வழிபாடு

நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

சபரிமலையில் பக்தர்கள் வருகை 10 லட்சத்தை தாண்டியது: நெய் அபிஷேகம் செய்ய நீண்ட நேரம் காத்திருப்பு

Published On 2022-12-04 07:23 GMT   |   Update On 2022-12-04 07:23 GMT
  • சபரிமலை ஐயப்பன் கோவில் வருவாய் 5 மடங்கு உயர்வு
  • இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை 27-ந்தேதி நடக்கிறது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது.

இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்க நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் சபரிமலை வந்த வண்ணம் உள்ளனர்.

இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் கடந்த 2-ந் தேதி வரை கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியுள்ளது.

சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 18-ம் படி ஏறவும், நெய்யபிஷேகம் செய்கிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதால் கோவிலின் வருவாயும் கணிசமாக உயர்ந்துள்ளது.அப்பம் மற்றும் அரவணை விற்பனை, சிறப்பு வழிபாடு கட்டணங்கள் மூலமும் கோவிலுக்கு கூடுதல் வருவாய் கிடைத்துள்ளது.

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறந்து இப்போது 20 நாட்கள் ஆகிவிட்டது. இதில் முதல் 10 நாளில் மட்டும் கோவில் வருவாய் ரூ.52.55 கோடியாக இருந்தது.

இப்போது இந்த வருவாய் இன்னும் அதிகரித்து இருக்கும். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்னும் வெளியிட வில்லை. கடந்த ஆண்டு கோவில் வருவாய் முதல் 10 நாளில் ரூ.9.92 கோடியாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கோவில் வருவாய் 5 மடங்கு அதிகரித்து இருக்கிறது.

இதற்கிடையே சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது. இது தொடர்பாக கேரள ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

மேலும் நிலக்கல், பம்பையில் அரசு பஸ்களில் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தவும், கூடுதல் பஸ்களை இயக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்தும் நாளை அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசு போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News