சென்ற வாகனங்கள் நெல்லை சாலை வழியாக சென்று ராணிமகாராஜபுரம், அடைக்கலாபுரம் சென்று மதுரை சாலையில் திருப்பி விடப்பட்டன. நேற்று மாலை வரை திருச்செந்தூரில் வாகன நெரிசல் காணப்பட்டது.

போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர். நெல்லை, தூத்துக்குடியிலிருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

Tags:    

Similar News