வழிபாடு

இயேசு சுகமளித்த நிகழ்வுகள்

Published On 2022-07-02 07:16 GMT   |   Update On 2022-07-02 07:16 GMT
  • இயேசு கிறிஸ்து தம் வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார்.
  • ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார்.

இயேசு கிறிஸ்து தம் பணி வாழ்வில் உடல் ஊனமுற்ற சிலரையும் அற்புதமாக குணப்படுத்தினார். கை சூம்பியவர் ஒருவருக்கும், கூன் முதுகு கொண்ட ஒரு பெண்ணுக்கும், காது வெட்டுண்ட பணியாளர் ஒருவருக்கும் இயேசு சுகமளித்த நிகழ்வுகளை இங்கு காணலாம்.

கை சூம்பியவர்

இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்றார். அங்கே கை சூம்பியவர் ஒருவர் இருந்தார். சிலர் இயேசுமீது குற்றம் சுமத்தும் நோக்குடன், ஓய்வுநாளில் அவர் அவரைக் குணப்படுத்துவாரா என்று கூர்ந்து கவனித்துக்கொண்டே இருந்தனர். இயேசு கை சூம்பிவரை நோக்கி, "எழுந்து, நடுவே நில்லும்" என்றார். பின்பு அவர்களிடம், "ஓய்வுநாளில் நன்மை செய்வதா, தீமை செய்வதா? உயிரைக் காப்பதா, அழிப்பதா? எது முறை?" என்று அவர் கேட்டார். அவர்களோ பேசாதிருந்தார்கள். அவர் சினத்துடன் அவர்களைச் சுற்றிலும் திரும்பிப் பார்த்து, அவர்களது பிடிவாத உள்ளத்தைக் கண்டு வருந்தி, கை சூம்பியவரை நோக்கி, "கையை நீட்டும்" என்றார். அவர் நீட்டினார். அவருடைய கை மீண்டும் நலமடைந்தது. (மாற்கு 3:1-5)

கூன் முதுகாளர்

ஓய்வுநாளில் இயேசு தொழுகைக்கூடம் ஒன்றில் கற்பித்துக்கொண்டிருந்தார். பதினெட்டு ஆண்டுகளாகத் தீய ஆவி பிடித்து உடல்நலம் குன்றிய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் சிறிதும் நிமிர முடியாதவாறு கூன் விழுந்த நிலையில் இருந்தார். இயேசு அவரைக் கண்டு அருகே கூப்பிட்டு, "அம்மா, உமது நோயிலிருந்து நீர் விடுவிக்கப்பட்டுள்ளீர்" என்று கூறி, தம் கைகளை அவர் மீது வைத்தார். உடனே அவர் நிமிர்ந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். (லூக்கா 13:10-13)

காதை இழந்தவர்

இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிட மகனைக் காட்டிக் கொடுக்கப் போகிறாய்?" என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?" என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர்களைப் பார்த்து, "விடுங்கள், போதும்" என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கினார். (லூக்கா 22:47-51)

Tags:    

Similar News