வழிபாடு

திருமங்கலம் அருகே ஆயிரம் கண்ணுடையாள் கோவில் பூக்குழி திருவிழா

Published On 2022-08-09 08:28 GMT   |   Update On 2022-08-09 08:28 GMT
  • ஆடி பூக்குழி பெருந்திருவிழா வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது.
  • 12-ம்தேதி 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

திருமங்கலம் அருகே தி.புதுப்பட்டி சக்திபுரம் ஆயிரம் கண்ணுடையாள் மகா சக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி பூக்குழி பெருந்திருவிழா வருகிற 11-ந்தேதி தொடங்குகிறது. முதல் நாள் வருகிற 11-ம் தேதி (வியாழக்கிழமை) காலை உலக நன்மை வேண்டி சிறப்பு வேள்வி, சிறப்பு பூஜையுடன் விழா தொடங்குகிறது.

அன்று மாலை 4 மணிக்கு பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தல் நடைபெறுகிறது. திருவிழாவின் 2-ம் நாள்(வெள்ளிக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்ட 41 அடி நீள பூக்குழியில் ஸ்ரீஅம்மா இறங்கி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

காலை 7 மணிக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலம் வந்து, 9 மணிக்கு மாரியம்மனுக்கு பாலாபிஷேகம் மற்றும் பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இதைதொடர்ந்து முளைப்பாரி எடுத்து பக்தர்கள் ஊர்வலம் நடைபெறும். திருவிழாவின் 3-ம் நாள் சனிக்கிழமை காலை 7 மணிக்கு தேவி கருமாரியம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பக்தர்கள் கஞ்சிக்கலயம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், காலை 10 மணிக்கு கஞ்சி கலயத்தை ஸ்ரீஅம்மா எடுத்து அன்னைக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்கிறார்கள்.

இதைதொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் மஞ்சள், குங்குமம், வளையல், தாலிகயிறு வழங்கப்படுகிறது.

விழாவின் சிறப்பு அம்சமாக 3 நாட்களும் கோவிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் நடைபெறும். 3 நாள் நடைபெறும் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஆயிரம் கண்ணுடையாள் மகாசக்தி பீட நிர்வாகிகள் மற்றும் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News