வழிபாடு

சோனை கருப்பணசாமிக்கு மது பாட்டில்கள் படையலிட்டு வழிபாடு

Update: 2022-08-16 05:52 GMT
  • 1000த்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் காணிக்கையாக படையலிடப்பட்டது.
  • பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 75 ஆட்டுக்கிடா, 45 சேவல்கள் பலியிடப்பட்டது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரில் சுயம்பு சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாத திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடித்திருவிழா கடந்த மாதம் 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இதில் தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்து சென்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சனீஸ்வர பகவான் கோவிலின் உப கோவிலான சோனை முத்து கருப்பணசாமிக்கு மதுபான படையல் நடைபெற்றது.

இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது. பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்ட 1000த்துக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் படையலிடப்பட்டது. இதனை கோவில் பூசாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர் சோனை முத்து கருப்பணசாமியின் குதிரைக்கு கீழ் உள்ள சிறிய துவாரம் வழியாக மது பாட்டில்களை திறந்து ஊற்றி பூஜை செய்தனர்.

இரவு 8 மணிக்கு தொடங்கிய பூஜை நள்ளிரவு 12 மணி வரை நீடித்தது. அதனைத் தொடர்ந்து பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 75 ஆட்டுக்கிடா, 45 சேவல்கள் ஆகியவை பலியிடப்பட்டு பின்னர் அந்த இறைச்சியைக் கொண்டு அசைவ உணவு சமைக்கப்பட்டது. இந்த உணவு விடிய விடிய பக்தர்களுக்கு விருந்தாக வழங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சென்றனர்.

Tags:    

Similar News