வழிபாடு

மாங்குடி மகா மாரியம்மன் கோவில் திருவிழா தொடக்கம்

Update: 2022-06-25 05:32 GMT
  • 4-ந்தேதி பால்குடம் எடுத்தல், தீச்சட்டி எடுத்தலும், அம்மன் வீதி உலாவும் நடக்கிறது.
  • 13-ந்தேதி திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது.

லால்குடி அடுத்த ரெட்டி மாங்குடி கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன், செல்லியம்மன் கோவில் திருவிழாவை 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் புனித நீர் எடுத்து வந்து அய்யனாருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது. அதன்பின்பு காப்புக்கட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் ஒவ்வொரு நாளும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

முக்கிய நிகழ்ச்சியாக ஜூலை 4-ந்தேதி காலை பால்குடம் எடுத்தல், அலகு குத்துதல், தீச்சட்டி எடுத்தலும், இரவு அம்மன் பல்லாக்கில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. 5-ந் தேதி மாலை மாரியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், குடி விடுதலும், அன்று இரவு செல்லியம்மனுக்கு காப்பு கட்டு விழாவும் நடைபெறும்.

முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான 13-ந்தேதி காலை திருத்தேர் புறப்பாடும், கிடா வெட்டு நிகழ்ச்சியும், மாலையில் மாவிளக்கு பூஜையும் நடக்கிறது. 14-ந் தேதி செல்லியம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், 15-ந் தேதி மாலை செங்கமா முனிவர் சாமிக்கு மாவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Similar News