வழிபாடு

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மருங்கப்பள்ளம் அவுஷதபுரீஸ்வரர் கோவில் குடமுழுக்கு

Update: 2022-08-16 07:15 GMT
  • பேராவூரணியில் உள்ள மருங்கப்பள்ளத்தில் உள்ளது பெரியநாயகி அம்மை உடனமர் அவுஷதபுரீஸ்வரர் கோவில்.
  • இந்த கோவில் குடமுழுக்கு அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி நடக்கிறது.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி வட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மருங்கப்பள்ளத்தில் பெரியநாயகி அம்மை உடனமர் அவுஷதபுரீஸ்வரர்(மருந்தீஸ்வரர்) கோவில் அமைந்து உள்ளது.

தஞ்சையை ஆண்ட இரண்டாம் சரபோஜி மன்னர் தனக்கு என்ன நோய் உள்ளது என்றே தெரியாமல் அல்லல்பட்டு வந்தார். அந்த நேரத்தில் அரண்மனை வைத்தியர் மன்னரிடம், மன்னரே! உங்களுக்கு தேவையான பச்சிலை மூலிகை மருந்துகளெல்லாம் கொடுத்து விட்டேன். ஆனாலும் தாங்கள் குணமடையவில்லை.

எந்தவித முன்னேற்றமோ, ஆரோக்கியமோ தெரியவில்லை எனவே நீங்கள் இறைவனைத்தான் வணங்க வேண்டும். உங்களது நோயை இனி இறைவனால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்று கைவிரித்து விட்டார்.

அதைக்கேட்ட மன்னர் அதிர்ச்சி அடைந்து செய்வதறியாது திகைத்தார். அப்படியென்றால் நான் எந்த கோவிலுக்கு செல்ல வேண்டும் என அரண்மனை ஜோதிடரிடம் மன்னர் ஆலோசனை கேட்கிறார். அரண்மனை ஜோதிடர் பிரசன்னம் பார்த்துவிட்டு மன்னா! இந்த திசையில் உள்ள கோவிலுக்கு செல்லுங்கள். அங்குள்ள சிவன் கோவிலில் அவுஷதபுரீஸ்வரர், மருந்தீஸ்வரர் என்ற பெயரில் அருளாட்சி புரிந்து வருகிறார். அவரை நீங்கள் வணங்கினால் உங்கள் நோய் குணமாகும் என கூறினார்.

இதனையடுத்து மன்னர் உடனடியாக கிளம்பினார். அந்த திருக்கோவிலுக்கு சென்று அங்கு இரவு தங்கி இருந்து விட்டு மறுநாள் காலை சிவபெருமானை அதாவது அவுஷதபுரீஸ்வரரை(மருந்தீஸ்வரரை) வணங்கிவிட்டு(அவுஷதம் என்றாலே மருந்து என்று பொருள்) பின்னர் புஷ்கரணி எனப்படும் அங்குள்ள திருக்குளத்தில் நீராடினார்.

தொடர்ந்து கோவிலை சுற்றியுள்ள ஒருசில பச்சிலைகள் மற்றும் மூலிகைகளை மனதிற்கு தோன்றியதை பறித்து உண்டார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பில் இருந்து வந்த சோர்வு, களைப்பு, இனம் தெரியாத நோய் உபாதைகள் எல்லாமே விலக ஆரம்பித்தது. இவை அனைத்தும் சிலமணி நேரங்களில் நடந்ததை பார்த்த மன்னர் ஆச்சரியப்பட்டார்.

8 கிலோ மீட்டர் தொலைவில்...

உடனடியாக அந்த பகுதியில் உள்ள நிலங்களையெல்லாம் அந்த கோவிலுக்கு எழுதி வைத்தார். அந்த நிலங்களில் இருந்து வரும் வருமானங்களை எல்லாம் கோவில் பராமரிப்பு பணிக்கு பயன்படட்டும் என கூறியதாக இக்கோவில் தலவரலாறு தெரிவிக்கிறது.

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி மையப்பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவில் மருங்கப்பள்ளம் என்ற ஊரில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆரம்ப காலத்தில் மருந்துப்பள்ளம் என இருந்த ஊர் நாளடைவில் மருவி மருங்கப்பள்ளம் என மாறியதாக வரலாறு கூறுகிறது.

கிழக்கு நோக்கி இக்கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இந்த கோவிலில் அம்பாள் பெரியநாயகி நான்கு திருக்கரங்களுடன் மேலே இருகரங்களில் தாமரை மலரை தாங்கி அருள்பாலித்துக்கொண்டிருக்கிறார்.

8-ந் தேதி குடமுழுக்கு

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் அடுத்த மாதம்(செப்டம்பர்) மாதம் 8-ந் தேதி(வியாழக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. யாகசாலை பூஜைகள் 5-ந் தேதி(திங்கட்கிழமை) தொடங்குகிறது. குடமுழுக்கு விழா பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

குடமுழுக்கு விழா பணிகளை திருப்பணிகுழுவினர், மருங்கப்பள்ளம்- குருவிக்கரம்பை கிராமத்தார்கள், மாசிமக உற்சவ நயினாங்குட்டி தேவர் கரைதாரர்கள், மகா சிவராத்திரி விழா உபயதாரர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News