வழிபாடு
சாந்தநாத சாமி கோவில் நந்தி பகவானுக்கு தண்ணீர் அபிஷேகம்

சாந்தநாத சாமி கோவில் நந்தி பகவானுக்கு தண்ணீர் அபிஷேகம்

Published On 2022-05-14 04:36 GMT   |   Update On 2022-05-14 04:36 GMT
ஒவ்வொரு ஆண்டும் அக்னிநட்சத்திர காலத்தில் முதல் பிரதோஷம் வருகிற தினத்தில் இதுபோன்று நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் அக்னிநட்சத்திர காலத்தில் வெயிலின் தாக்கம் குறையவும், நல்ல மழை வேண்டியும் புதுக்கோட்டை சாந்தநாத சாமி கோவிலில் நந்தி பகவானுக்கு தண்ணீர் அபிஷேகம் செய்து, நந்தி பகவான் தண்ணீரில் இருக்கும் படி செய்வது வழக்கம்.

ஒவ்வொரு ஆண்டும் அக்னிநட்சத்திர காலத்தில் முதல் பிரதோஷம் வருகிற தினத்தில் இதுபோன்று நடைபெறுவது வழக்கமாக உள்ளது. அந்த வகையில் அக்னிநட்சத்திர காலத்தில் நேற்று முதல் பிரதோஷம் வந்ததில் சாந்தநாதசாமி கோவிலில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. வழக்கமாக பிரதோஷ காலத்தில் நடைபெறும் அபிஷேகத்தோடு, தண்ணீர் அபிஷேகமும் நடைபெற்றது. மேலும் நந்தி பகவானை சுற்றி தண்ணீர் நிரப்பப்பட்டது.

அதில் தாமரை பூக்களும், மலர்களும் விடப்பட்டன. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த தண்ணீர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை இருக்கும். தண்ணீரில் இருக்கும் நந்திபகவானை பக்தர்கள் தரிசிக்கலாம் என கோவில் அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News