வழிபாடு

திருச்செந்தூருக்கு காவடி எடுத்து சென்ற சிறுமி.

நெல்லையில் குவிந்த பாதயாத்திரை பக்தர்கள்: தாமிரபரணி ஆற்றில் புனித நீராடிச்சென்றனர்

Update: 2023-02-03 06:08 GMT
  • இந்த ஆண்டு திருச்செந்தூருக்கு செல்லும் முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
  • தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி முருகபக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பே மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஏராளமான முருக பக்தர்கள், அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பாத யாத்திரையாக புறப்பட்டனர். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு திருச்செந்தூருக்கு செல்லும் முருக பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டம் மற்றும் நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், அம்பை, சேரன்மாதேவி, முக்கூடல், மானூர், தேவர்குளம் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் நெல்லை வழியாக திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்கிறார்கள். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள் என ஆயிரக்கணக்கான பக்தர்கள் பச்சை நிற ஆடை அணிந்தும், பால்குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் பாத யாத்திரையாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபடுகின்றனர்.

மேலும் நெல்லை மாவட்டத்தின் தெற்கு பகுதி மற்றும் தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பல்வேறு பாதைகளில் பாதயாத்திரையாக திருச்செந்தூருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு நெல்லை வழியாக செல்லும் பக்தர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் அணி அணியாக கொக்கிரகுளம் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு வந்தனர். அலங்கரிக்கப்பட்ட லோடு ஆட்டோ, மினி லாரி போன்ற வாகனங்களில் முருகபெருமானின் உருவப்படம் மற்றும் சிலையை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்தனர். முருகபெருமானின் சப்பரத்துடன் பெரும்பாலான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.

அவர்கள் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சாலையோர நடைமேடை பகுதியில் தங்கி சிறிது நேரம் ஓய்வு எடுத்தனர். பின்னர் தாமிரபரணி ஆற்றுக்குள் சென்று புனித நீராடினார்கள். அங்கு உணவு தயார் செய்து சாப்பிட்டு விட்டு, திருச்செந்தூர் நோக்கி நடைபயணத்தை தொடர்ந்தனர். இவ்வாறு தொடர்ந்து பக்தர்கள் வந்து, புனித நீராடி சென்று கொண்டே இருந்தார்கள். இதனால் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதி நேற்று முருகபக்தர்கள் வெள்ளமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், ''தென்காசியில் இருந்து திருச்செந்தூர் வரை சாலை விரிவாக்க பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் சாலைகள் முழுவதுமே ஜல்லி கற்களாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் வெறும் கால்களால் பாத யாத்திரையாக செல்வதற்கு சிரமமாக உள்ளது.

பொங்கல் பண்டிகை, தைப்பூசம், மாசி திருவிழா உள்பட பல்வேறு விழா காலங்களில் திருச்செந்தூருக்கு பாத யாத்திரையாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, திருச்செந்தூர் முருக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதற்கு தனியாக பாதை அமைத்து தர வேண்டும். மேலும் நெல்லை கொக்கிரகுளத்தில் பக்தர்கள் வசதிக்காக அரசு சார்பில் மண்டபத்தை கட்டி தர வேண்டும். முதற்கட்டமாக தற்காலிக கழிப்பிட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்'' என்றனர்.

Tags:    

Similar News