வழிபாடு

சாமி சிலைகளுக்கு வரவேற்பு அளித்த போது எடுத்த படம்.

குமரியில் இருந்து புறப்பட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரம் சென்றடைந்தன

Published On 2022-09-27 04:39 GMT   |   Update On 2022-09-27 04:39 GMT
  • சாமி சிலைகளுக்கு பக்தர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
  • பூஜைகள் முடிந்த பின்னர் 7-ந்தேதி மீண்டும் குமரிக்கு புறப்படும்.

திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் கலந்து கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், குமாரகோவில் முருகன் மற்றும் பத்மநாபபுரம் தேவாரக்கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்வது வழக்கம். இந்த ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருவனந்தபுரம் செல்வதற்காக சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் கடந்த 22-ந் தேதி ஊர்வலமாக புறப்பட்டு பத்மநாபபுரம் வந்தடைந்தது. பின்னர் குமரி மாவட்ட சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு ஊர்வலமாக புறப்படும் நிகழ்ச்சி 23-ந் தேதி பத்மநாபபுரத்தில் நடந்தது.

இதையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் நடந்த உடைவாள் மாற்றும் நிகழ்ச்சியில் தமிழக, கேரள அமைச்சர்கள், அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் உடைவாள் முன் செல்ல யானை மீது சரஸ்வதி அம்மனும், பூ பல்லக்குகளில் குமாரகோவில் முருகன், சுசீந்திரம் முன்னுதித்த நங்கை ஆகிய சாமி சிலைகளும் ஊர்வலமாக புறப்பட்டன. ஊர்வலம் அன்று இரவு குழித்துறையில் தங்கியது.

குழித்துறையில் இருந்து புறப்பட்டு தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை வந்தடைந்தது. அங்கு கேரள போலீசார் சார்பில் சாமி சிலைகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து சாமி சிலைகள் நெய்யாற்றின்கரை கிருஷ்ணன்கோவிலில் தங்கின. நேற்று முன்தினம் காலையில் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7 மணியளவில் திருவனந்தபுரம் கரமனையை வந்தடைந்தது. அங்கு சாமி சிலைகளுக்கு பக்தர்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். அத்துடன் பூ பல்லக்கில் கொண்டு செல்லப்பட்ட குமாரகோவில் முருகன் சிலையை வெள்ளி குதிரை மீது அமர்த்தி பக்தர்கள் எடுத்து சென்றனர்.

பின்னர் சரஸ்வதிதேவி அம்மன் பத்மநாபசாமி கோவில் நவராத்திரி மண்டபத்திலும், முன்னுதித்த நங்கை அம்மன் ஆரியசாலை பகவதி அம்மன் கோவிலிலும், முருகபெருமான் செந்திட்டை பகவதி அம்மன் கோவிலிலும் கொண்டு செல்லப்பட்டது. அங்கு நேற்று முதல் வருகிற 5-ந் தேதி வரை நவராத்திரி பூஜைகள் நடைபெறுகிறது. பூஜைகள் முடிந்த பின்னர் ஒருநாள் நல்லிருப்பிற்கு பின்பு 7-ந் தேதி மீண்டும் குமரிக்கு புறப்படும்.

Tags:    

Similar News