வழிபாடு

சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியதை படத்தில் காணலாம்.

சபரிமலையில் தரிசனத்துக்கு 8¾ லட்சம் பக்தர்கள் முன்பதிவு

Update: 2022-11-26 03:31 GMT
  • பக்தர்கள் முக கவசம் அணிய தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
  • பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகள் சபரிமலைக்கு பக்தர்களின் வருகை மிகவும் குறைவாக இருந்தது.

தற்போது மண்டல பூஜைக்காக கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் ஆன்லைன் முன்பதிவு முறையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். மேலும் நேரடியாக வரும் பக்தர்களின் வசதியை கருத்தில் கொண்டு உடனடி தரிசனத்திற்கான முன்பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளது.

சபரிமலை தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பக்தர்கள் தினமும் 8 மணி முதல் 10 மணி நேரம் வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதனால் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரம் 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. அதாவது மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு வந்தது. அதனை முன்கூட்டியே 3 மணிக்கு திறந்து தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

நடை திறக்கப்பட்ட நாள் முதல் நேற்றுமுன்தினம் வரை 3 லட்சத்து 84 ஆயிரத்து 106 பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்துள்ளனர். இவை தவிர உடனடி தரிசன முன்பதிவு மூலமாகவும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் வருகிற 30-ந் தேதி வரை சபரிமலை தரிசனத்திற்கு 8 லட்சத்து 79 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. உடனடி முன்பதிவையும் சேர்த்தால் நவம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் பக்தர்கள் சபரிமலையில் தரிசனம் மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 1.20 லட்சம் பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய முடியும். இதனால் வருகிற நாட்களில் மேலும் ஆயிரக்கணக்கானோர் முன்பதிவை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

இதற்கிடையே தொற்று நோய் பரவுவதை தடுக்க சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News