வழிபாடு

செப்பறை அழகிய கூத்தர் கோவில் ஆனி திருவிழா கொடியேற்றம்

Published On 2022-06-27 08:37 GMT   |   Update On 2022-06-27 08:37 GMT
  • 4-ந்தேதி காலை 11.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
  • 5-ம் தேதி மதியம் 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா நடைபெறும்.

நெல்லையை அடுத்த ராஜவல்லிபுரம் கிராமத்தில் உள்ள செப்பறை அழகியகூத்தர் கோவில் சிவனாரின் பஞ்ச சபைகளில் தாமிரசபை திருத்தலம் ஆகும். மகா விஷ்ணு, அக்னி பகவான், அகஸ்தியர், வாமதேவரிஷி, மணப்படைவீடு மன்னன் ஆகியோருக்கு சிவபெருமான் நடனக்காட்சி கொடுத்த தலமாகும். இங்கு ஆண்டுதோறும் ஆனி திருவிழா, மார்கழி திருவாதிரை திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி கோவிலில் இந்த ஆண்டுக்கான ஆனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர் கோவில் கொடிமரத்தில் மேளதாளம் முழங்க கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு அபிஷேகம், பாராயணம், தீபாராதனை நடைபெறுகிறது. 7-ம் நாளான 2-ந்தேதி காலையில் உருகு சட்டசேவை நடைபெறுகிறது. அழகிய கூத்தர் சபையில் இருந்து விழா மண்டபத்துக்கு எழுந்தருள்கிறார். அங்கு சுவாமிக்கு சிவப்பு சாத்தி சிறப்பு தீபாராதனைகளும் வழிபாடுகளும் நடைபெறும். 3-ந்தேதி காலை 10 மணிக்கு வெள்ளை சாத்தி தரிசனமும், மாலை 5 மணிக்கு பச்சை சாத்தி தரிசனமும் நடைபெறுகின்றன.

4-ந்தேதி காலை 8 மணிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 11.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 5-ம் தேதி காலை 11 மணிக்கு மகா அபிஷேகம், மதியம் 1.30 மணிக்கு நடன தீபாராதனை, மதியம் 3 மணிக்கு அழகியகூத்தர் திருவீதி உலா வரும் வைபவமும் நடைபெறும். தொடர்ந்து அழகியகூத்தர் தாமிரசபைக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

Tags:    

Similar News