வழிபாடு

மலை உச்சியில் ஒளிரும் நெய் தீபம்

Update: 2022-12-06 06:37 GMT
  • புராணக் கதை ஒன்று திருவண்ணாமலைக்கு உண்டு.
  • இம்மலையின் உயரம் 2,688 அடி என்கிறது தல வரலாறு.

கார்த்திகை திருநாளன்று அண்ணாமலையார் தீபம் மலையின் மீது ஏற்றப்படும். நிலம், நீர், காற்று, ஆகாயம், தீ ஆகிய ஐம்பூதங்களில் அக்னித் தலமான திரு அண்ணாமலையில் ஈஸ்வரன், அருணாசலேஸ்வரன் என்ற திருநாமம் கொண்டு சிறப்பாகக் காட்சி அளிக்கிறார். அம்பாள் திருநாமம் உண்ணாமுலை.

புராணக் கதை ஒன்று இந்தத் திருவண்ணாமலைக்கு உண்டு. பிரம்மனுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற போட்டி ஏற்பட, தானே பெரியவன் என்றார் சிவன். இதனை நிரூபிக்க, நெருப்புக் கோளமாய் ஆகாயத்துக்கும் பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்தார் சிவன். தனது அடியையோ முடியையோ கண்டுவிட்டால் அவரே உயர்ந்தவர் என்றாராம் சிவன். ஜூவாலையின் அடி தேடிப் போனாராம் விஷ்ணு.

முடி தேடிப் போனாராம் பிரம்மா. சிவன் தலையில் இருந்த தாழம்பூ விழ, அதனைப் பொய் சாட்சியாக்கினாராம் பிரம்மா. இதனால் கோபம் அடைந்த சிவன் பிரம்மனுக்குக் கோயில் கிடையாது எனச் சாபமிட்டாராம். பொய் சாட்சி கூறிய தாழம்பூ சிவனுக்குப் படைக்கத் தகுதி இழந்தது. அந்த ஜூவாலை தோன்றிய இடமே திருவண்ணாமலை என்கிறது தலப் புராணம். ஆண்டுக்கு ஒரு முறை மலையின் உச்சியில் வெட்டவெளியில் ஏற்றப்படும் தீபம், எந்தப் புயல், மழை, காற்றுக்கும் அணையாது என்பது நிதர்சனம்.

மனநலம்

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமியன்று திருவண்ணாமலை கிரிவலம் வரும் பக்தர்கள் தீபத்தன்று அதனை மிகுந்த விசேஷமாகக் கருதுகின்றனர். திருவண்ணாமலையில் மலையே தெய்வமாகக் கருதப்படுவதால் மலைவலம் வரும் பக்தர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்காகும். அருணன் என்றால் சூரியன், நெருப்பின் நிறமான சிவப்பைக் குறிக்கும். அசலம் என்றால் கிரி என்றும் மலை என்றும் பொருள். எனவே அருணாசலம் என்றால் சிவந்த நிறத்தையுடைய மலை என்று பொருள். இம்மலையின் உயரம் 2,688 அடி என்கிறது தல வரலாறு. அண்ணாமலையானது கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறி வந்துள்ளது என்று மேலும் தெரிவிக்கிறது அத்திருத்தல வரலாறு.

கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர்.

இம்மலையில் இன்றும் பல சித்தர்கள், யோகிகள் வாழ்ந்து வருவதாக நம்பப்படுவதால், பவுர்ணமியன்று கிரிவலம் வருவது சிறந்த பலன்களை அளிக்கும் என்பது ஐதீகம். வலம் வரும்போது, கையில் கத்தையாக ஊதுவத்தி ஏற்றி எடுத்துக் கொண்டால், கண்ணுக்குத் தெரியாத எதிர்ப்படும் சித்தர்களுக்கு, இந்த வாசனைப் புகையை அர்ப்பணிக்க முடியும். நிலவின் குளிர் கதிருடன், காற்றில் கலந்து வரும் மூலிகையின் மணம் மனத்திண்மையை அளித்துக் காரிய வெற்றிக்கு உறுதுணையாக இருப்பதாக நம்புவதால், பக்தர்கள் கிரிவலம் செய்ய வருகிறார்கள்.

Tags:    

Similar News