வழிபாடு

ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கும்ப கலச ஊர்வலம்

Update: 2022-07-02 04:09 GMT
  • கடந்த 7 வருடமாக சாமி சிலைகள் பாலாலய சன்னிதியில் இருந்தது.
  • கும்பாபிஷேகத்தையொட்டி அங்கிருந்த சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 6-ந் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி கும்பாபிஷேக விழா கடந்த 29-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பூஜை நடந்து வருகிறது. 2-வது நாள் விழாவில் பாலாலய சன்னிதியில் இருந்து சாமி சிலைகள் கருவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

3-வது நாளான நேற்று காலையில் கணபதி ஹோமம், சாந்தி ஹோமம், அற்புத சாந்தி ஹோமம் ஆகியன நடந்தது. மேலும் கிருஷ்ணன், குலசேகர பெருமாள் சன்னிதிகளில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. கிருஷ்ணன் கோவிலில் தயார் ஆன 7 கிலோ எடை கொண்ட வெள்ளியிலான ஆதிகேசவ பெருமாள் ஸ்ரீபலி விக்கிரகம் மற்றும் கோவில் விமானத்தில் பொருத்தப்பட வேண்டிய 7 தங்கமுலாம் பூசப்பட்ட கும்ப கலசங்கள் உபயதாரரிடம் நேற்று மாலை ஆற்றூர் கழுவன் திட்டையில் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அங்கிருந்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் செண்டை மேளம் முழங்க முத்துக்குடையுடன் கும்ப கலச ஊர்வலம் புறப்பட்டது. திருவட்டார் பாலம், தபால் நிலைய சந்திப்பு, நான்கு முனை சந்திப்பு வழியாக கோவில் மேற்குவாசல் வழியாக கொண்டு வரப்பட்டு கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவில் கொல்கத்தா முகுல் முகர்ஜியின் பரத நாட்டியம் நடந்தது. 4-வது நாளான இன்று (சனிக்கிழமை) காலை கணபதி ஹோமம் உள்பட பல்வேறு பூஜைகளும், மாலையில் ஹரே கிருஷ்ணா ராம நாம சங்கீர்த்தனமும், இரவு கிருஷ்ணகதா நடனமும் நடக்கிறது.

கடந்த 7 வருடமாக சாமி சிலைகள் பாலாலய சன்னிதியில் இருந்தது. தற்போது கும்பாபிஷேகத்தையொட்டி அங்கிருந்த சிலைகள் கருவறைக்கு கொண்டு செல்லப்பட்டன. இதனை தொடர்ந்து பாலாலய சன்னிதியில் சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அது சிவன் சன்னிதியாக மாற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News