வழிபாடு

ஈரோட்டில் செல்வ மாரியம்மன் கோவில் குண்டம் விழா: திரளான பக்தர்கள் தீ மிதித்தனர்

Published On 2022-06-30 04:56 GMT   |   Update On 2022-06-30 04:56 GMT
  • இன்று அம்மனின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது.
  • நாளை பகல் 12 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

ஈரோடு பெரியசேமூர் பொன்னிநகரில் பிரசித்தி பெற்ற செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குண்டம் மற்றும் பொங்கல் விழா கடந்த 21-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் இரவு கம்பம் நடப்பட்டது. 23-ந் தேதி பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

நேற்று முன்தினம் பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பக்தர்கள் காவிரிக்கரை சென்று தீர்த்தம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பிறகு கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டன. இரவில் குண்டம் பற்ற வைக்கப்பட்டது.

பக்தர்கள் இறங்குவதற்காக நேற்று காலையில் குண்டம் தயாரானது. கோவிலின் தலைமை பூசாரி குண்டம் இறங்கி தொடங்கி வைத்தார். அவரைத்தொடர்ந்து வரிசையில் காத்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவராக தீ மிதித்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றினார்கள். இதில் திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்தனர். மேலும் சிலர் தங்களது கைக்குழந்தைகளுடனும் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.

விழாவையொட்டி செல்வ மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலில் பொங்கல் விழா நடந்தது. இதில் பெண்கள் பலர் பொங்கலிட்டு அம்மனுக்கு படையல் வைத்து வழிபட்டனர். மாலையில் மாவிளக்கு பூஜை நடைபெற்றது. இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு கம்பம் எடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மதியம் 3 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், அம்மனின் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. நாளை (வெள்ளிக்கிழமை) பகல் 12 மணிக்கு நடக்கும் மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.

Tags:    

Similar News