வழிபாடு
சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை

சேலம் சுகவனேசுவரர் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2022-04-12 04:34 GMT   |   Update On 2022-04-12 04:34 GMT
வசந்த நவராத்திரி நிறைவு விழாவையொட்டி சேலம் சுகவனேசுவரர் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. சுமார் 10 ஆயிரம் பக்தர்களுக்கு அம்மன் உருவத்துடன் கூடிய செம்பு டாலர் இலவசமாக வழங்கப்பட்டது.
சேலம் டவுனில் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவிலில் கடந்த 1-ந் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. தினமும் மாலை 6.30 மணிக்கு சுகவனேசுவரர் மற்றும் சொர்ணாம்பிகை அம்மனுக்கு பூஜைகள் நடத்தப்பட்டது. மேலும், பக்தர்களால் அபிராமி அந்தாதி பாராயணமும், வீணை உள்ளிட்ட பக்தி இன்னிசை நிகழ்ச்சியும்நடந்தது.

இந்தநிலையில், வசந்த நவராத்திரி நிறைவு விழா நேற்று நடந்தது. காலையில் சுகவனேசுவரர் சுவாமிக்கு ருத்ரம் பாராயணம், தொடர்ந்து 108 சங்காபிஷேகம் நடத்தி வில்வார்ச்சனை நடந்தது. கோவிலில் மாலை 5 மணிக்கு கோமாதா பூஜையும், அதன்பிறகு 108 சிவனாடியார்களின் திருக்கைலாய வாத்தியமும் வாசிக்கப்பட்டது. பின்னர் கோவில் வெளி பிரகாரத்தை சுற்றி சிவனடியார்கள் வாத்தியங்களை இசைத்தவாறு ஊர்வலமாக வலம் வந்தனர். அப்போது, ஏராளமான குழந்தைகள் சிவன், பார்வதி, விநாயகர், லட்சுமி உள்ளிட்ட பல்வேறு கடவுள்களின் வேடம் அணிந்து வந்திருந்தனர்.

தொடர்ந்து சுகவனேசுவரர் சுவாமிக்கும், சொர்ணாம்பிகை அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் சொர்ணாம்பிகை அம்மன் உருவத்துடன் கூடிய சுமார் 10 ஆயிரம் செம்பு டாலர்கள் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News