வழிபாடு

ஸ்ரீசக்கரத்திற்கு பதில் காதணி

Published On 2023-05-16 14:48 IST   |   Update On 2023-05-16 14:48:00 IST
  • திருவானைக்காவல் திருத்தலத்தில் உள்ளது, ஜம்புகேஸ்வரர் ஆலயம்.
  • அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும்.

திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் திருத்தலத்தில் உள்ளது, ஜம்புகேஸ்வரர் ஆலயம். இந்த ஆலயத்தில் அருள்பாலிக்கும் அம்பாளின் திருநாமம் அகிலாண்டேஸ்வரி என்பதாகும். முன் காலத்தில் இத்தல அம்பாள் உக்கிர கோலத்தில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. பொதுவாக அம்பாளின் உக்கிரத்தை சாந்தப்படுத்த, ஸ்ரீசக்கரத்தை பிரதிஷ்டை செய்வார்கள்.

ஆனால் இந்த ஆலயத்திற்கு வந்த ஆதிசங்கரர், ஸ்ரீசக்கரத்திற்கு பதிலாக, இரண்டு தாடங்கங்களை (காதில் அணியும் அணிகலன்) ஸ்ரீசக்கரம் போல் உருவாக்கி, அம்பாளுக்கு பூட்டிவிட்டார். இதையடுத்து அம்பாள் சாந்தமானாள். மேலும் உக்கிரமான தாயை, பிள்ளைகளான விநாயகரும், முருகப்பெருமானும் சாந்தப்படுத்தும் வகையில், அம்பாளுக்கு எதிரே விநாயகரையும், பின்புறம் முருகப்பெருமானையும் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தார்.

இந்தக் கோவிலில் ஜம்பு தீர்த்தக்கரையில், முருகப்பெருமான் வீற்றிருக்கிறார். இவர் எங்கும் இல்லாத வகையில் தன்னுடைய காலுக்கு அடியில் ஒரு அசுரனை மிதித்து அடக்கிய நிலையில் காணப்படுகிறார். இத்தலம் வந்த அருணகிரிநாதர், தனக்கு காமம் என்னும் எதிரியால் தொந்தரவு வரக்கூடாது என்று வேண்டியிருக்கிறார். இதையடுத்து காமத்தை ஒரு அசுரனாக்கிய முருகப்பெருமான், அந்த அசுரனை தன் காலில் போட்டு மிதித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். முருகப்பெருமானின் இந்த அமைப்பை வேறு எங்கும் காண முடியாது.

Similar News