வழிபாடு
தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.

தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டம்

Update: 2022-02-24 04:43 GMT
அரூர் அருகே தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர்களை இழுத்தனர்.
தமிழகத்தின் பிரசித்தி பெற்ற புன்னிய தலமான தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் அரூர்- திருவண்ணாமலை ரோட்டில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து அங்குள்ள தீர்த்தத்தில் புனித நீராடி சாமி தரிசனம் செய்வார்கள். இந்த கோவில் தேர்திருவிழா ஆண்டுதோறும் மாசி மாதம் நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கணபதி பூஜை மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா, சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை, சாமி திருவீதி உலாவும், சாமி திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும், வழிபாடும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் நேற்று நடந்தது.

இதையடுத்து சாமிகள் அலங்கரிக்கப்பட்டு கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு தேர்களில் ஏற்றப்பட்டன. முதல் தேரில் விநாயகரும், அடுத்ததாக பெரிய தேரில் தீர்த்தகிரீஸ்வரர் உடன் வடிவாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. 3-வதாக வடிவாம்பிகை அம்மன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர்களை வடம் பிடித்து இழுந்து வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளைந்த தானியங்களை தேர்கள் மீது தூவினர்.

அதேபோல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பொரிகடலை, நவதானியங்களை தேர் மீது தூவி நேர்த்திக்கடன் ெசலுத்தினர். விழாவில் அறநிலையத்துறை ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் சரவணகுமார், சம்பத்குமார் எம்.எல்.ஏ. மற்றும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தீர்த்தகிரீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி அரூர் வருவாய் கோட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.
Tags:    

Similar News